Home » Cricket, Fun, Headline, Tamil-தமிழ், அனுபவம், நகைச்சுவை

லெவன் காஜஸ்

28 June 2010 1,208 views 8 Comments

முப்பது வயதை தாண்டி கொஞ்சம் குடும்பப் பொறுப்பு வந்து விட்டாலே, பழைய கதைகளை அசை போடுவது வாழ்க்கையின் தின நியதிகளில் ஒன்றாகிவிடுகிறது.

இந்த அசைபோடல் எந்த சமயத்திலும் நிகழ்கிறது. பேப்பர் படிக்கும் பொழுதோ, காலை காஃபி குடிக்கும் பொழுதோ, குடும்பத்தினருடம் பேசும் பொழுதோ, கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுதோ, விளையாடும் பொழுதோ திடீர் திடீர் என மூளை பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்து அசை போட வைத்துவிடுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் குவைத்தில் என் ஃப்ளாட் வாசலில் பக்கத்து ஃப்ளாட்டு பையன்கள் கிரிக்கெட் விளையாடினார்கள். வேடிக்கை பார்த்த என்னையும் ”வாங்க அங்கிள்” என்று சேர்த்துக் கொண்டார்கள். அவர்களோடு கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடியதில் என் சின்ன வயதில் விளையாடிய கிரிக்கெட்டும், குறிப்பாக லெவன் காஜஸும் நினைவுக்கு வந்தது.

எழுபது, எண்பதுகளில் சென்னை கிரிக்கெட் விளையாடிய எவருக்கும் “காஜி” என்கிற வார்த்தை ரொம்ப பழக்கமான ஒன்றாக இருக்கும். காஜி இன்னும் பழக்கத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் எழுபதுகளில் எங்கள் தினசரி பேச்சில் காஜி வராமல் இருக்காது.

எந்த மொழியில் இருந்து சென்னை தமிழுக்கு வந்தது என்று அடுத்த செம்மொழி மாநாட்டில் கலைஞர் தலைமையில் வெளிநாட்டு அறிஞர் யாராவது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க தகுதியான பதம் இது. விக்கிபீடியாவில் சென்னைத் தமிழுக்கென ஒரு பக்கம் இருக்கிறது. பல சென்னை பதங்களை அறிவிக்கும் இந்த பக்கத்தில் காஜி இல்லை. மற்ற வார்த்தைகள் இருந்தாலும் காஜி இல்லாமல் இருப்பது விவேக்குக்கு கொடுத்தாலும் நாகேஷுக்கு கொடுக்காமல் விட்டுவிட்ட ”பத்மஸ்ரீ” பட்டத்துக்கு ஒப்பானது.

காஜி என்பது என்ன?

தெரு, பீச் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆடுவதே காஜி. ரொம்ப நேரம் அவுட்டாகாமல் பேட்டிங் ஆடியவன் ஆடி முடித்ததும் கக்க வியர்வையுடன் “செம்ம காஜி” என்பான். அவன் அதிக நேரம் ஆடினான் என்ற செய்தியை மற்ற நண்பர்கள் மூலம் அறிந்தவன் அவனை பார்த்ததும் முதலில் கேட்கும் கேள்வி “என்ன மச்சி, இன்னிக்கு செம்ம காஜியா?” என்பதே.

நாங்கள் பீச், தெரு கிரிக்கெட் என்று விளையாடும் காலங்களில், எங்கள் வட்டத்தில் இருந்து அடுத்த பெரிய வட்டமான லீக் கிரிக்கெட், பள்ளி கிரிக்கெட் என்று தாவியவர்கள் எங்களுக்கு பிரபலங்கள். அப்படிப்பட்ட பிரபலங்கள் எஸ்.ஆர். சம்பத் (அவனுக்க்கு இப்போது ஐம்பது வயசாகியிருக்கும் என்று யோசிக்கவே முடியவில்லை), அவனுடைய அண்ணன் எஸ்.ஆர். சீனிவாசன், டெக்னிக்கலாக விளையாடுவதில் சுனீல் காவஸ்கருக்கு அருகே எங்களால் வைக்கப்பட்ட சி.பி. ஸ்ரீதர் ஆகியோர் காஜியடிக்க சும்மாவே நாங்களெல்லாம் வியர்க்க விறுவிறுக்க பந்து வீசுவோம்.

