Home » Featured, Headline, Tamil-தமிழ், கதைகள்

இறுதிச்சுற்று

11 November 2009 3,862 views 5 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


தட்! தட்! தட்!

கொஞ்சம் இடைவெளி.

மீண்டும் தட்! தட்! தட்!

தட்!டப்பட்டது கதவு.

அவள் திறக்க பிரயத்தனப்படவில்லை.

கொஞ்சம் அமைதி.

மீண்டும் தட் தட் தட்.  வால் பிடித்தது போல கால்களின் ஓசைகள். கதவு திறக்கப்படாததின் பொறுமையின்மை காலடி ஓசைகளின் சத்தத்தில் தெரிந்தது.  அரை டஜன் கால் ஜோடிகளாவது இருக்க வேண்டும், மூடிய கதவை தாண்டி சத்தம் உள்ளே வர.  காலடிகளின் பொறுமையின்மையும், கதவின் தட்-டும் அவளை பாதிக்கவில்லை.

அவள் கட்டிலிலிருந்து எழுந்து அறையின் ஓரத்தில் இருந்த ஒரே ஜன்னலுக்கருகில் இருந்த ஒரே நாற்காலியில், அதில் இருந்த தூசைத் தட்டாமல் போய் உட்கார்ந்து கொண்டாள்.  நாற்காலிக்கருகே பலமுறை அணிந்து ஆடிய நடனத்துக்கு உபயோகிக்கும் காலணி இருந்தது.  வெளியே தெரிந்த அமைதிக்கும், பொறுமைக்கும் சம்பந்தமில்லாமல் அவள் மனதில் அடித்துக்கொண்டிருந்த நினைவலைகளினுடே அதிகம் பிரயத்தனப்படாமல் காலணிகளை அணிந்து கொண்டாள்.  வெளியில் இருக்கும் அவசரத்திற்கு நேர் எதிராக கடிகாரம் ஒரு வினாடியை ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு கடப்பது போல் மெதுவாக இயங்கினாள்.  முதலில் வலது கால், பின் இடது கால்.

மின் விசிறியை நிறுத்தியிருந்ததால் அறையில் வெப்பம் கொஞ்சம் அதிகமாகி, அந்த மெதுவான இயக்கத்திலும் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது.  பொறுமையிழந்தபடி இன்னும் தொடர்ந்து கொண்டிருந்த கதவு தட்டலையும், காலடி சத்தங்களையும் தவிர அங்கே வேறு சத்தமில்லை.  கதவுக்கும் அவளுக்கும் பத்தடி தூரம் கூட இருக்காது.  ஆனால் அவளுக்கு அந்த சத்தம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

காலணிகளை அணிந்ததும், நாற்காலியிலிருந்து எழுந்தாள். அவளுடைய இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரித்து அறை முழுவதும் எதிரொலித்தது.  ரத்த ஓட்டம் சரேலென்று அதிகமானது. அவளுக்கு கொஞ்சம் நிலை தடுமாறியது.  நாற்காலியின் கையை இறுக பிடித்துக் கொண்டாள்.

எப்போதோ, எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

மூச்சை இழு!

வெளி விடு!

திரும்பவும் செய்!

செய்தாள்…

கொஞ்சம் சரியானது.  ஒரு முடிவுக்கு வந்தவள் போல நிமிர்ந்தாள்.  நேராக அறையின் இன்னொரு ஓரத்தில் இருந்த ஒப்பனை மேஜைக்கு சென்றாள். ஒருமுறை கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள். மேஜை மேல் இருந்த கைப்பையை எடுத்து அதிலிருந்த பல கசங்கிய காகிதங்களுக்கிடையேயிருந்து கைக்குட்டையை பிரித்து எடுத்தாள். முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்து கைக்குட்டையை மடிக்காமல் அப்படியே கைப்பைக்குள் எறிந்தாள்.

கண்ணாடியில் மீண்டும் தன்னை பார்த்துக் கொண்டாள்.  எந்த பாவத்தையும் காட்டாத அவளுடைய வெற்று முகம் அவளை கண்ணாடியிலிருந்து பார்த்தது.  எல்லா எண்ணங்களும் இப்போது அழிந்துவிட்ட அவள் மனம் கண்ணாடியில் தெரியவில்லை. ஒரு வேளை முகத்தில் தெரிவது அகத்தின் அழகோ?

அவள் மீண்டும் தன் கைப்பையை இழுத்தாள்.  இழுத்த வேகத்தில் மேஜை மேலிருந்த விலையுயர்ந்த செண்ட் பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்ததை பொருட்படுத்தவில்லை.  உடைந்த பாட்டில்களில் இருந்து பல வாசனைகளும் வெளிக்கிளம்பியதில் எல்லாம் கலந்த ஒரு மகா வாசனை அவள் நாசி வழியே மூளையை துளைத்தது.

