Home » Cricket, Headline, Tamil-தமிழ், அனுபவம்

டேவிட் ஷெப்பர்ட் – ஒரு நினைவு குறிப்பு

30 October 2009 948 views 10 Comments
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


குள்ளமான, தாட்டியான உருவம்.  பார்க்கும் போது பல சமயம் (லாரல்) ஹார்டி புகழ் ஹார்டியை நினைவு படுத்தும் தோற்றம். நடையிலும், நடவடிக்கையிலும் கம்பீரம்.

மைதானத்தில் அம்பயராக நின்றாலே வீரர்கள் எல்லாம் ஒரு மாதிரி பயந்து ஒழுங்காக நடந்து கொள்ளும் ஆளுமை.  மிகப் பெரும்பாலும் தவறு செய்யாமலும், மிக நடுநிலைமையாகவும் தீர்ப்பு சொல்லக்கூடிய திறமை – இவைதான் நேற்று காலமான இங்கிலாந்து கிரிக்கெட் அம்பயர் ஷெப்பர்ட்.

நடனமாடிய நடுவர்

நடனமாடிய நடுவர் 27-12-1940 ~ 27-10-2009

அம்பயர் என்றாலே நடுநிலைமைதான் வகிக்க வேண்டும் என்று இருந்தாலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான் அம்பயர்கள் எதிரே விளையாடும் நாட்டுக்கு எதிராக குறி சொல்லுவதே பழக்கமாக இருந்த காலத்திலும், நீதி வழுவா நெறி முறையில், மேதினியில், பட்டாங்கில் உள்ளபடி பணியாற்றிய அம்பயர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர் ஷெப்பர்ட்.  இவரும் தவறுகளை செய்திருக்கிறார் என்றாலும், மனதறிந்து தவறாக தீர்ப்பளித்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

பாகிஸ்தானுக்கும் – இங்கிலாந்துக்கும் இடையே நடந்த டெஸ்ட் மேட்ச் ஒன்றில் இவர் சக்லைன் முஷ்தாக் போட்ட மூன்று கோடு தாண்டிய பந்துகளை (No Balls) கவனிக்காமல் விட்டு அந்த மூன்று பந்துகளிலும் அவருக்கு விக்கெட் கிடைத்தது அவருடைய அம்பயர் வாழ்க்கையின் மோசமான நேரம் என்று அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார்.  கிரிக்கெட் அம்பயரிங் செய்வதை விட்டுவிடலாமா என்று கூட அப்போது யோசித்திருக்கிறார்.  அவர் மீண்டும் அம்பயரிங் செய்ய தொடர்ந்ததற்க்கு நண்பர்களின் தேறுதல்தான் காரணம்.

ஒவ்வொரு அம்பயருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு.  நம்ம வெங்கட் எல்லா சிக்னலையும் கொஞ்சம் ரஜினி ஸ்டைலாக விரைப்பாக செய்வார்.  அவுட் கொடுக்கும் போது அவர் தன் எல்போவை (elbow) எல் போலாக்கி சைடு வாக்கில் கையை தூக்கி அவுட்டாக்குவார்.

இப்போது இருக்கும் அம்பயர்களில் காமெடி அம்பயராக பெயர் பெற்றிருக்கும் பில்லி பௌடன் அவுட் கொடுப்பது பேட்ஸ்மனுக்கு பெவிலியன் இருக்கும் இடம் சுட்டி.

ஷெப்பர்ட் அவுட் கொடுக்கும் விதம் அலாதி.  தன் கனமான கையை உயர்த்தி ஆள் காட்டி விரலை பேட்ஸ்மனை நோக்கி காட்டி “ஒன்னதான் சொல்றேன்; மரியாதையா வெளில போ! இனிமே இங்க நின்ன ஒததான் விழும்” என்பது போல் விரலை ஆட்டுவது அவர் பாணி.

க்ரினிட்ஜ் – ஹெய்ன்ஸ், கவாஸ்கர் – சௌஹான், சேவாக் – கம்பீர், டெண்டுல்கர் – கங்கூலி – என்று மட்டையடி வீரர் ஜோடிகள் புகழ் பெறுவதுபோல், அம்பயரிங்கில் புகழ் பெற்ற ஜோடி – டிக்கி பேர்ட் – டேவிட் ஷெப்பர்ட்.  பேர்ட் கொஞ்சம் ஒல்லி என்பதால், இவர்கள் இருவரும் மைதானத்துக்குள் நுழைவது லாரல் – ஹார்டி மைதானத்துக்குள் நுழைவது போல இருக்கும்.

ஷெப்பர்ட் என்றதும் ரசிகர் மனதில் சட்டென்று நினைவுக்கு வருவது நெல்சன் என்று அறியப்படும் எண்கள் மொத்த ரன்களாகும் (111, 222, 333, 444) சந்தர்ப்பங்கள்.  அப்படி அமையும் சந்தர்பங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்கிற அவரது கிராமத்து நம்பிக்கையினால் மனிதர் ரன் மாறும்/ ஏறும் வரையில் குட்டி போட்ட யானை போல (அவரை போய் பூனை என்று சொல்லலாமா?) இருந்த இடத்திலேயே ட்ரெட் மில்லில் போல ஒரு தப்படி எடுப்பார்.