“இன்னிக்கு ரெண்டு பந்து எஸ்.ஆர். சம்பத் வெல் போல் சொன்னாண்டா” என்பது மேன் ஆஃப் த மேட்ச்சுக்கு ஒப்பானது. அந்த பாராட்டுக்காக திருவல்லிக்கேணி குளத்தங்கரையில் அவனுக்கு நாள் முழுக்க பந்து வீசுவோம். எங்கள் நண்பர்களில் கொஞ்சம் சாமர்த்தியமானவர்கள் சம்பத் ரொம்ப நேரம் காஜிக்காகவே அடிக்கடி அப்படி சொல்வான் என்று சொல்வதுண்டு. ஆனால் மேன் ஆஃப் த மேட்ச் குறிக்கோளில் இருந்த என் போன்றவர்கள் அதை சட்டை செய்யமாட்டோம். பல மணி நேரங்கள் ஆளுக்கு ஒரு பந்து என்று கையில் வைத்துக்கொண்டு சம்பத்துக்கும், சீனிவாசனுக்கும் காஜி கொடுப்போம்.

பீச் கிரிக்கெட்டில் ஐபிஎல் போல பிரபலமானது கோடை விடுமுறைகளில் நடக்கும் “ட்ராஃபி”. ட்ராபி என்பதை பெரும்பாலும் நடத்தியது அப்போது திருவல்லிக்கேணி பகுதியில் தாதாவான எங்கள் பள்ளி சூப்பர் சீனியர் மாணவர் (மறைந்த) தமிழ்மணி. ட்ராபியை நடத்தினாலும், அப்போதே லலித்மோடி போல தனக்கெனவும் தமிழ்மணி ஒரு டீம் வைத்திருந்தார். அந்த டீமின் முக்கிய பௌலர் இந்த பதிவின் கெஸ்ட் பதிவாளர் திருவாளர் ஆனந்த். ட்ராபிக்களில் விளையாடிய இன்னொரு நண்பர் மஸ்கட்டில் என்னுடன் பணிபுரிந்த லஷ்மண். இவர் நல்லதம்பி தெரு டீமுக்கு விளையாடியிருக்கிறார். நான் விளையாடியது குளத்தங்கரை, ஹனுமந்தராயன் கோவில் தெரு, வெங்கட்ரங்கம் பிள்ளை தெரு ஆகியவை.

விளம்பரமே இல்லாமல், வாய்மொழியாகவே தமிழ்மணி ட்ராபி தொடங்குவது எங்களுக்கு தெரியவரும். உடனே நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ட்ராபி எண்ட்ரி கப்பம் கட்டுவோம். வீட்டில் பணம் கொடுக்க மாட்டார்கள்; அதற்கு நாங்கள் கையாண்ட உத்தி ஹிந்து பேப்பரின் வெள்ளி, ஞாயிறு சப்ளிமெண்டுகளை உருவிவைத்து அதை மட்டுமே பழைய பேப்பர் கடையில் போட்டு சேகரிக்கும் பணம். அப்போதெல்லாம் பேப்பர் கனமாகவே இருக்கும், ஞாயிறு சப்ளிமெண்ட் மற்ற நாளின் முழு பேப்பர் அளவுக்கு கனம் இருக்கும். ஒரு மாத சப்ளிமெண்ட் நான்கைந்து நண்பர்கள் சேகரித்தால் கணிசமான பணம் கிடைக்கும்.

பணம் சேகரித்து டீமை சேர்ப்பதற்கு முன் டீமுக்கு பெயர் விவாதிப்போம். குளத்தங்கரை, வெ.ர.பி. தெரு டீம்களுக்கு வைத்த பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் ஹ.ரா. கோவில் தெரு டீமுக்கு புல்லட் சி.சி. என்று பெயர் வைத்தது நினைவில் இருக்கிறது.

