லாபகரமான பங்கு சந்தை அனுபவம்
நான் பங்கு சந்தையில் ஈடுபாடு கொள்ள தொடங்கியது இருபது வருடங்களுக்கு முன்பு, 1989-ல். அக்கவுண்டன்ஸி படித்ததில் பங்குகள் என்றால் என்ன என்பதும், பொது நிறுவனங்கள் (Public Limited Companies) என்றால் என்ன என்பதும் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், பங்கு சந்தை என்பதை பற்றி சுமாரான செயல் ரீதி அறிமுகம் கிடைத்தது 1989-ஆம் ஆண்டில்தான்.
என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அது தவிர நிறுவன முதலாளியும். அவர்களின் செயல்பாடுகளை பார்த்து எனக்கும் பொது நிறுவன பங்குகளை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
நண்பரிடம் “எனக்கும் பங்கு வாங்க வேண்டும்” என்றேன்.
எக்கனாமிக் டைம்சை பிரித்துக்காட்டி “எந்த கம்பெனி?”, ”தில்லியிலா?, இல்லை மும்பையிலா?” என்று கேள்விமாலை தொடுத்தார்.
எப்படி ஒரு பங்கை தேர்ந்தெடுப்பது என்பது போன்ற நெளிவு சுளிவுகள் அதிகம் தெரியாததால், “எப்படி தேர்ந்தெடுப்பது” என்று கேட்டேன்.
நண்பர் நிபுணர். கஷ்க்கத்தில் வெள்ளை நிற எக்கனாமிக் டைம்ஸும், அட்டையில் சின்ன, பெரிய சில்லரை காசு கோபுரங்களும், ரூபாய் நோட்டு அடுக்குகளும் போட்ட கேபிடல் மார்க்கெட் ஏடுகளும் கொண்டு பீடு நடை போடுபவர்.
உட்கார வைத்து, பால பாடமாக, ஈபிஎஸ், பி.ஈ. மல்டிபிள் என்று அனா, ஆவன்னாவித்தார். கொஞ்சம் புரிந்தது. எப்படியாவது பங்கு சந்தையில் பணம் போட்டு பாஸாகி, என் பாஸ் போல நானும் பாஸாகி அக்கவுண்ட்டண்ட் கட்டி ஆளவேண்டும் என்ற ஆவல் வந்தது. ஆவலுக்கு அவல் போல வங்கியில் ஒரு ரூ.3000 எடு, எடு, எடுத்துப்போட சொன்னது.
இப்போது ரூ 3000 இருந்தால், உடனே வலையேறி, விலைபார்த்து ”இந்தாப்பா, ஒரு இன்ஃபொசிஸ் கொடு” என்று வாங்கிவிடலாம். ஆனால், அப்போது? ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க வேண்டுமானால், மார்க்கெட் லாட் என்று ஒரு குறைந்த பட்ச எண்ணிக்கை கழுத்தறுப்பு இருந்தது. பத்து ரூபாய் பங்குகளுக்கு மார்க்கெட் லாட் என்பது நூறு பங்குகள். ரூ. 3000 போட வேண்டுமானால், கமிஷன் உள்ளிட்டு ரூ.30க்கு விலைமிகாத பங்குகளை மட்டுமே வாங்க முடியும்.
கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் நான் ஆள காத்தி்ருந்தாலும், நான் பானை பிடிக்க பாக்கியசாலியாக விலை ரூ.30க்குள் பங்குகளை தேடவேண்டிய கட்டாயம்.
நண்பரிடம் கேபிடல் மார்க்கெட்டும், எகானமிக் டைம்ஸும் வாங்கிக்கொண்டு, வீட்டுக்குப் போய், சி.ஏ. படித்த நாட்களுக்கு பிறகு முதல் முறையாக இரவு கண்விழித்து கம்பெனிகளின் விற்பனை, லாபம், ஈபிஎஸ், பி.ஈ. ஆகியவற்றின் பட்டியலில் ஆழ்ந்து, என்னால் அப்போது பங்கில் போடமுடியும் என்று நினைத்த ரூ.3000க்கு என்ன மாட்டும் என்று ஆராய்ந்தேன்.
