சிலிர்த்தெழுந்தது வங்காள புலி
”தென்னாப்பிரிக்கா சென்று வெற்றியுடன் திரும்பி வரும் அருமை அண்ணன் ஐபிஎல் அவர்களே, டிக்கட் வாங்க வழியில்லாததால், நீ இருக்கும் தொலைக்காட்சி நோக்கி வணங்குகிறேன்” என்று வெளிநாடு சென்று திரும்பி வரும் பிரபலத்தை வரவேற்கும் தமிழ் கலாசார பண்புடன் ஐபிஎல் கண்மணிகள் தமிழகமெங்கும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஆனால் தென்னாப்பிரிக்கா சென்ற ஐ பி எல் திரும்பி விட்டது. கொண்டாட்டம் துவங்கிவிட்டது. 45 நாட்களுக்கு 100 சதவிகிதம் ஆண்களையும், 33 சதவிகிதம் பெண்களையும், பிறந்த, பிறக்காத குழந்தைகளையும் டி.வி. பெட்டிக்கருகில் கட்டிப்போட்டு இந்த ஃபோர் அண்ட் சிக்சர் தோரண விழாவை வேடிக்கைப் பார்க்க வைக்கப்போகிறது.
சபரிமலைக்கு போல பல ஆண்கள் 45 நாட்களுக்கு மதியம் மூன்று மணிமுதல் இரவு 12 மணிவரை சோஃபா தாண்டா விரதம் இருக்க போகிறார்கள். சீரியல்கள் ஆஃப் ஆகும் அபாயம் இருப்பதால், வீட்டில் டாடா ப்ளஸ்ஸோ, இரண்டு டிவி பெட்டிகளோ இல்லா இல்லம் இல்லாள் இல்லா இல்லம் ஆகக்கூடும் (கலைஞர் தயவில் தமிழ்நாட்டில் இந்த கவலையோ, அதிருஷ்டமோ இருக்காது. (கவலை (அ) அதிருஷ்டம் – மனைவி அமைந்தது இறைவன் கொடுத்த வரமா இல்லையா என்பதை பொறுத்தது என்பதை நீங்களே பகுத்தறிந்து கொண்டுவிடுவீர்கள் ஆனாலும், மூட நம்பிக்கை நம் சமுதாயத்தில் இருப்பதால் வா.ப.தோ.உ.கொ.)
இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என்று நினைப்பவர்கள், இந்த பதிவை டி20 என்றில்லாமல், 50க்கு 50 என்ற எண்ணத்துடன் வாசிக்க யோசிக்கவும். கமல் மொழியில் :கட்சீல வண்டனா” என்று முக்கிய பகுதிக்கு வந்துவிடுவேன்.
சென்ற தெ.ஆ. ஐபிஎல் முதல் இன்று வரை கொஞ்சம் கூட திருந்தாமல் இன்னும் என் பதிவுகளை படிப்பவர்களுக்கு, வரிந்து கட்டிக்கொண்டு நான் பதிவு மழை சொரிந்தது ஞாபகம் இருக்கும். ஒரு மேட்ச் விடாமல் எழுதிவிடவேண்டும் என்று ஆரம்பித்து, நானும் என் அன்பு இளவல் மணல்கயிறு விஜயசாரதியும் எழுத உட்கார்ந்ததில் எழுந்திருக்க முடியாமல் தவித்துப்போனோம்.
புத்தி கொள்முதலால், இந்த முறை நான் எல்லா போட்டிகளையும் பற்றி எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு பிடித்த ஐபிஎல் அணிகள் விளையாடும் போட்டிகளை மட்டும் எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
எனக்கு பிடித்த ஐபிஎல் அணிகளை ஒன்று, இரண்டு என்று வரிசை படுத்தி, எதனால் என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டு பாடினால், 1. சென்னை சூப்பர் ராஜாக்கள் (இது நம்ம ஊரு மச்சி), 2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இளவரசர் கங்கூலி), 3. மும்பை இந்தியர்கள் (சாம்ராட் சச்சின்), 4. தில்லி பிசாசுகள் (முல்தான் சுல்தான்), 5. பெங்களூர் ராஜ பந்தயர்கள் (இந்திய பெருஞ்சுவர்), 6. பஞ்சாப் அரசர்கள் (ராஜா இளவரசர்), 7. டெக்கான் முன்னேரர்கள் (கில்லி, ச்சும்மா அதிருமில்ல), 8. ராஜஸ்தான் ராஜங்கர்கள் (”நான் போடறது பந்து இல்ல, பம்பரம்” – வார்னே), என்று வரும்.