பல மாட்சுகள் விளையாடினாலும், தமிழ்மணி டீமுக்கு எதிராக மற்ற வலிமை குறைந்த டீம்கள் விளையாடிய மாட்ச்களுக்கு என்று ஒரு தனி விதி உண்டு. அதில் டாஸ் கிடையாது. ஒரு உடன்படிக்கை போல முதலிலேயே “டேய் நாங்கதான் பேட்டிங், நாங்க ஒரு இன்னிங்ஸ் ஆடிவிட்டு நீங்க ரெண்டு இன்னிங்ஸ் காஜடிச்சுக்கோங்க” என்று விடுவார்கள். அவர்களிடம் வேறு ரூல்ஸ் பேச முடியாததால், முதல் இன்னிங்ஸ் தமிழ்மணி டீம் விளையாடி போலிங் சிறுவர்களுக்கு தண்ணி காட்டுவார்கள். மூன்று நாள் இரண்டு இன்னிங்ஸ் என்ற கணக்கில் விளையாடிய இந்த மாட்சுகளில் ஒரு நாள் முழுக்க தமிழ்மணி டீம் விளையாடி ஒரு இன்னிங்ஸ்லேயே நல்ல காஜி அடிப்பார்கள். பின்னர் ஒரு முக்கால் மணி நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் போல புயல் வேக பந்து வீசி, ஷார்ட் லெக், ஸ்லிப் எல்லாம் வைத்து எங்களை இரண்டு இன்னிங்ஸும் சுருட்டுவார்கள் ஒன்றரை நாளுக்கும் குறைவாகவே மாட்ச் முடிந்துவிடும்.

இது போன்ற மாட்சுகளில் அதிகம் காஜி கிடைக்காது என்பதால், நன்றாக காஜடிக்க என்று நானும் என் தம்பி முரளியும் வடிவமைத்த கிரிக்கெட்தான் “லெவன் காஜஸ்”. இந்த லெவன் காஜஸ் நானும் அவனும் மட்டுமே விளையாடுவோம்.

ஆட்டக்களம் எங்கள் வீட்டின் நடை. மிக நீளமாக இருந்த வீட்டுக்கு இரண்டு நுழைவாயில்கள் இருந்தன. அதன் சவுகரியத்தால் நாங்கள் ஒரு நுழைவாயிலை முழுவதும் அடைத்து சாக்பீஸ் கொண்டு கதவில் ”போல்டு” வரைந்து விளையாடுவோம். பேட்ஸ்மனுக்கு அருகில் சுவரின் மூலையில் ஒரு ஸ்டுல் வைத்து அதில் ஸ்கோர் புத்தகம்.

லெவன் காஜஸ் இரண்டு டீம்களுக்கு இடையே நடக்கும். நான் ஒரு டீமும் என் தம்பி ஒரு டீமும் எடுத்துக்கொள்வோம். இதில் ரஞ்சி டீம்கள், டெஸ்ட் டீம்கள் தவிர போர்ட் ப்ரெசிடண்ட் லெவன் என்று எது வேண்டுமானாலும் இருக்கும். தமிழ்நாடு – கர்நாடகா, வெஸ்ட் இன்டீஸ் – இந்தியா, இங்கிலாந்து – இந்தியா, வட மண்டலம் – தென் மண்டலம் என்று சீசனுக்கு தகுந்த மாதிரி ஆடுவோம்.

இருவரும் டீம் செலக்ட் செய்யும் போது தற்போதைய ஆட்டக்காரர்கள் – டீம் என்று பார்க்காமல் பிடித்த ஆட்டக்காரர்கள் என்று தேர்வு செய்வோம். அதிலும் இந்திய டீம் செலக்ட் செய்யும்போது தாய் மண் பாசத்தால், செலக்‌ஷன் கமிட்டி அதிகம் பாராமுகம் காட்டிய தமிழ்நாடு வீரர்களை தேர்வு செய்து விடுவோம். ஸ்ரீகாந்த், வெங்கட்ராகவன், பரத் ரெட்டி, எஸ்.வாசுதேவன், எம். செந்தில்நாதன் போன்ற தமிழக வீரர்கள் எங்கள் இந்திய அணியில் எப்போதும் இருப்பார்கள்.