சலனமில்லாமல் தரையில் சிதறியிருந்த பாட்டில் துண்டுகளை பார்த்தாள்.  அறையின் மின்விளக்கு நூறு துண்டுகளாக அவளை பார்த்தது.  மீண்டும் இதயத்துடிப்பு அதிகரித்தது.  உடல் முழுதும் மீண்டும் ரத்தவெள்ளம்.

மூச்சை இழு!  வெளி விடு! திரும்பவும் செய்!

இழுத்து, வெளிவிட்டு, இழுத்து, வெளிவிட்டு வெள்ளத்தை அடக்கினாள்.

கைகள் மீண்டும் கைப்பையை இழுத்தன.  பையை கிளறி அந்த கசங்கிய காகிதத்தை தேடி எடுத்து மேஜை மேல் வைத்து இரண்டு கைகளாலும் சுருக்கம் போக அழுத்தித் தேய்த்தாள்.

காகித சுருக்கம் நீங்கியது.  அதில் சுலபமாக படிப்பது போல் ஒன்றும் இல்லை.  காஃபியோ, விஸ்கியோ எதுவோ பட்டு அவசரத்தில் துடைத்ததில் மங்கலாக ஏதோ இருந்தது.   முதன்முதலில் படித்த பொழுது அதிர்ந்ததில் குடித்தது கொட்டியது அவள் மறக்கவில்லை.

என்ன குடித்தாள் நினைவில்லை. என்ன படித்தாள் நினைவிருக்கிறது.  மற்றெல்லாம் மறந்துபோய் சில நொடிகளுக்கு எண்ண ஓட்டம், அவளது வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த கசங்கிய காகிதத்தின் வார்த்தைகளை மட்டும் சுற்றி வந்தது.  சிறிது நாட்களுக்கு முந்தைய அந்த நினைவுகளின் சில அடுக்குகள் மட்டும் மரித்துப்போய் அதில் நிரம்பியிருந்த முகங்களும் உடன்கட்டை ஏறியிருந்தன.  ஆனால் அந்த மிக முக்கிய சம்பவம் மட்டும் அவள் மனதை விட்டு அகலாது அந்த காகிதத்தில் கறையை போலவே ஒட்டிக்கொண்டிருந்தது.

இனிமேலும் இதை நினைத்து பயனில்லை போல ஒரு நீண்ட மூச்சுடன் மீதமிருந்த நினைவுகளை தீர்மானமாக பிய்த்தெறிந்தாள்.  அந்த காகிதத்திற்கு இனிமேல் அவசியம் இருக்கவில்லை.  கைப்பைக்குள் மீண்டும் துழாவி எதையோ எடுத்து தன் வலது கையில் அடக்கியபடி அழுத்தமாக நடந்து கதவை திறந்தாள்.

இத்தனை நேரம் தட்டியதில் திறவாத கதவு திடீரென திறந்ததில் வெளியே சந்தடி அடங்கி ஒரு அசாதாரண நிசப்தம் அந்த இடத்தை கவ்வியது.  பல தலைகளுக்கிடையே, வியர்த்து கசங்கிய உடையில் காதை அலைபேசியால் அழுத்தியபடி யாருடனோ அவசரமாக பேசிக்கொண்டிருந்தவனை கண்டுபிடிப்பதில் அவளுக்கு சிரமம் இல்லை.

அவனை பார்த்து போகலாம் என்பது போல் தலையை ஆட்டினாள்.  அவன் அந்த தலை ஆட்டலிலேயே அவனுடைய நெருக்கடி நீங்கி பெருமூச்சு விட்டபடி, இன்னும் பலமாக அலைபேசியபடி கூட்டத்தை விலக்கி அவளுக்கு வழி ஏற்படுத்திக் கொண்டே பாதையின் கடைசியில் இருந்த ஒரு கதவை திறந்து காணாமல் போனான்.

ஒரு சில நொடிகளில் ஒலி பெருக்கிகள் உயிர் பெற்று காணாமல் போன மேனேஜரின் கரகரப்பான குரலை பிரதியெடுத்து அரங்கம் அதிர நடனப்போட்டியின் இறுதிச்சுற்று துவங்க இருப்பதை அறிவித்தது.  பார்வையாளர்களின் சலசலப்பு இன்னும் அதிகமாகி மேடையில் ஒளிவெள்ளம் பாய, சற்றுமுன் அவள் அறையில் இருந்த மௌனத்திற்கு நேர் எதிராக ஒரு சேர டிரம்ஸ்களும், கிதார்களும் இன்னும் என்னென்னவோக்களும் சேர்ந்து திரைப்பட கடைசி காட்சி போல சத்தம் கூட்ட இவள் ஒளி வெள்ளத்தின் நடுவே கத்தி போல மேடையில் தன்னை செருகிக்கொண்டாள்.

