Home » Featured, Headline, Photo post, Tamil-தமிழ், நகைச்சுவை

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

25 June 2010 1,424 views 2 Comments

தொப்பிகள் பலவிதம் உண்டு.  அடுத்தவரை பேச்சில் மயக்கி நமக்கு சாதகமான வேலைகளை செய்யவைப்பதையோ, பொய்யை உண்மையென நம்ப வைப்பதையும் கூட தொப்பி போடுவது என்று வழக்கில் சொல்லுவதுண்டு.  இவை அறிவிப்பில்லாமல், அணிவிக்கப்படுவது தெரியாமல் அணிவித்துக் கொள்ளும் தொப்பிகள்.  இந்த தொப்பிகளை “குல்லாய்கள்” என்றும் சொல்வதுண்டு.

ஆனால், இந்த வலையில் நான் அணிவிக்க இருப்பது அணியும் குல்லாய்களை மட்டுமே.

வடநாடுகளில் பிரபலமானது காந்தி குல்லாய்.  இந்த குல்லாயை அணிந்த காந்தி புகைப்படத்தை பார்த்த ஞாபகம் எனக்கு இல்லை. நேருதான் இந்த குல்லாயை அணிவார்.   இந்திரா முதல் (வடேராவை திருமணம் செய்துகொண்டாலும்) பிரியங்கா, ராகுல் வரை காந்தியாகி மக்கள் தலையில் காந்தி குல்லாய் போட ஆதிக் காரணம் நேரு, காந்தி குல்லாய் போட்டுக்கொண்டதுதானோ என்று தோன்றுகிறது. 

பல வட இந்திய அரசியல்வாதிகளும், கட்சி வித்தியாசம் பாராமல், காந்தி குல்லாய் அணிகிறார்கள். அவர்களெல்லாம் காந்தியவாதிகள் என்று சொன்னால், அவர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். காந்தி குல்லாய் போட்டு கொஞ்ச மாதங்களுக்கு முன் கொஞ்சியதில் மிஞ்சியதால் வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய அகாந்தியர் என்.டி.திவாரி.

வடநாட்டில், குறிப்பாக பீகார், உ.பி.யில் சாதாரண மக்களும் கா.கு. போட்டுக் கொள்கிறார்கள்.  பம்பாயின் டப்பாவாலாக்களின் யுனிஃபார்மில் காந்தி குல்லாய் உண்டு.  வித்தியாசம், அவர்கள் குல்லாய் போட்டுக் கொள்கிறார்கள் யாருக்கும் போடுவதில்லை.

பழங்காலங்களில் நாட்டை ஆண்ட மன்னர்களும், தளபதிகளும் அணிந்த கிரீடங்களும் தொப்பி வகையை சார்ந்தவையே. அப்படி பார்த்தால், நம் கடவுள்களும் தொப்பி அணிந்து கொண்டவர்களே. மக்களுக்கு குல்லாய் போட்டு ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் பல அரசியல்வாதிகள், ஆண்டவனுக்கே போடும் குல்லாய்கள் இந்த கிரீடங்கள் என்று சொல்லலாம்.

கிரிக்கெட் வீரர்கள் முதன் முதலில் டெஸ்ட் மேட்ச், ஒருநாள் கிரிக்கெட்டில் கன்னி கழியும் போது குல்லாய் வென்றதாக சொல்வதுண்டு. குழு தேர்வு பிடிக்காத ரசிகர்கள், குழுவில் தங்களுக்கு பிடிக்காத வீரர்கள் குல்லாய் வெல்லாமல் வாங்கிவிட்டதாக பேசுவதுண்டு. இப்படிப்பட்ட வீரர்கள் வாங்கும் குல்லாய், ”போட்டு, வாங்கும்” முறையில் பெற்றவை என்று நானும் தெருமுனையில் நின்று பேசியிருக்கிறேன். இப்படி போ.-வா. வீரர்கள் சரக்கு குறைவால் ஓரிரு குல்லாய்களுக்கு மேல் பெறாமல் டிவி திரையிலிருந்து மறைந்து விடுவார்கள்.

உண்மையிலேயே தகுதியில் குல்லாய் வென்ற பல வீரர்கள் பின்னாளில் புகழ் பெற்று, அவர்களின் குல்லாய்களை அதிக விலை கொடுத்து வாங்கும் ஆர்வலப் புரவலர் உலகெங்கும் உண்டு. டான் பிராட்மெனின் குல்லாய்கள் இதில் ரொம்ப பிரபலம். (தலை வியர்வை நாற்றம் போக துவைத்திருப்பார்களா தெரியவில்லை).