மாட்சுக்கு டாஸ் போட்டு பேட்டிங் ஆடும் பொழுது எங்களுக்கென்றே பிரத்யேகமான் ரூல்களும் போட்டுக்கொள்ளுவோம். பவுலிங் திருவல்லிக்கேணியில் மிகவும் பிரபலமான “அண்டர் ஆர்ம்ஸ்”. லெவன் காஜஸ் பற்றி மேலே தொடர்வதற்கு முன்னால் இந்த அண்டர் ஆர்ம்ஸ் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

எந்த இடத்திலும் சுலபமாக ஆடவே “அண்டர் ஆர்ம்ஸ்” கண்டுபிடிக்கப்பட்டது. வாசல்கால் இடிக்கும், குதித்து போடவேண்டும் போன்ற சிரமங்கள் இல்லாத பவுலிங் முறை அண்டர் ஆர்ம்ஸ்.

போடும் பந்து முட்டிக்கு மேல் எழ வாய்ப்பு குறைவு என்பதால் எத்தனை சிறிய இடத்திலும் அண்டர் ஆர்ம்ஸ் போட்டு விளையாட முடியும். ஓடி வந்து போட வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு சிறப்பு. இருந்த இடத்தில் இருந்தே கையையும், விரல்களையும் மட்டுமே உபயோகித்து வேகப்பந்து, பம்பர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், கூக்ளி எல்லாம் போட்டுவிடலாம். எங்கள் அனுபவத்தில் நாலடி நீளமே இருந்த இருந்த இடத்தில் ஒரு பக்கெட்டை போல்டாக வைத்து நானும் என் தம்பி முரளியும் விளையாடியிருக்கிறோம்.

இந்த அண்டர் ஆர்ம்ஸ் பந்து வீச்சில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள். இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் எங்கள் குழுவின் நிரந்தர உறுப்பினர் TAS என்று செல்லமாக அறியப்படும் டி.ஏ. சத்தியநாராயணன். என்னுடைய ஏறக்குறைய பதினைந்து வருட அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு கொஞ்சம் கூட பிடிபடாத பவுலர் TAS. வருவது லெக் ஸ்பின்னா, ஆஃப் ஸ்பின்னா, ஸ்ட்ரைட் பாலா என்று கொஞ்சம்கூட கண்டுபிடிக்க முடியாதபடி கிட்டத்தட்ட இப்போதைய அஜந்தா மெண்டிஸ் போல பந்து வீசுவார். இருந்த இடத்திலேயே நடனமாடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. பலமுறை அவருடைய உத்திகளை கற்றுக்கொள்ள அவரிடம் கேட்டும் “ஈசிடா” என்று சொல்வாரே தவிர சொல்லித்தர மாட்டார். (இன்றுவரை அவருடைய பவுலிங் டெக்னிக் மர்மமே! இதை படித்த பிறகாவது நான் விடுமுறைக்கு சென்னை சென்றால் சொல்லித்தருவாரா என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது)

மீண்டும் லெவன் காஜஸ்.

ஆட்டக்காரர்கள் தேர்வு சொன்னேன் இல்லையா? டாஸ் போட்டு மேட்ச் துவங்கியபின் நாங்கள் அமைத்த ரூல் படி, முதல் எட்டு ஓவர்கள் வேக பந்து வீச்சு அனுமதி உண்டு. அதற்கு பிறகு ஸ்பின் பவுலிங் மட்டுமே. பவுலிங் யார் போடுகிறார்கள் என்று முன்னமே சொல்லிவிட வேண்டும். ஆறு பந்துகளுக்கு பிறகு வேறு பவுலர். யார் போடுகிறார்கள் என்று சொல்லுகிறோமோ அவருடைய திறமைக்கேற்றபடி பவுலிங் செய்யவேண்டும். உதாரணத்துக்கு பிஷன் சிங் பேடி பவுலிங் செய்கிறார் என்றால் மெதுவான இடதுகை சுழல் பந்த வேண்டும். ரோஜர் பின்னி என்றால் மித வேகம். அதேபோல், பேட்டிங் செய்பவர் ரன்னுக்கேற்றபடி ஆள் மாற வேண்டும். கிரினீட்ஜ் விளையாடி ஒரு ரன் எடுத்தபின் பந்தை எதிர்நோக்க லாயிட் வந்தால் இடதுகை ஆட்டக்காரராக ஆட வேண்டும்.