இந்தோ நிசான் ஆக்சோ கெமிகல்ஸ் என்ற பெயர் என்னைக் கவர்ந்து இழுத்தது. ஜப்பானுடன் கூட்டுறவில் இருக்கிறார்கள் போல நினைத்தேன். வெளிநாட்டு கூட்டுறவு நல்ல விலைபோகும் சரக்கு என்று பாலபாடத்தில் நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது. விலையும் சல்லிசாக ரூ.14 என்று எகனாமிக் டைம்ஸ் சொன்னது. எப்போது விடியும் என்று காத்திருந்து, விடியலுக்கு முன்பே எழுந்து காப்பி குடித்து ஆபீஸ் போய் நண்பரிடம் “இந்தோ நிஸான் இருநூறு வேணும்” என்றேன்.
உனக்கு நல்லா வேணும் என்ற பார்வையுடன் “வாங்கிட்டா போச்சு” என்று ”ப்ரோக்கர் அக்கவுண்ட்டெல்லாம் ஓபன் பண்ணணுமே” என்றார். “எப்படி?” என்று கேட்டேன்.
மார்வாடிகள் வியாபாரம் வெளியே போகவிடமாட்டார்கள். ”அக்கவுண்ட் இல்லாம அவசரமா வாங்கணும்னா, என் மச்சினன் சப்-ப்ரோக்கரா இருக்கான், அவங்கிட்ட அறிமுகப்படுத்தறேன்” என்று ஜோஷி சாப்புக்கு உடனே போன் ஏற்றினாலும் அவர் “நான் பிசியா இருக்கேன், சாயந்தரமா வரேன்” என்று என் முதல் பங்கு முதல் அவசரம் தெரியாமல் சொன்னார்.
சாயந்தரம் அவர் வந்து “அமவுண்டெல்லாம், சரியா செட்டில் பண்ணிடுவாரா?” என்று நண்பரிடம் உத்தரவாதம் வாங்கிக்கொண்டு “என்ன ஷேர்?’ என்றார். “இந்தோ நிசான் ஆக்ஸோ” என்றேன். அவர் நடமாடும் பங்கு நூலகம் போல ‘அது பம்பாய்ல தானே கிடைக்கும், உங்களுக்கு தில்லில எதுவும் அகப்படலியா, ஏசிசி, டிஸ்கோ இங்கயே வாங்கலாமே” என்றார்.
நண்பர் நமட்டு சிரிப்புடன் “தீன் ஹசார் ரக்கா ஹை” என்றார். மச்சினர் கேவலத்துக்கும் கேவலமாக பார்த்தபடி “கேவல் தீன் ஹசார் ஹை?” என்றார்.
நான் கேவலம் புரியாமல் “ஹை, ஹை! ஒங்க கைராசி நல்லா வரட்டும்” என்று தென்னிந்திய அசடு வழிந்தேன்.
“சரி, நாளைக்கு ஆர்டர் அனுப்பறேன், கிடைத்துவிட்டால் ஃபோன் பண்ணி சொல்றேன், ஷேர் கொடுக்கும்போது செட்டில் பண்ணிடணும்” என்றார் கொடுப்பானா என்கிற அவநம்பிக்கை மேலிட.
அப்போதெல்லாம், இப்போது இருப்பதுபோல் கிடையாது. பம்பாயோ, எம்பாயோ, பங்கு வாங்க நாம் ஒருவரிடம் சொல்லி, அவர் சாம் பிட்ரோடவுக்கு முந்தையகால கருப்பு போனில் ரட்டட்ட ரட்டட்ட என்று எண் சுழற்றி, கடவுள் ப்ரோக்கரிடம் வேலை செய்யும் உபதேவரிடம் சொல்லி, அவர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்குள் இருக்கும் ரிங் எனப்படும் பலான இடத்துக்கு ஆர்டர் எடுத்துப்போய், இந்தோ நிசான் ஷேர் டீல் செய்யும் வேறோரு ப்ரோக்கர் கடவுளின் உபதேவரிடம் (கிடைத்தால்) வாங்கி, போன் சுழற்றி மீண்டும் நம் சப்-ப்ரோக்கர் நண்பர் வழியாக நமக்கு தகவல் வரும். அதற்கு அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும். கிடைக்காவிட்டால் மீண்டும் ரட்டட்ட, ரட்டட்ட.