அனில் கும்ப்ளே பத்துக்கு பத்து எடுத்தபோது போட்ட குல்லாயை கடைசி வரை கழட்டாமல் அதிர்ஷ்ட நம்பிக்கையில் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் வரை அணிந்து கொண்டிருந்தார்.

கிரிக்கெட் வீரர்களில் பனாமா குல்லாய் என்கிற ஹாட் ரக குல்லாய் பிரபலம். ஆஸ்திரேலிய வீரர்கள் இதை அதிகம் அணிவதில்லை. இந்திய வீரர்களில் இந்த ரக குல்லாய் அதிகம் அணிந்தவர்கள் சுனீல் காவஸ்கரும், வழுக்கை முழுக்க மறைக்க கிர்மானியும். இதில் காவஸ்கர் கொஞ்சநாள் வெள்ளை மட்டுமில்லாமல் பிரவுன் குல்லாயும் அணிந்திருக்கிறார். இது போன்ற பிரவுன் குல்லாய் அணிந்த இன்னொரு வீரர் மேற்கிந்திய துவக்க ஆட்டக்காரர் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ். இந்த குல்லாயில் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் ஷான் பொல்லாக், ஆலன் டொனால்ட், இங்கிலாந்தின் டேவிட் கோவர் ஆகியோர்.

டென்னிஸ் வீரர்கள் வென்ற சுதியில் குல்லாய்களை ரசிகர்கள் பக்கம் தூக்கி வீசுவது உண்டு. கால்ஃப் வீரர்கள் அணியும் குல்லாய்கள் தமிழ் கதாநாயகர்களிடம் பிரபலம். கால்ஃப் குல்லாய், கருப்பு கண்ணாடியுடன் அணிந்து கமலஹாசன் பே என்று காலை விரித்தபடி கண்ணாடிக்கு பின்னாடியிருந்து காமப்பார்வை பார்க்கும் சிகப்பு ரோஜாக்கள் பட விளம்பரத்தட்டியை அண்ணா கை காட்டியதால் மவுண்ட்ரோட்டில் பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு தமிழக இளைஞர் பட்டாளமே நாய் காலர் சட்டையும், கால் மூடிய பெல்சிராயும், சி.ரோ. குல்லாயும் அணிந்து நடந்ததை பஸ்ஸிலிருந்து பார்த்திருக்கிறேன். இந்த படம் வந்து ரொம்ப நாளானாலும், படத்தில் உபயோகித்த குல்லாயை பாரதிராஜா பத்திரமாக வைத்திருந்து, சில வருடம் முன்பு கண்களால் கைது செய்யிலும் “கமல் அணிந்த குல்லாய்” என்று சொல்லி வசீகரனை உபயோகிக்க வைத்தார்.

தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ரொம்ப பிரபலமாக தெரிந்த ஒரு குல்லாய் வெள்ளை ஃபர் குல்லாய்.   எம்.ஜி.ஆர். அணிந்தது. குல்லாய் இல்லாத எம்.ஜி.ஆரை நினைக்கவும் முடியாது. தமிழக / சென்னை வெயிலில் அதை எப்படி அவர் 24 மணி நேரமும் அணிந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமான ஒன்று. என்னதான் பொன்மனச்செம்மலாக இருந்தாலும் வியர்த்திருக்காதா? (”முள் முடியும் சிலுவையும், என்னதான் ஏசுவாய் இருந்தாலும் வலிக்காமலா இருந்திருக்கும்” என்கிற அற்புத கவிதை நினைவுக்கு வருகிறது).

தொப்பியால் அடையாளம் அமைத்துக்கொண்ட இன்னொருவர் ஆங்கிலம் சிறிதும் கலக்காத எளிமையான கல்கண்டு தமிழில் துப்பறியும் கதைகளை எழுதிய தமிழ்வாணன். அவருடைய கதைகளில் வெளிநாட்டவர்களும் அழகுத் தமிழிலேயே பேசுவார்கள்.  தமிழில் எழுத விரும்புகிறவர்கள் அவசியம் தமிழ்வாணனை படிக்கவேண்டும். சுஜாதாவின் கணேஷ் – வசந்த் போல சாகாவரம் பெற்ற கதாபாத்திரம், தமிழ்வாணனின் சங்கர்லால்.  தமிழ்வாணனின் வருணனைகளை கொண்டு சங்கர்லாலை உருவகபடுத்தி பார்த்தால் அன்பே வா எம்.ஜி.ஆர் நினைவுக்கு வருவார். தமிழ்வாணனின் அடையாளமே குல்லாய், கருப்புக்கண்ணாடி, ஸ்கார்ஃப். தமிழ்நாட்டின் மற்றொரு கழட்டா குல்லாய் மனிதர் பாலு மகேந்திரா.