ஆட்டக்காரர் திறமைக்கேற்பவும் விளையாட்டு நுட்பத்தை மாற்ற வேண்டும். கபில்தேவ், ஸ்ரீகாந்த் என்றால் ஒட்டி (டிஃபென்ஸ்) ஆடக்கூடாது. காவஸ்கர் ஆடலாம். நீளமான நடையில் போல்டு செய்த கதவு தவிர இன்னும் இரண்டு வாயில் கதவுகள் இருந்தன. ஒவ்வொன்றை தாண்டினாலும் ஒரு ரன் கணக்கு. அதை தாண்டி ஒரு மாடிப்படி இருக்கும். அதன் கைப்பிடியை தாண்டினால் நான்கு. முழுதாக தாண்டினால் ஆறு. ஆனால் நாலும், ஆறும் முதலில் பவுலரை பந்து தாண்டினாலே சாத்தியம் ஆகும். ஆறு அடிக்க பவுலரின் தலைக்கு அடிக்காவிட்டால் பவுலரிடமே கேட்ச் அவுட் ஆகிவிட வேண்டியதுதான். ஒவ்வொரு ரன்னுக்கு பிறகும் பேட்ஸ்மேனே திரும்பி ஸ்டுல் மேல் வைக்கப்பட்ட ஸ்கோர் புத்தகத்தில் ரன்னை பதிவு செய்ய வேண்டும்.

எந்த மேட்சுக்கும் நேரமோ, ஓவரோ வரையரை கிடையாது. மேட்ச் முடியும்வரை விளையாடுவோம். சில மாட்சுகள் வார இறுதியில் மட்டும் விளையாடி, விட்ட இடத்தில் துவக்கி ஒரு மாதம் கூட விளையாடியிருக்கிறோம். சில மாட்சுகள் இடையில் அபாண்ட சண்டை வந்து அபாண்டன் ஆகியிருக்கின்றன. சில அபாண்டன் ஆன மேட்சுகளை சமாதான உடன்படிக்கைக்கு பின் திரும்பவும் தொடர்ந்து ஆடியிருக்கிறோம்.

இந்த மாட்சுகளில், எங்களுக்கு பிடித்த ஆட்டக்காரர்கள் ஆடுகையில் தனிக் கவனம் கொண்டு விக்கெட் கொடுக்காமல் ஆடி ரன் குவித்திருக்கிறோம். இப்படி ஆடியதில் வெங்கட், ஸ்ரீகாந்த், கபில்தேவ் போன்றவர்களை சென்சுரி, டபிள் சென்சுரியும் அடிக்க வைத்திருக்கிறோம்.

சில சமயம் நாங்கள் அடித்த ஃபோர்களும், சிக்சர்களும், சண்டை நேரங்களில் பேட்டாக பயன்பெற்ற பரீட்சை அட்டைகளும் குடித்தனக்காரர்களை தாக்கியிருக்கின்றன. ஆனாலும், நட்பு, சகஜ பாவத்தால் அவர்கள் அதை பெரிதாக்கியதில்லை.