என்னடா, எட்டு அணி பெயர்களையும் எழுதிவிட்டானே என்று பார்க்கிறீர்களா, மேட்ச் பார்த்துவிட்டு சாய்ஸில் விடலாம் என்று இருக்கிறேன்.
********
பிடித்த அணி வரிசையில் கொல்கத்தா இருப்பதாலும், முதல் மேட்ச் என்பதாலும், வெள்ளிக்கிழமை விடுமுறைநாளில் இருந்ததாலும், இந்த மேட்ச் பற்றி எழுத சாய்ஸில் எடுத்துக் கொண்டேன் என்று நேற்று மேட்ச் பார்த்துவிட்டு தூங்கிய போது கனவில் சொற்றொடர்களை அமைத்துக் கொண்டே முடிவெடுத்தேன்.
********
மேட்சுக்குள் நுழைவதற்கு முன்பு, கொஞ்சம் துவக்க விழாவைப் பற்றி பார்க்கலாம்.
ஏராளமான பொருட்செலவில் ஷங்கர் திரைப்படம் போல நடத்தப்பட்ட துவக்கவிழா என்பது தெரிந்தது. ஆனால், இது போன்ற விழாக்களை எப்படி தொலைக்காட்சியில் காட்டவேண்டும் என்பது நிகழ்ச்சியை நேரலையேற்றியவர்களுக்கு நிச்சயம் தெரியவில்லை.
தூரக்காட்சிகளாகவே (Long shots) காட்ட வேண்டிய துவக்க விழா நிகழ்ச்சிகளை ஏதோ அவர்கள் சீரியசான சோகக்காட்சியில் நடிக்கிறர்வகள் போல க்ளோசப்பில் காட்டியது, முதுகிலும், தலையிலும், திடீர் திடீரென்று விளக்கு எரிய ஆண்களும் பெண்களும் மைதானத்தில் ஏன் அலைகிறார்கள் என்ற கேள்வியையே ஏற்படுத்தியது.
அதேபோல், லயனல் ரிச்சி போன்றவர்களின் பாடல்கள் தொலைக்காட்சிக்காக தனி ஒலிவாங்கி வழியே தரப்படாததும் ஏமாற்றம். நேரில் பார்ப்பவர்களைவிட தொலைக்காட்சி மூலம் பார்ப்பவர்கள் அதிகம் என்பதை ஐபிஎல் அமைப்பாளர்கள் உணர்ந்து இனி வரும் துவக்க விழா, நிறைவு விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக படம்பிடித்து தரும் நிறுவனங்களிடம் தரவேண்டும். இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அனுபவம் கொண்ட சன் டிவி, Zee டிவி போன்றவர்கள் இதை சரிவர படம் பிடிப்பார்கள் தரமாக ஒளிபரப்புவார்கள் என்று நினைக்கிறேன்.
**************
நிச்சயமாக இப்போது மேட்ச் பற்றித்தான் எழுதப்போகிறேன். வேறு விஷயம் எழுத சரக்கு இல்லை.
மேட்ச் போன வருட சாம்பியன் டெக்கான் சார்ஜருக்கும், போன வருடம் தூங்கிய புலியாக மகா மெகா அடிபட்டு, அடிமட்ட நிலை கண்ட கொல்கத்தா நைட் ரைடர்களுக்கும்.
இதற்கு முந்தைய பந்தயங்களில் மோசமான ஆட்டத்திற்கு காரணங்களை கொல்கத்தா அணியினர் தீவிரமாக ஆராய்ந்து, மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பது திட்டவட்டமாக தெரிந்தது.