ஒரே சத்தமாக இசைக்கருவிகளும், கரவொலிகளும் பல்லாயிரம் வாணங்கள் ஒரு சேர வெடித்ததுபோல் உச்சிக்குப்போய் சட்டென்று சுவிட்ச் போட்டது போல் எல்லாம் நின்றன. கனத்த மௌனம். ஒரு மெல்லிய புல்லாங்குழல், பின் ஒரு வயலின், பின் மற்ற கருவிகள் சேர, பல நாள் ஒத்திகை பார்த்து பார்த்து அவள் அங்கத்தில் ஒன்றாகிவிட்ட இசைக்கு அவள் ஆடினாள். சற்றும் பிசிறில்லாத, ஒவ்வொரு அசைவும் வெண்ணெயில் செய்தது போல, அவள் பாதங்களுக்கடியில் இருப்பது தரையா இல்லை மேகப்பொதியா என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரும்படி சுழன்றாள்.

ஆடிய ஆட்டத்தின் வேகத்தில் அவள் இதயத்துடிப்பு பேரதிகமாக ஆடி நின்ற அவள் கால்கள் துவண்டன. ஒரு வினாடி அவள் மனதில் அந்த கசங்கிய கடிதத்தின் வாக்கியங்கள் மீண்டும் தோன்ற சற்றே கால் மடிய அவள் நமஸ்கரிப்பது போல் மேடையில் குனிந்து சரிய அதுவும் நடனத்தின் அசைவாகி எப்போது இசை நின்றது, எப்போது அவள் நிறுத்தினாள் என்று தெரியாமலே அவள் உடல் நிற்க மீண்டும் ஒரு மௌனம் அரங்கத்தை சூழ்ந்தது.

ஒரு சில நொடிகள்தான்.

பார்வையாளர்கள் முதலில் ஒவ்வொருவராக பின்னர் கொத்து கொத்தாக சொர்க்கத்திலிருந்து நிஜ உலகுக்கு மீண்டு வர, கரவொலி மெலிதாக துவங்கி பின்னர் கனமாகி, இன்னும் கனமாகி ஒரு உச்சியை எட்டி சன்னமாகி இன்னும் சன்னமாகி ஒரு தீவிர சொர்க்கரின் தனித்த கையொலி தூரத்தில் கேட்க அவள் கண்கள் செருக வலக்கையில் அவள் இன்னும் பற்றியிருந்த குப்பி உருண்டோடியது.

*******

பின் குறிப்பு: இந்த கதையை எத்திராஜ் கல்லூரியில் கொடுக்கப்பட்ட ஒரு தலைப்புக்கு ஆங்கிலத்தில் எழுதியது என்னுடைய முதல் மகன் நிரஞ்சன். கதையை நிரஞ்சன் எழுதியபடி ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லுங்கள். நிரஞ்சன் எழுதிய வேறு இரண்டு கதைகள் இங்கேயும், இங்கேயும்.

*******

முக்கிய குறிப்பு: இந்த கதை பிடித்திருந்தால் தமிழிஸ் தளத்தில் ஓட்டளிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Bookmark and Share

Readers also liked

5 Comments »

  • Uma said:

    Nice one, padikka swarasiyamaga irundadhu… ezhudaradhu ellarum seiyallaam, Aanallum unga family-ke oru rasanai iruppadai kandu viyandean…

    Good Luck to Niranjan.

  • Ram N said:

    Truly brilliant …….. what a flow …. my wishes & congrats to N

  • triplicani (author) said:

    Uma / Ram,

    Thanks for your comments.

  • Vijayasarathy R said:

    கதை அற்புதம். அவளின் ஒரு வினாடி ஒரு நிமிடமானதை எழுதியும், படிப்பவருக்கு விறுவிறுப்பு சற்றும் குறையாத நடை.

    என்னதான் உங்கள் மகன் ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும், அதை தமிழாக்கம் செய்ய, அதுவும் இவ்வளவு நன்றாக செய்ய இரண்டும் அம்சங்கள் முக்கியம்.

    1. ரசிப்புத்தன்மை 2. சொல்லாடல்.

    படித்த எனக்கு இதுபோல பல நல்ல ஆங்கில நூல்களை தமிழாக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிட்டீர்கள் சத்தியமூர்த்தி.

    // பார்வையாளர்களின் சலசலப்பு இன்னும் அதிகமாகி மேடையில் ஒளிவெள்ளம் பாய, சற்றுமுன் அவள் அறையில் இருந்த மௌனத்திற்கு நேர் எதிராக ஒரு சேர டிரம்ஸ்களும், கிதார்களும் இன்னும் என்னென்னவோக்களும் // மிகவும் பிடித்த வரிகள்.

  • akshay said:

    ahha ohoo besh bale

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.