Home » Headline, Humor, Tamil-தமிழ், அனுபவம், நகைச்சுவை

எழுத்துக்கு லீவு

23 December 2009 1,034 views 10 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


இன்று வழக்கம்போலத்தான் எழுந்தேன். வழக்கம்போல என்றால், அதிகாலை நாலே முக்கால் மணிக்கு அலைபேசியில் அலாரம் வைத்து, பலமுறை ஸ்னூஸ் செய்து, வழக்கம்போல ஐந்தரை மணிக்கு எழுந்து, வழக்கம்போல வாக்கிங் செய்ய நினைத்து, ஈமெயில் பார்த்ததும் வாக்கலாம் என்று தள்ளிப்போட்டு, ஈமெயிலில் இருந்து ஏதேதோ சைட்டடித்துவிட்டு மணி ஏழு ஆகிவிட்டதால் குளித்துவிட்டு, இறைவனுக்குக் கூட அதிகம் நேரம் தரமுடியாமல் “இன்னிக்கு பொழுது நல்லா போகணும், எல்லாரும் நல்லா இருக்கணும், எல்லாம் நல்லா நடக்கணும், நீயே சரணம் நாராயணா” என்று வேண்டிவிட்டு, மாத்திரைகளுக்குப் பிறகு ஈயப்பட்ட இடத்தில் சிறிது வயிற்றுக்கும் ஈய்ந்து, கார் விரட்டி அலுவலகம் சென்றடைந்தேன்.

கொஞ்சம் அதிகமாகவே இணையத்தில் நேரம் செலவிட்டதில், மதிய உணவு தயாரிக்க நேரம் இருக்கவில்லை. வழக்கமாக கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை என்று தயாரித்துக் கொள்பவன் வெளியே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்ததில் விதி எழுதியிருக்கவேண்டும்.

மதியம் ஒன்றரைக்கு பசி அதிகமாக, அலுவலக நண்பர்களுடன் குவைத்தில் வெஜிடேரிய பக்தர்களின் புகலிடமான உடுப்பி உணவகத்திற்கு சென்றேன்.

கைகழுவிக் கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு சென்று அலட்சியமாக இருக்கையின் முதுகைப் பிடித்து இழுத்து உள்ளே நுழைய இடம் பண்ணிக்கொண்டு அமர்ந்தவாரே இடது கையால் இருக்கையின் சீட்டை இழுத்தபோது விதி அக்டிவேட் ஆனது.

இருக்கை வழக்கமாக கூப்பிட்ட விரலுக்கு ஓடிவரும். இன்று? இருக்கையின் குஷன் பாகம் அது பொருந்தியிருந்த கம்பியிலிருந்து அவிழ்ந்திருந்தது. நான் பிடித்து இழுத்தது குஷனை. இருக்கை நகராமல், குஷன் மேலே வர, என் இடக்கை ஆள்காட்டி விரல் குஷனுக்கும் பொருத்தியிருந்த கம்பிக்கும் இடையில் இருக்கிறது என்று என் மூளைக்கு புரிவதற்குள் நான் உட்கார ஆரம்பிக்க, என் 73 கிலோ எடையும் குஷனை அழுத்த விரல் நசுங்கியது.

தாங்கமுடியாத வலியுடன் இருதொடைக்கு நடுவே குஷன் – கிரில் சிறையில் சிக்கிக்கொண்டிருந்த விரலை இழுத்துப்பார்த்தேன். ஆள்காட்டி விரல் நகத்துக்கு கீழ் சதை வழண்டு வெண்மை தெரிந்தது. சர்க்கரை டெஸ்டிங்குக்கு குத்தும்போது வராத ரத்தம் பீறிட்டு வர ஆரம்பித்திருந்தது.

அலறியபடி கவுண்டருக்கு ஓடி, “சேர்ல கை மாட்டிக்கிச்சு, பேண்ட் எய்ட் இருக்கா?” என்றேன். நல்லவேளையாக, கவுண்டரில் முதலுதவி பெட்டியிருந்தது. அதில் பேண்ட் எய்டும், ஏதோ ஆயிண்ட்மெண்டும் இருந்தது. மருந்து தடவி தளர்வாக பேண்ட் எய்ட் அணிவித்தார். ரத்த வருகை கொஞ்சம் நின்றாலும், பேண்ட் எய்ட் சீக்கிரமே நிறம் மாறியது. விரலில் நசுங்கிய இடத்திலிருந்து “விண், விண்” என்று விட்டேனா பார் என்று வலி துரத்திக் கொண்டிருந்தது.