1. முதல் மாற்றம் – புக்காnone ஐ மாற்றி “We want the cup, what more?” என்று வாட்மோரை பயிற்சியாளராக கொண்டு வந்தது.
2. பல மேட்சுகளின் தோல்விக்கு காரணமான பவுலர்களின் அக்ரமத்தை அக்ர(ம)த்தால் அடக்கியாள முடிவெடுத்தது.
3. கடவுள் அருளால் ப்ரெண்டன் மேக்மில்லன் இந்த வருடம் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருப்பதால் கங்கூலி மறுபடி அணித்தலைவரானது.
4. எத்தனை சொன்னாலும் கேட்காமல் தேங்காய் உடைத்து ரன் தானத்தில் முதல் இடம் பிடித்துக் கொண்டிருந்த அகர்கரை முதல் மேட்சுக்கு அகற்றி வைத்தது.
5. அணியின் சொந்தக்காரர் என்கிற ஹோதாவில் ஷாரூக் இது ஏதோ “சக் தே” திரைப்பட ஷூட்டிங் என்று நினைத்துக் கொண்டு மைதானத்தில் வந்து ஆட்டம் போடாமல், வீரர்களுக்கு மென்மையான ”கட்டிப்பிடி வைத்திய” வாய்ப்பு தர ஜூஹி சாவ்லாவை அனுப்பி வைத்தது.
6. எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர் மஞ்சள் துண்டு மகாத்மியம் தெரிந்து கொண்டது போல, அணியின் சீருடை நிறத்தை கருப்பிலிருந்து கருத்த நீலத்துக்கு மாற்றியது. (கம்ப்யூட்டர் கொண்டு பாலுக்கு பால் பதம் பார்த்தாலும், செண்டிமெண்ட் கிரிக்கெட்டில் நிறையவே உண்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்).
இந்த முறை எல்லா அணிகளிலும், மடிக்கப்பட்டு விட்ட ஐசிஎல்லில் இருந்த சில ஆட்டக்காரர்கள் மன்னிப்புக்கேட்டதால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஒருவர் டெக்கானில் அனிருத் சிங்.
தொலைக்காட்சியில் மேட்ச் பார்க்க வந்த வி.ஐ.பி. பார்வையாளர்களில் ”மேற்கிந்திய டெண்டுல்கர்” லாரா (ஐசிஎல்) உட்கார்ந்திருந்தார். யானை வரும் முன்னே வரும் மணியோசையோ என்று தோன்றியது.
இந்த வருட ஐபிஎல் புதுமை டாஸ் போடும்போது ஒரு ”பச்சை தத்துவம்” சொல்லுவார்களாம். இந்த மேட்சில் ரவி சாஸ்த்திரி மாமா சொன்ன ”அடடா” தத்துவம் “வீட்டுக்கொரு மரம் வளருங்கள்”. “ஃப்ளாட்டுக்கொரு மரம் வளருங்கள்” என்று சொல்லியிருந்தால் புதுமையாகவும், புரட்சியாகவும் இருந்திருக்கும்.
புல்லரிக்கும் தத்துவத்துக்கு பின் லலித் மோடி டாஸ் சுண்ட கங்கூலி வால் கேட்க கில்லியாக தலை விழுந்தது. கில்லி கொல்கத்தாவே ஆடிப்பார்க்கட்டும் என்று விட கொல்கத்தா ஆட இறங்கியது.
இந்த வருடம் கொகநைரை நன்றாக ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில், முதல் பந்திலேயே மண் விழுந்தது. போன ஐபிஎல்லிலும் முதல் ஓவரில், முதல் பந்தில் ஏராளமானவர்கள் அவுட் ஆனார்கள். அதில் முக்கிய பங்கு வகித்தவர் பழைய கொல்கத்தா அணித்தலைவர் மேக்மில்லன் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. வாஸ் போட்ட முதல் பந்தில் மனோஜ் திவாரி விழுந்தாரென்றால், நான்காவது கங்கூலியும் விழுந்தார். முதல் ஆறு ஓவருக்குள் இன்னும் இரண்டு விக்கெட்டுகள் சரிந்ததில் ”சரிதான், கதை-வசனம் அதேதான் போல இருக்கு” என்று தோன்றியது.