காத்திருந்தேன். மறுநாள் அவர் ஃபோன் வந்தது. “நீங்கள் அதிருஷ்டக்காரார், ஆனால் 200 கிடைக்கவில்லை, 150தான் கிடைத்தது, ரூ 16-ல்” என்றார்.
“பேப்பர்ல ரூ 14 தானே போட்டிருந்தான்” என்றேன்.
“அது அன்னைக்கு, உங்களுக்கு ரூ 16-ல் கிடைத்ததே பெரிசு, அன்னைக்கு 18 வரை போச்சாம்” என்றார். ஏதோ எனக்காக மன்றாடி விலைபேசி வாங்கியது போல.
”சரி, நாளைக்கு ஷேர் கொண்டு வந்து கொடுக்கறீங்களா? உடனே செக் கொடுத்து விடுகிறேன்” என்றேன்.
“ஷேர் வரதுக்கு ஒரு ரெண்டு வாரம் ஆகும், பம்பாயிலருந்து வரணும், வந்ததும் வரேன்” என்றார்.
இரண்டு வாரம் தினமும் காலையில் எகனாமிக் டைம்ஸ் கடன் வாங்கி பூச்சி பூச்சியாக போட்டிருந்த பங்கு பட்டியலில் என் இந்தோ நிசான் விலை பார்த்தபடி இருந்தேன், ஐம்பது பைசா விலை ஏறினாலும் 150 இண்டு 0.50 பைசா என்று லாபக்கணக்கு போட்டபடி.
இரண்டு வாரம் போய் மூன்றாவது வாரம் மாலை அலுவலகம் முடியும் நேரம் அவர் வந்தார். “உங்கள் ஷேர் வந்தாச்சு” என்று கால்குலேட்டர் வாங்கி எண் அழுத்தி ரூ.2450 கொடுக்க சொன்னார்.
”கணக்கு சரியா பாருங்க சார், 150 இண்டு 16, இரண்டாயிரத்து நானூறு தானே ஆகிறது” என்றேன்.
“சார், 16 வாங்கிய விலை, 2% கமிஷன் சேர்த்து 2,450” என்றார், பதினைந்து நாளில் நான் சம்பாதித்த ஐம்பது பைசா லாபத்தில் 32 பைசா உருவியபடி.
“அப்போ விக்கும் போதும் அதே 2% தரணுமா?” என்றேன் காற்று இறங்கிய குரலில்.
நான் செக் எழுதுவதை பார்த்தபடி “ஆமாம்” என்றார்.
”இப்பவே விக்கலேன்னா ட்ரான்ஸ்பர் பண்ணி ஒங்க பேர்ல வச்சுக்கங்க” என்று பங்கு பத்திரத்துடன் பல ஸ்டேப்ளர் அடிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்த பச்சை நிற ஷேர் ட்ரான்ஸ்பர் பார்மை சுட்டிக்காட்டி.
அதை நிரப்பவே எனக்கு என் பங்குருநாதர் உதவி தேவைப்பட்டது. ’ஏன் ட்ரான்ஸ்பர் பண்ணிக்கறே, அப்படியே ப்ளான்கா வித்துடலாமே” என்று என் குருநாதர் கேட்டது எனக்கு சரியாக புரியவில்லை.
நிரப்பிய ட்ரான்ஸ்பர் படிவத்தையும் பங்கு பத்திரத்தையும் பதிவு தபாலில் அனுப்பிவிட்டு அது என் பெயரில் மாற்றி வர வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன். அப்போதேல்லாம் பங்கு மாற்றம் என்றால் அதற்கென்று ஒரு கமிட்டி எல்லா நிறுவனத்திலும் இருக்கும். அவர்கள் மாதத்தில் ஒரு நாள் கூடி என்னைப்போல ட்ரான்ஸ்பருக்கு அனுப்பிய எல்லா பங்குகளின் ட்ரான்ஸ்பரையும் அப்ரூவ் செய்து, நிறுவனத்தின் பங்குதாரர் ஏட்டில் புதிய பங்குதாரராக பெயரை எழுதிக்கொண்டு பின்னர் திருப்பி அனுப்புவார்கள்.