வலியின் வேதனையில் ஆர்டர் செய்த முழு தாலியை அரையில் விவாகரத்து செய்துவிட்டேன். உடுப்பியிலிருந்து வெளியே வந்து பக்கத்து பகாலாவில் (நம்மூரூ மளிகைக்கடை மாதிரி) இன்னொரு பேண்ட் எய்ட் வாங்கி ரத்தம் தோய்ந்த மு.உ. பே.எ. பிரித்து எறிந்துவிட்டு ”நான் வேணா ஓட்டட்டுமா?” என்ற நண்பனின் ஆதரவை நிராகரித்து, கஷ்டப்பட்டு ஸ்டியரிங் ஒடித்து அலுவலகம் வந்துவிட்டேன்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு என் அலுவலக அறைக்கு வருவோரிடமெல்லாம் பேண்ட் எய்ட் தெரிய பேசி, இப்போது இந்த வரிவரை எழுதியதை விண்ணென்று தெரித்துக்கொண்டிருந்த விரல் வலியோடே சொல்லித் தீர்த்தேன். “ஓ இட் மஸ்ட் பி வெரி பெயின்ஃபுல், டேக் கேர்” திரும்ப திரும்ப வாங்குவதில் கொஞ்சம் வலிகுறைந்ததுபோல் இருந்தது.

ஆனாலும் மின்னஞ்சல் அடிக்கும் போது விரல் மக்கர் செய்து வலி இன்னும் அதிகமானது. அடிக்காமலும் இருக்க முடியவில்லை. வேறு விரலால் எழுத்தை அழுத்தலாம் என்றால், பாழாய் போன டைப்பிங் அறிவால் மற்ற விரல்கள் அந்த எழுத்துக்கள் எங்கள் வேலை இல்லை என்றன.

இன்றுதான் பாதி எழுதி பாழாய் நிற்கும் பல படைப்பு(?)களை ஒவ்வொன்றாக முடித்து வெளியிடலாம் என்று இருந்தேன். ஹுஹூம்! முடியாது. இத்தனை வலியுடன் எப்படி டைப் செய்வது. விரல் சரியாகும் வரை போஸ்ட்களை போஸ்ட்போன் செய்ய வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால், நான் எழுதுவதை தேடிவந்து படிக்கும் எண்ணற்ற வாசகர்களுக்கு ஏன் எழுதவில்லை என்று தெரிவிக்கும் கடமை என்னை லேப்டாப்புக்கு கூட்டி வந்து விட்டது.

சுனில் கவாஸ்கர் பல்வலியோடு போட்ட இரட்டை சதங்களும், உடைந்த தாடையுடன் கும்ளே வீசிய பந்துகளும், உடம்பு முழுக்க அடியுடன் அன்ஷுமன் கெய்க்வாட் மேற்கிந்திய பவுன்ஸர் புயலை சந்தித்ததும் நினைவுக்கு வந்து ஒரு உணர்ச்சி வேகம் கொடுக்க, கேமிரா எடுத்து விரலை இந்த ”நடந்தது என்ன?” பதிவுக்காக படம் பிடித்தேன்.

இருக்கையின் இடுக்கில் மாட்டிய விரல்ஆள்காட்டி விரலால் ஃப-வும், க-வும், வ-வும், ர-வும், த-வும் அழுத்தும்போது வலித்தது. இந்த எழுத்துக்கள் இல்லாமல் எழுதுவது எனக்கு விரல் பட்டபாடில்லை. அடிபடாத வலதுகையில் பேனா பிடித்து எழுதி ஸ்கேன் செய்து போடலாமே என்று கேட்பவர்கள் என் கையெழுத்தின் வலிமை தெரியாதவர்கள். நான் எழுதியதை படிக்க ஜீனோம் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும். வலியுடன் மட்டுமே எழுத முடிந்தது. ஆனாலும், ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு முழுமையான பதிவு போட முடிவதால் கண்கள் பனித்தது, இதயம் இனித்தது.

ஆகவே, மக்களே, இன்னும் குறைந்தபட்சம் ஒருவார காலத்துக்கு இந்த பதிவை மட்டும் படித்து என்னை பொறுத்தருளுங்கள். இந்த நாட்களில், விரல் வலித்தாலும், அறிவு விழிப்போடுதான் இருக்கும் ஆதலால், இன்னும் நன்றாக யோசித்து சீக்கிரமே எழுத வருகிறேன். இப்போதைக்கு லீவு போடுகிறேன்.