இப்பொதைய ஃப்ளாட் கல்சரில், அசோசியேஷன் கட்டுப்பாடுகளில் வீட்டுக்குள் கிரிக்கெட் வழக்கொழிந்து விட்டது. தெருக்களிலும், பீச்சிலும், பெரிய க்ரவுண்டில் இரண்டு பக்கம் விக்கெட், பாதுகாப்பு கவசங்களுடன் வெள்ளை சீருடை அணிந்து பல மேட்சுகள் ஆடியிருந்தாலும் இந்த லெவன் காஜஸ் கொடுத்த சந்தோஷத்துக்கு இணையில்லை.

Headline photo courtesy http://chennaidailyfoto.wordpress.com – please do check out the original photo post

Readers also liked

8 Comments »

  • T.P.Anand said:

    நல்ல பதிவு.

    நானும் மெரினா கடர்கரையில் பல வருடங்கள் “ட்ராபி” விளையாடியவன். ஒரு வருடம் நான் “BEST BOWLER” பட்டம் பெட்றேன். பரிசளிப்பு விழா தமிழ்மணியின் வீட்டு மொட்டைமாடியில் நடந்தது. அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் திரு.L.C.Rangan- இந்து உயர் நிலை பள்ளியின் மூத்த விளையாட்டு ஆசிரியர். எனக்கு அவர் சான்றிதழ் வழங்கிய நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

  • Karthik said:

    arumai. kaajila over kaaji teriuma./ correcta laast ball single eduthu next over adrathu

  • Lakshman said:

    Pramadam Murthy Sir. Feeling as if coming from one of the “Trophy” matches played at “Semman” or Valluvar statue pitch.

  • triplicani (author) said:

    Karthik,

    Last ball single gaaji is something special. Thanks for recalling it…

  • triplicani (author) said:

    Lakshman Sir,

    Those are great days! I think the current days boys are more in front of TV and computers. I guess, beach cricket is also now gone away, what with all beautification.

    I will write one article exclusively on beach cricket.

  • TAS said:

    Hi Murthy,

    The article brought back nostalgic memories of street cricket and of course cricket at the beach braving the hot hot summer of Chennai. Remember Rajappa’s team? Its a pity that cricket at the beach has been banned. Met SR (Senior) after a very long time. He is currently with Central Excise department and SR Sampath is employed with Southern Railway and till a few years back was playing in the TNCA Division matches.

    Thanks for the nice article and some nice things on me !!!!

  • Sampath said:

    Dear Sathya

    Very good one bringing out the contemporary culture that prevailed those days. The pitches were identified with the statues and thus there Barathiyar, Kannagi and Barathidasan. Sometimes, teams would land up at wrong pitch and get censured for that.

    Coming back to Gaji, it was a pronounced term everywhere street cricket was played. There were days when one team would play to its heart’s content and when we eagerly await our turn – there would be no match for umpteen reasons like lost ball, day of the match getting completed, opponents not turning up or simply threatening us with dire consequences if we insisted on playing. On such occasions, the team would stand round the opponents and shout ‘gaji kodukka kadhiyille’ which was one supreme form of avamanam.

    I used to play for Vasu team of Mahatmaji seva sangam which consisted of many players who worked in Aavin boothes those days and the start of the match would depend on the milk van collecting the empty bottles. For the uninformed, aavin was almost monopoly source of milk those days and milk would come in glass bottles with aluminium tops. These were in crates. Vasu team uniquely would count runs as 2 crate 4 bottles which was in effect 44 (2 x 20 + 4) – none of them were proficient in maths. Can write a whole volume on the run counting methodology (bongus) adopted by various teams. We had Flute Ravi who was a great flautist, would turn up very early in the match expecting his gaji.

    Very nostalgic indeed. There was the funny Galla Sridhar and Padhu. Once Nanni and Padhu shot out the Sidha team consisting of many starts for a paltry 11. One more person much feared in later days, was the frail looking Sharma (G Parthasarathi) of West tank Sq.

    Appreciate your recapping all the events and the fun in description. Wishing you lot more of writing
    - Your classmate who does not remember playing any cricket match with you.

  • அரவிந்தன் said:

    லாஸ்ட் மேன் காஜி,ஓசி காஜி எங்கள் பகுதியில்(மிண்ட்) பிரசித்த பெற்ற வார்த்தைகள்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.