பங்கு எத்தனை நாளில் நம் பெயரில் மாறி திரும்ப வருகின்றது என்பது இவர்கள் கூட்டம் எத்தனை நாளைக்கு ஒருமுறை கூடுகிறது என்பதை பொறுத்து மாறுபடும். 60 நாட்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஒரு விதி இருந்தது என்று நியாபகம், ஆனால் சிறிய கம்பெனிகள் இந்த விதிமுறையை பின்பற்றாததால் பெரும்பாலும் தாமதமாகும்.
நல்லவேளையாக, நான் அனுப்பிய சமயம் அந்த நிறுவனத்தின் கமிட்டி கூடி சீக்கிரம் என் பெயரில் மாற்றி நாற்பந்தைந்து நாள் கவலையிலேயே எனக்கு என் பங்குகள் வந்துவிட்டன.
பங்கு வந்து விட்டதில் இன்னும் ஆர்வம் அதிகமாகி தினமும் எகானமிக் டைம்ஸ் காண்பது என் முக்கிய வேலையானது. அப்போதெல்லாம் பங்கு விலை என்ன ஆனது என்பது தெரிய அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும்.
தினம் பார்த்துக் கொண்டே வந்ததில் ஒரு நாள் என் பங்கு ரூ 22 என்று உயர்ந்திருந்தது. குருவின் மைத்துனரை தொடர்பு கொண்டு, விற்க வேண்டும் என்றேன்.
”சரி விற்றுவிடலாம், நாளைக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும்” என்றார்.
“ரூ 22 போட்டிருக்கு பேப்பரில், அதே விலைக்கு” என்றேன்.
“அது கிடைக்குமான்னு தெரியாது, முயற்சி பண்ணலாம், ரூ 21க்கு மேல் என்று சொல்லவா” என்றார்.
மனதுக்குள் லாபத்தை ரூ 900த்திலிருந்து ரூ 750க்கு குறைத்தபடியே “சரி” என்றேன்.
அடுத்த நாள் மாலை அவர் தொலைபேசியில் “வித்துப்போச்சு சார், ரூ.21 கிடைச்சது, கொஞ்ச நேரத்துல வரேன், ஷேர் எடுத்து வைங்க, டெலிவரி அனுப்பணும்” என்றார்.
”அப்போ இன்னிக்கே பணமும் குடுத்துடுவீங்களா” என்றேன்.
”என்ன சார், விவரம் புரியாம பேசறீங்க, டெலிவரி அனுப்பி பணம் வர மூணு வாரம் ஆகும்” என்று கொஞ்சம் முரட்டுத்தனம் சேர்ந்த குரலில் சொன்னார்.
நான் பயந்தபடி “இல்ல சார், தெரியாம சொல்லிட்டேன், ஷேர் எடுத்து வைக்கிறேன், வாங்க” என்றேன்.
பதினைந்து நிமிடத்துக்கும் பஜாஜ் ஸ்கூட்டரில் வந்து இறங்கி என்னிடம் இருந்து ஷேர் கொத்திக்கொண்டு பணம் தரும் தேதி குறிப்பிடாமல் பறந்து போனார். விற்ற பங்குக்கு எனக்கு பணம் வர கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது.
இது நடந்து “ஒன்றும் தெரியாத போதே கிட்டத்தட்ட 38% சதவீதம் லாபமா” என்று யோசித்து, இன்னும், இன்னும் என்று தெரிந்து கொண்டு, ஓடி ஓடி சம்பாதித்து சேமிப்பு, கடன் என்று தேடி பங்கு சந்தையில் போட்டு, என்னுடனேயே இந்த இருபது வருடத்தில் பங்கு சந்தையும் உருமாறி ஆன்லைன் ட்ரேடிங், அடுத்த நாள் செட்டில்மெண்ட், உடனுக்குடன் ஃபாரம் பாரம் இல்லாமல் டிமேட்டில் பங்கு வருகை என்று ஆனாலும்…
அந்த முதல் லாபத்தோடு பங்கு மார்க்கெட் பழக்கத்தை நான் விட்டிருந்தால், என் பங்கு சந்தை அனுபவம் லாபகரமாகவே இருந்திருக்கும்.