******
பி.கு.: விரல் அடிபட்டதில் இடது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பர்ஸ் எடுக்க முடியாமல் போனதால், இன்றைய லன்ச் பில்லை நண்பர் கொடுத்துவிட்டார்.

பி.கு.2: விரல் அடிபட்டதால் நாளை மெடிகல் காரணம் காட்டி ஆபீஸ் மட்டம் போட முடியும் என்று தெரியவந்தது.

*********
இது போல நான் வலி் பார்க்காமல் எழுத்து வெறி பிடித்து எழுதுவது உங்களுக்கு பிடித்திருந்தால், இந்த வெறி வெரி குட் என்று இங்கே போய் ஒரு திருச்செந்தூர், வந்தவாசி திமுக குத்துங்க

Bookmark and Share

Readers also liked

10 Comments »

  • Vijayasarathy R said:

    நான் ரசித்த வரிகள்:

    //மதியம் ஒன்றரைக்கு பசி அதிகமாக, அலுவலக நண்பர்களுடன் குவைத்தில் வெஜிடேரிய பக்தர்களின் புகலிடமான உடுப்பி உணவகத்திற்கு சென்றேன்//

    //விரலில் நசுங்கிய இடத்திலிருந்து “விண், விண்” என்று விட்டேனா பார் என்று வலி துரத்திக் கொண்டிருந்தது//

    //வலியின் வேதனையில் ஆர்டர் செய்த முழு தாலியை அரையில் விவாகரத்து செய்துவிட்டேன்//

    //ஆள்காட்டி விரலால் ஃப-வும், க-வும், வ-வும், ர-வும், த-வும் அழுத்தும்போது வலித்தது// – நல்ல ஆராய்ச்சி சார்….

    // விரல் வலித்தாலும், அறிவு விழிப்போடுதான் இருக்கும் ஆதலால்//

    மொத்ததில் மொத்த பதிவில் பல நல்முத்துக்கள்…(அடிபட்ட)விரலால் ஆன பயன் யாதெனின் லிஸ்டில் உங்கள் மு.கு நன்றாக உள்ளது…

  • Hoyas said:

    Get Well soon.

  • LEMINAR said:

    வலி இப்போ எப்படி இருக்கு ?
    தேக ஆரோக்கியம் பெடரா ?
    ஆர்டிகிள் நல்லா இருக்கு

  • Ram N said:

    நீங்களும் Vote போட்டமாதிரி தெரியுது :)

  • triplicani (author) said:

    அதுக்கு நடுவிரல் இல்ல? (ஓட்டு கிடைச்சு ஆட்சிக்கு வந்ததும் அவுங்க காட்டறத சொல்லல)

  • triplicani (author) said:

    Leminar,

    வலி தெரியாம இருக்க நான் என்ன வடிவேலுவா?

    இருந்தாலும், முன்னைக்கு இப்போ பரவாயில்ல. இன்னும் டைப் அடிக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.

  • sekar k swamy said:

    idhu eppadi irukku ?

    *தாடி , மீசையிடம் சொல்கிறது.
    இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்…
    ஆனால் நீ வீரத்திற்கு , நான் மட்டும் சோகத்திற்கா ?*

    * * ***லஞ்சம் *

    * வாங்கினேன்…கைது செய்தார்கள்
    கொடுத்தேன்…விடுதலை செய்தார்கள்!*

    **

    *பிறர் சொத்தை சூரையாடினான்…திருடா என்றார்கள்
    பல உயிர்களைக் கொன்றான்…கொலைகாரா என்றார்கள்
    சில பெண்களின் வாழ்வைப் பறித்தான் ..பாவி என்றார்கள்
    இவை அனைத்தயும் செய்தான்…தலைவா என்றார்கள்!!! *

    * ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது…
    மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்!
    அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்!*

  • Prasanna said:

    Get well soon

  • triplicani (author) said:

    @Sekar K Swamy

    நல்ல கவிதைகள். நான் இவற்றில் சிலவற்றை முன்பே படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கத் தந்ததற்கு நன்றி.

    கௌதமன் கருணாகரன், ப்ரசன்னா, லெமினார்,

    நன்றி. இப்போதே ஆற துவங்கிவிட்டது.

  • dharani said:

    get well soon..

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.