இது அவர் நேர் அம்பயராக இருந்தாலும், ஸ்ஃகொயர் லெக் அம்பயராக இருந்தாலும் கண்டிப்பாக நடக்கும்.  ரன் மாறும் வரை மனிதரின் முகத்தில் தெரியும் டென்ஷன் கன்னி மேட்சில், முதல் பந்தை எதிர் கொள்ள இருக்கும் பேட்ஸ்மேனை விட அதிகமாக இருக்கும்.

சில சமயம், ராகுல் ட்ராவிட் போன்றவர்கள் நெல்சனாவது, மண்ணாங்கட்டியாவது என்று தொடர்ந்து கட்டை போட்டு ஷெப்பர்டை வெறுப்பேற்றுவார்கள். அப்போது மட்டும் விக்கெட் விழுந்து விட்டால் ஷெப்பர்ட் அவுட் கொடுக்க மேலே குறிப்பிட்ட மாதிரி விரலாட்டுவது “அப்பவே சொன்னேனே கேட்டியா?” பாணியில் இருப்பதாக தோன்றும்.

இப்போது டேவிட் ஷெப்பர்ட் பற்றி சில குறிப்புகளை (வைகிபீடியாக்கு நன்றியுடன்) பார்ப்போம்:

* பிறந்தது 27 டிசம்பர் 1940 (மறைந்த என் தந்தையை விட சரியாக ஒரு வருடம் ஒரு நாள் சின்னவர்)

* அம்பயராவதற்கு முன் 14 வருடங்கள் இங்கிலாந்து கௌண்டி கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். டீம் க்ளோசஸ்டர்ஷைர், முதல் மேட்சிலேயே சதம்; மொத்தம் 12 சதங்கள்; தன் கௌண்டிக்கு கேப்டனாகவும் பணியாற்றியிருக்கிறார்.

* பாரமான உடம்பினால், அதிகம் ஓடாமல்தான் ஓட்டங்களை குவித்திருக்கிறார்.  மனிதர் ஆட்டத்தில் ஒன்று காட்டு அடி இல்லையென்றால் மென்மையாக பந்தை சந்து பார்த்து செலுத்தும் நுட்ப தட்டல்கள். ஒருமுறை அவர் அடித்த அடியில் பந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த ரசிகர் மேல் பட, ரசிகர் ஆட்டத்தை விட்டு ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதாகிவிட்டதாம்.

* அம்பயரானது 1981ல்.  அதில்தான் அவர் உலகப்புகழ் பெற்றார்.

* நெல்சனுக்கு நடனமாடுவதை சின்ன வயதில் கிரிக்கெட் ஆடும் காலத்திலேயே செய்வாராம்.

* கிட்டத்தட்ட 25 வருடங்கள் நடுவராக இருந்த பின்னால் 2005ல் (ஸ்டீவ் பக்னரை போல இல்லாமல்) ஓய்வு பெற்றார்.  அம்பயராக 92 டெஸ்ட் மேட்சுகள், 172 ஒரு நாள் போட்டிகள்

* எல்லா நாட்டு வீரர்களும் அவரை மிகவும் விரும்பினார்கள், மதித்தார்கள் என்பதற்கு சாட்சிகள், அவருடைய கடைசி போட்டியில் பிரியன் லாரா கையெழுத்திட்டு பரிசளித்த பேட்; நியுசிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் அவருக்கு (ஆஸ்திரேலிய கண்டத்தில் அவருடைய கடைசி போட்டிக்காக) கொடுத்த அணிவகுப்பு மரியாதை

* ஷெப்பர்டின் நெல்சன் ஆட்டம், அவருக்காக இங்கிலாந்தில் வைக்கப்பட்ட சிலையிலும் இருக்கிறது. மனிதர் மைதானத்தில் செய்வதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம் – பெவிலியனில் இருந்தாலும் செய்வாராம் – நாற்காலியில் இருந்தபடி ஒரு காலை மட்டும் தரையில் படாமல் தூக்கி!

* இவருடைய நெல்சன் ஆட்டம் முதலில் வெளியே வந்தது பி.பி.சி. தொலைக்காட்சி வர்ணனையாளர் பிரியன் ஜான்ஸ்டன் மூலமாக.  யாரோ கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு நெல்சன் ஆட்டத்தை கவனித்து ஜான்ஸ்டனுக்கு சொல்ல, ஜான்ஸ்டன் தொலைக்காட்சியில் ரகசியமாக நமக்கு சொல்லிவிட்டார்.