வானிலிருந்து உதவி வந்தால் மட்டுமே இந்த நிலையிலிருந்து கொல்கத்தா மீள முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஆண்டவன் அனுப்பிய ஏஞ்சலோ என்று வந்தவர் ஏஞ்சலோ மாத்யூஸ். எத்தனையோ முறை இந்தியாவுக்கு எதிராக விளையாடியபோது சீக்கிரம் அவுட்டாகாமல் வெறுப்பேற்றியவர் இன்று விருப்பத்துக்காக விளையாட வேண்டும் என்று ஏங்கினேன். பொய்க்கவில்லை. ஷாவுடன் சேர்ந்து 7வது ஓவர் தொடங்கி எதிரடி கொடுத்து ஆடி 15வது ஓவருக்குபின் சூப்பரடி எடுத்து வைத்ததில், கங்கூலி ”முயன்று பார்க்கலாம்” எனக்கூடிய 161 ரன்கள் கொல்கத்தா எடுத்துவிட்டது.
முயன்று பார்க்கலாம் என்றாலும், டெக்கானின் பேட்டிங் வரிசை பயமுறுத்தும் வரிசை என்பதற்கு மறுப்பு இருக்காது. கில்லி, லஷ்மண், கிப்ஸ், சிமண்ட்ஸ்,ரோஹித் ஷர்மா தாண்டிப்போனால் திருமலைசெட்டி சுமன் என்பது வரை பயமுறுத்தல் அதிகமே. முதல் ஓவர்களில் கொல்கத்தாவுக்கு வெற்றி உண்டா இல்லையா என்பது தீர்மானம் ஆகிவிடும் என்று நினைத்தேன்.
துவக்கத்தில் கில்லி, லஷ்மண் இருவரும் பேட்டின் முனைகளிலேயே விளையாடியது கங்கூலிக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகம் கொடுத்திருக்க வேண்டும். கொல்கத்தா பவுலர்கள் நன்றாகவே பந்து வீசினார்கள்.
ஆனாலும், கில்லி போன்றவர்களுக்கு இரண்டு முறை கேட்ச் விட்டு வாழ்க்கை கொடுத்தது மன்னிக்க முடியாத குற்றம். லஷ்மண் அவுட்டானாலும், கில்லியும், கிப்ஸும் ஆக்ரோஷமாக ஆடி முதல் 9 ஓவருக்கு பின் ஒரே விக்கெட் மட்டும் இழந்து டெக்கான் வெற்றி நிச்சயத்தில் இருந்தார்கள்.
ஸ்ட்ராடஜி (இந்த வார்த்தைக்கு தமிழ் தேடினேன், டெஸ்ட் மேட்ச் போல நீளமாக இருந்தது, ஆகவே ஆங்கிலத்தை தத்து எடுத்துக் கொண்டேன்) இடைவேளைக்கு பின்னர் திரும்பிய கொல்கத்தாவுக்கு விருப்பமான திருப்பங்களை பெற்றுத்தந்தது கங்கூலியின் பவுலிங் மாற்றங்கள். முரளி கார்த்திக் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். கங்கூலியின் பவுலிங் மாற்றங்களில் முதலில் கிப்ஸும் பின்னர் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கில்லியும் வெளியேற, முக்கியமான அடித்து ஆடும் கட்டத்தில் இரண்டு புது மட்டையர்கள் நடுவில் சேர்ந்தது டெக்கானுக்கு பின்னடைவை தந்தது. டெக்கான் மட்டையர்கள் தூக்கி அடிக்க முயன்றவை எங்கள் திருவல்லிக்கேணி கிரிக்கெட் மொழியில் “லோக்கல் சிக்ஸர்” ஆகி ஃபீல்டர்கள் கையில் விழுந்தன. கொஞ்சம் வழி கிடைத்ததும் கொல்கத்தா உள்ளே நுழைந்து டெக்கானுக்கு கேட் மூடிவிட்டார்கள்.