இஸ்லாமியர்களின் உடை கோட்பாடுகளில், குல்லாய் ஒரு முக்கியமான அங்கம்.  அதிலும் பலவகைகள் இருக்கிறது. ஓமனில் இருந்தபோதுதான் அதில் இருக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளும், அதன் மலைக்க வைக்கும் விலையும் தெரியவந்தது.

பாங்காக்கில் சீக்கியர் நடத்திய நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவர்கள் நேரத்தை மிச்சப்படுத்த ரெடிமேடு டர்பன்களை குல்லாய் போல் அணிவதைப் பார்த்திருக்கிறேன். சீக்கிய நண்பர்களுடன் ஆடிட்டுக்கும் அகமதாபாத் சென்று ஒரே அறையில் இருந்தபோது அவர்கள் உண்மையான டர்பனை பிரித்து அணிவதைப் பார்த்து “இத்தனை நீளமா?” என்று மலைத்து இருக்கிறேன். அந்த சிறிய அறைக்குள் ஒருவர் பிடித்துக்கொள்ள இன்னொருவர் அதை லாவகமாக மடித்து அணிந்தது இன்னும் கண்ணிலேயே இருக்கிறது. இத்தனை நீள துணியை தலையில் வைத்துக்கொண்டு இவர்களுக்கு எப்படி தலைவலி வராமல் இருக்கிறது என்று ஆடிட் தலைவலி போக அமிர்தாஞ்சன் தடவிக்கொண்டே யோசித்திருக்கிறேன்.

திருப்பதி, பழனி திவ்விய தேசங்களில் மொட்டை போட்டவர்கள், மொட்டை போட்ட கையோடு குல்லாய் தேடுவார்கள். நாம் எல்லோருமே எப்போதாவது ஒருமுறை மொட்டை போட்டிருப்பதால் வீட்டுக்கு ஒரு தொப்பியாவது வாங்கியிருப்போம் என்று நினைக்கிறேன். யோசித்துப் பார்த்தால், குல்லாய் வியாபாரம் ஒரு ஆல் சீசன் வியாபாரம் என்று தோன்றுகிறது.

என்னுடைய அப்பாவும் ஒரு குல்லாய் வைத்திருந்தார். எத்தனை சொன்னாலும் கேட்காமல் ஆட்டோ பிடிக்காமல், பிடிவாதமாக அந்த குல்லாயை அணிந்து கொண்டு சென்னை வெயிலில் எத்தனை தூர பஸ் ஸ்டாண்டுக்கும் நடந்து போயிருக்கிறார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் குல்லாய்கள் உலக பிரபலம். அவரை போல அழகாகவும், விதவிதமாகவும் ஹாட் அணியும் பெண்கள் உலகிலேயே இல்லை என்று சொல்கிறார்கள்.

ஹாட் ரக குல்லாய்கள் ஹாலிவுட் படங்களில் அதிகம் பார்க்கக்கிடைக்கின்றன. மிகவும் பிரபலமான ஹாட் ஹாரிசன் ஃபோர்ட் இந்தியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு அணிந்தது. சவுக்கும், ஹாட்டும் இந்தியானா ஜோன்ஸின் அடையாளம். ரொம்ப நாளைக்கு பிறகு வந்த ”Indiana Jones and the Kingdom of Crystal Skull” படத்தில் ஹாட்டுக் காட்டிதான் ஹாரிசன் ஃபோர்டுக்கு கட்டியம் சொன்னார்கள்.

வெஸ்டர்ன் கௌபாய் கதாபாத்திரங்கள் ஹாட்டும், சுருட்டும் இல்லாமல் முழுமை பெறாது. மால்பரோ சிகரெட் மனிதன் அறியப்படுவதும் கௌபாய் ஹாட்டு போட்டே. நம்ம ஊரில் ஜாக்கி ஷராஃப் கௌபாய் ஹாட் அணிந்து பெண்களை (சிகரெட் விளம்பரத்தில்) ஹாட்டாக்கியிருக்கிறார்.