இவருடைய நெல்சன் குதி பார்த்து பார்த்து மற்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு வந்ததோ இல்லையோ, எனக்கு அந்த நம்பிக்கை வந்துவிட்டது என்பது உண்மை.   இந்தியா விளையாடும் போது ஸ்கோர் 111, 222 என்று இருந்தால் நான் கொஞ்சம் நெர்வஸ் ஆகிவிடுவேன்.  உண்மையில், 111க்கு அருகில் வரும்போது அந்த எண்ணை மிதிக்காமல் இரண்டோ, நான்கோ எடுத்து 112க்கோ அதற்கு மேலேயோ தாவி விட்டால் எனக்கு கிடைக்கும் நிம்மதி இமயமலைக்கு போனாலும் கிடைக்காது.

மாறாக எதிர் டீம் விளையாடும் போது, அவர்கள் ஸ்கோர் 111க்கு வரவேண்டும் என்று மிக விரும்புவேன்.  அந்த ஸ்கோர் வந்துவிட்டால் என்னுடன் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் என் தம்பிகளிடம் “இந்த ஓவர்ல கண்டிப்பா விக்கெட் விழும் பாரு” என்பேன்.  அப்படியே விக்கெட் விழுந்ததில், நெல்சன் நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.  விழாததால் குறைந்ததில்லை.

நெல்சன் பற்றி (அப்போது) தெரியாத, திருவல்லிக்கேணி காழியூர் நாராயணனை தெரிந்த என் தம்பிகள் என் ஜோதிடத்திறமை அவருக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை என்று நம்பினார்கள்.  அடுத்த விக்கெட் எப்போது என்ற அவர்கள் கேள்விக்கு, 222 வரை நான் வாய் திறந்ததில்லை.

சில பேர் இறந்துவிட்டார்கள் என்பதை நம்புவதும் கடினமாகத்தான் உள்ளது.  இறந்தும், இறவாத நிலையை அடைகிறார்கள்.  டேவிட் ஷெப்பர்ட் இந்த சிலரில் ஒருவர்.  தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மேட்ச் நடந்தால் கண்டிப்பாக ந்யுட்ரல் அம்பயராக (மனிதன்தானே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ந்யுட்ரல்?) ஷெப்பர்ட்தான் இருப்பார்.  111க்கு அங்கும் கண்டிப்பாக குதிப்பார்.

இது என் குறிப்பு: பதிவு படித்திருந்தால் இங்கே க்ளிக் செய்து தமிழிஸ் தளத்தில் பிரபலமாக்குங்கள் :)

இது்வும் உங்களுக்கு பிடிக்கலாம்!

Bookmark and Share

Readers also liked

10 Comments »

  • Ram N said:

    Tamilish’ill Vote போட்டாச்சு சார்

  • triplicani (author) said:

    ராம்,

    அவ்வளவுதானா? சொல்றாப்ல வேற ஒண்ணும் இல்லாம, “அய்யய்யோ, அய்யய்யோ பிடிச்சிருக்கு” அப்படின்னு சொல்லிட்டிங்களோ?

  • என். சொக்கன் said:

    //ஷெப்பர்ட் அவுட் கொடுக்கும் விதம் அலாதி. தன் கனமான கையை உயர்த்தி ஆள் காட்டி விரலை பேட்ஸ்மனை நோக்கி காட்டி “ஒன்னதான் சொல்றேன்; மரியாதையா வெளில போ! இனிமே இங்க நின்ன ஒததான் விழும்” என்பது போல் விரலை ஆட்டுவது அவர் பாணி//

    //விக்கெட் விழுந்ததில், நெல்சன் நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. விழாததால் குறைந்ததில்லை//

    இந்த ரெண்டு வரியும் சூப்பர், கட்டுரையும்தான் – பாராட்டுகள்!

    டேவிட் ஷெப்பர்டைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது என்று நினைக்கிறேன். அந்தக் குண்டு உடம்பும் கூர்மையான கண்களும் கலகலப்பான பழகுமுறையும் மறக்கமுடியாதவை.

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

  • Vijayasarathy R said:

    வோட்டு போட்டாச்சு…இருங்க வரேன்…வரவரைக்கும் நீங்க நெல்சனில் நிற்க வேண்டாம்.

  • Uma said:

    Hi,

    Nice tribute to David Shepard.

    Voted in Tamilish :-)

    Regards,
    Uma

  • சீனு said:

    இன்னொன்றையும் விட்டுவிட்டீர்களே. ஆட்டம் தொடங்கும் முன் அவர் சத்தமாக சொல்லும் “ஃப்ளே”.

  • triplicani (author) said:

    @ சீனு,

    விளையாட்டா விட்டுட்டேன் போல இருக்கு :) – நீங்க சொல்லன்னு வச்சுக்கலாமா?

    @ உமா,

    நன்றி! இந்த வாக்குப்பதிவு கடமை உணர்ச்சிக்கு.

  • T.P.Anand said:

    Very nice tribute to a great umpire.

  • Sampath said:

    Very interstingly written. Shows your command in tamil and observation skill. Liked it.

  • triplicani (author) said:

    Thanks Sampath. I am sure if you had written it, you would have given a perspective and view that no one would have imagined.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.