இருந்தாலும், கடைசி ஓவர் வரை, இல்லை இல்லை, கடைசி பந்து வரை (இரண்டு நோ பால்கள், ஆறுக்கு இலவச அடிகள் என்ற முறையில்) டெக்கானுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது இருபதுக்கு இருபதுக்கே உரித்தானது.
கொல்கத்தா வெற்றியில் களித்தது. அந்த வெற்றியில் நான் களித்தது, கங்கூலியின் எமோஷனலான, உற்சாகமான, காற்றை கையால் குத்தி முஷ்டியை இறுக்கமாக உயர்த்தும் உடல் மொழி. எவ்வளவு நாளாச்சு இதை பார்த்து. கங்கூலி வேட்டைக்காரனாகி “புலி உறுமுது, புலி உறுமுது” என்று பாடுவது போல தோன்றியது.
டாஸ் போடும் போது, “அடுத்த மேட்சுக்கும் நானே கேப்டன்” என்றார் கொல்கத்தா இளவரசர். முழு போட்டிக்கும் அவரே கேப்டனாக இருந்தால் நலம்.
”இறைவா! மை நேம் இஸ் கானுக்கு நல்ல புத்தி கொடு”









வெட்டிப் பொழுதுபோக்கு ஐபிஎல்லுக்கெல்லாம் முழு நீளப் பதிவா? இனி ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு பதிவு போடுவீங்களோ? கொஞ்ச நாள் உங்க ப்ளாகை(blog) ப்ளாக்(block)லிஸ்டில் போட்டுவைக்கப்போகிறேன் :>
- என். சொக்கன்,
பெங்களூரு.
என். சொக்கன்,
நீங்கள் என் சொக்கன், எது வேணா எழுத அனுமதிப்பீர்கள் என்று நினைத்தேனே? நெற்றிக்கண்ணை திறந்துவீட்டிர்களே சொக்கா! ஒரு ரெண்டு மேட்ச் பாருங்க அப்புறம் புரியும் இது வெட்டி பொழுதுபோக்கா என்று. இன்று சச்சினுக்கு யுசுஃப் தண்ணி காட்டியதை பார்த்திருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டீர்கள். மேட்ச் முடிந்ததும், மாட்சிமை கொண்ட சச்சின் ”அந்த அடியை நான் அவர் டீம்ல இருந்தா ரசிச்சிருப்பேன்” என்றார். 37 பந்துகளில் 100 – ஒன்பது நாலு, எட்டு ஆறு! என்று மும்பை இந்தியர்களுக்கு பேதி கொடுத்தார் யுசுஃப்.
20க்கு 20லும் சச்சின் ஒரு சதம் அடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயம் இதை வெட்டியென்று வெட்டி அட்டி நிற்கமாட்டீர்கள்.
ஆஹா பிரமாதம்…
உங்களோட ஐபிஎல் துவக்கம் நல்லா இருக்கு…..
எப்படியோ வங்காள புலிகளுக்கு ஒரு ஆறுதல் வெற்றியோடு ஆரம்பமானது ! !
உங்கள் வார்த்தை ஜாலத்துக்கு வந்துவிட்டது ஜோலி. இதில் ஒரு நல்ல விஷயம் (பதிவு போடுபவர்களுக்கு மட்டும்) என்னவென்றால், எழுத விஷயம் ஏதும் கிடைக்கவில்லையே என்று என்னைப் போல எண்ண அலைகளையே நம்பி வெம்பி பதிவுகள் போடவேண்டாம்.
இல்லம் இல்லாள் இல்லை, இத்தனை இயும் ஒரு வரியிலேயே போட்டிருப்பது அருமை. கொல்கத்தா இன்றும் வெற்றி பெற்றிருப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும்.
ஏஞ்சலை ஏஞ்சலோவையும் இணைத்திருப்பது மிக அருமை. ஆண்டவன் அனுப்பினாரா என்ன கொல்கத்தாவை ஆள்பவன் அனுப்பினாரா. நாத்திகம் பேசவில்லை…சும்மா உங்களைப் போல வார்த்தைகளில் விளையாட முயற்சித்தேன்…வார்த்தைச்சித்தா…
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site