ரொம்ப நாளைக்கு முன்னால் தமிழ்நாட்டில் வெள்ளம் வந்து வெள்ள நிவாரணம் என்று பல நாடுகளிலிருந்து உடைகள் வந்து குவிந்தன. அப்போது நான் எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்தேன். கொடுத்து முடிந்தும் வடியாத நிவாரணத் துணிகளை சமூகசேவை நிதிக்கென விற்பனைக்கு போட்டிருந்தார்கள். அப்பா அழைத்து போயிருந்தார். எத்தனையோ சட்டைகள், ஸ்வெட்டர்கள், க்ளவுஸ்கள் என்று இருந்ததில் என் உள்ளத்தை உடனே கவர்ந்தது ஒரு பிரவுன் நிற ஹாட் ரக உல்லன் குல்லாய். மனதுக்குள்ளேயே அதை தலையில் அணிந்து பார்த்து அதை போட்டுக்கொண்டு பீச்சில் ஸ்டைலாக கிரிக்கெட் விளையாடுவதாக உருவகப்படுத்தி பார்த்து, பிடிவாதமாக அதை வாங்கினேன்.

ஒரு பத்து நாள் அதை பீச் கிரிக்கெட்டில் அணிந்து ஸ்டைல் காட்டியவனுக்கு விதி இன்னொரு கிரிக்கெட் மாட்ச் மூலமாக விளையாடியது. இப்போது புது சட்டமன்ற கட்டிடம் இருக்கும் அரசு விருந்தினர் தோட்டத்தில் முன்பெல்லாம் கிரிக்கெட் விளையாடுவோம். என் வகுப்பு நண்பர்கள் அதில் ஒரு மாட்ச் போட்டு “வா மச்சி” என்று கூப்பிட்டார்கள். பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்த குல்லாயை போட்டுக்கொண்டு மாட்சுக்கு போனேன். என் டீம் காப்டனான பல வருஷம் எட்டாவது பெயிலான குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) “தொப்பி நல்லாயிருக்கே, குடு” என்று டாஸ் போடுவதற்கு வாங்கிப்போனான். மாட்ச் முடியும் வரையும் முடிந்த பின்னாலும் கொடுக்கவில்லை. கேட்டேன், மாட்ச் தோல்வி கோபமும் சேர்ந்து ஃபெயில் பையனின் முரட்டுத்தனத்துடன் “த்தா ப்போடா” என்றான். அப்பாவிடம் சொல்லி அவர் கேட்டு அவரையும் அடித்துவிடுவானோ என்று பயந்து அப்பாவிடம் சொல்லாமலும், அவனிடம் அதற்கு பிறகு கேட்காமலும் விட்டுவிட்டேன். இன்று வரை குமார் பறித்துக் கொண்ட தொப்பியின் ஏமாற்றத்தை இன்றுவரை என் உள்ளத்தில் அணிந்திருக்கிறேன். குறிப்பு: குமாரின் உண்மையான பெயரை எழுதாதன் காரணம் அடிக்கு பயந்தல்ல; உண்மையான பெயர் மறந்துவிட்டது :)

ஒரு மாதம் முன்பு குடும்பத்துடன் அரபு இந்தியர்களின் வார இறுதி பொழுதுபோக்கான லூலூ ஷாப்பிங் செண்டர் சென்றிருந்தேன். உடைகள் வாங்கிக்கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது ஒரு வெஸ்டர்ன் ரக தொப்பி. இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் ஸ்டில்களை பார்த்து பழைய தொப்பி நினைவுகள் வர, உடனே வாங்கிவிட்டேன்.

இ.கோ.மு.சி.க்கு பின் இது மாதிரி தொப்பிகளும், உடையும் ஃபேஷனுக்கு வரலாம் என்ற கணிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் வீட்டு அறை வரலாற்றிலேயே முதன் முதலாக என் கடைசி மகன் அக்‌ஷையை மாடலாக்கி சில படங்களை எடுத்தேன். என் பாலுமகேந்திரா கனவுகளை மதித்து அக்‌ஷையும் எனக்காக விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு போஸ் கொடுத்தான். நான் எடுத்த படங்கள் கீழே. எப்படி? இரும்புக்கோட்டை முரட்டு சிங்கக்குட்டி போல இருக்கிறானா?

Readers also liked

2 Comments »

  • என். சொக்கன் said:

    நல்ல கட்டுரை. ஹாட்ஸ் ஆஃப் டு யூ!

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

  • Sampath said:

    Dear Sathya

    Nalla kullai pottai. Incidentally after a very long time, saw this movie and liked it very much. Very good neat comedy – perhaps a bit lengthy – Sampath

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.