*********
இங்கு செலவிட்ட நேரம் சுகமாக இருந்ததா? இங்கே க்ளிக் செய்து ஒரு ஓ போடுங்க









பங்குச்சந்தையை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. இருந்தாலுமென் பங்குக்கு இந்த பதிவில் நான் ரசித்தவை…
இந்த பங்கு மார்க்கெட்டில் லிஸ்டாகுமோ இல்லையோ உங்கள் பங்குப் பதிவில் லிஸ்டாகும்
//கிடைக்காவிட்டால் மீண்டும் ரட்டட்ட, ரட்டட்ட.// டைம் மெஷின் இல்லாமல் பல ஆண்டுகள் பின் சென்றிருக்கிறீர்கள்.
//நண்பர் நமட்டு சிரிப்புடன் “தீன் ஹசார் ரக்கா ஹை” என்றார். மச்சினர் கேவலத்துக்கும் கேவலமாக பார்த்தபடி “கேவல் தீன் ஹசார் ஹை?” என்றார்// வார்த்தை விளையாட்டு.
//நான் செக் எழுதுவதை பார்த்தபடி “ஆமாம்” என்றார்// செக் எழுதிக்கொண்டே ஓரக்காதில் கேட்டீர்களா?
//அந்த முதல் லாபத்தோடு பங்கு மார்க்கெட் பழக்கத்தை நான் விட்டிருந்தால், என் பங்கு சந்தை அனுபவம் லாபகரமாகவே இருந்திருக்கும்// பலபேர் இப்படி நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் சத்தியமூர்த்தி…நினைத்து முடித்து அவர்கள் செய்யும் அடுத்த வேலை எகனாமிக் டைம்ஸ் பார்ப்பது.
ரொம்ப ரசித்துப் படித்தேன் – வரிக்கு வரி சிரிக்கவைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறீர்கள் – வாழ்த்துகள் & பாராட்டுகள்!
- என். சொக்கன்,
பெங்களூரு.
Dear Murthy
Very interesting. For some share market is always a demon of which one fails to understand even the basic nuances. I have also had very little experience – of walking many times to the broker in finding out whether they were really able to place my order and more so at times when I wanted to sell. I still remember something like Balaji Shipping – having waited for long months to go above par – booked a profit @ 14.25 thinking of huge gains of Rs.800/- only to see in the weeks thereafter, the same share touching 80; 90 and briefly above 100.
Then I switched to MF thinking them to be foolproof and smart way and ended up losing heavily when I was in hurry to liquidate for advancing for a house flat.
Regards – Sampathkumar S
Dear Murthy Sir,
As usual Pramadham. Pinniteenga.
Best Regards,
Lakshman.
ur post was interesting.. if possible u can write more about share market.. it will be useful to youngsters who are willing to enter share market..
Very interesting post. In conclusion this poses a question in ‘Nayakan’ style – Neenga Nalladhunnu solrengala illa kettathunnu solrengala?
“அந்த முதல் லாபத்தோடு பங்கு மார்க்கெட் பழக்கத்தை நான் விட்டிருந்தால், என் பங்கு சந்தை அனுபவம் லாபகரமாகவே இருந்திருக்கும்.”
பல பேருக்கு இது பொருந்தும் போல இருக்கே …..
Ram N,
நிச்சயமாக பொருந்தும்.
பங்கு சந்தையில் நீண்டகால வெற்றி பெற்றவர்கள் மிகவும் குறைவு. ஆனால் அவர்கள் பெற்ற வெற்றி மிகப் பெரியது.
பல தோற்றவர்களின் பணம் வென்றவர்களிடம்தானே போகிறது? ஒரு வாரன் பஃபெட் உருவாக பலர் பாரன் (ஆங்கிலத்தில் படியுங்கள்) பக்கெட் ஆகிறார்கள்.
dear sathyamurthy very interesting and in lucid narration keep it up
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed