Home » Headline, Humor, Tamil-தமிழ், நகைச்சுவை

விமானத்தில் பிடித்த சீட்டு

25 October 2009 3,821 views 8 Comments

எனக்கு விமான பயணங்களில் இருக்கப் பிடிக்காத இருக்கை இந்த நடு இருக்கைதான்.  ஜன்னலோரம்தான் மிக பிடித்தது.  இல்லையென்றால் வெளி ஓரம்.

ஜன்னலோரம் என்றால் விமானம் ஏறும் போதும், இறங்கும் போதும் தெரிந்த இடங்கள் தெரிகிறதா என்று மேற்பார்வை இடலாம்.  இருக்கை இறக்கைக்கு மேல் இல்லாதிருப்பது முக்கியம். ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து மேகப் பொதிகளையும், ஏறும் / அணையும் சூரியனால் சிகப்பாகும் வானையும் பார்ப்பது ஆனந்தம். காமிரா கையனாக இருந்தால் சாட்டிலைட் போல படமும் பிடிக்கலாம். அதனால், செக் இன் செய்யும் போதே ஜன்னலோரம் கேட்டு வாங்கும் என்னைப்போல் ஒருவர் பலர். (ஸ்ரீலங்கனில் பயணித்தபோது எடுத்த படங்களின் கோலாஜ் கீழே).

Window seat view

விமானம் மிதந்தபடி தரை இறங்கும் போது காலடியில் காட்சிகள் மெதுவாக மாற நம்ம வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவது லேண்ட்மார்க் தெரிந்தால் உள்ளம் சீட் பெல்டையும் தாண்டி ஒரு துள்ளு துள்ளுவதற்கு ஈடு இணை கிடையாது.

அதிசயமாக நம்ம வீடு அல்லது அலுவலகம் தெரிகிறதா என்று எப்போதுமே ஆவலாக பார்ப்பதுண்டு.  இதுவரை மேற்கொண்ட நூற்றுக்கணக்கான பயணங்களில் ஒருமுறை கூட தெரிந்ததில்லை.  தெரிய வேண்டுமானால் வீடு மெரினா பீச் நடுவிலோ, சேப்பாக் ஸ்டேடியம் க்ரவுண்டிலோ, டைடல் பார்க்கிலோ இருந்தால்தான் நடக்கும் என்று இவ்வளவு பயணத்திற்கு பிறகு நியூட்டனின் ஐந்தாம் விதியாக புரிந்துவிட்டது. (நாலாம் விதி ஏற்கனவே குஷியான இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா மூலம புரிந்துவிட்டது).

ஜன்னலோரத்தில் இருப்பதில் இன்னொரு சவுகரியம், நீண்ட பயணமானால் விமான சுவர்(?) பக்கமாக சாய்ந்தும் தூங்கலாம்.  மூச்சா வரும்போது இருவர் அல்லது ஒருவரின் காலை மிதிக்காமல், கிட்டத்தட்ட மடியில் உட்காராமல் போக முடியாது என்கிற அல்பசிங்கை அசவுகரியம் நீங்கலாக இது வசதியான சீட்.

மூன்று சீட்டுகளில் நடு பிடிக்காது.  முக்கிய காரணம், ஜன்னலோரரும், அந்தப்புறத்தாரும் நாலு கை ரெஸ்டை பாகப்பிரிவினை செய்து ஆளுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டு நம்மை அம்பேல் ஆக்கி விடுவார்கள். பிறகு முழு பிரயாணமும் நாம் ஏவிஎம் சரவணன் போல் அடக்க முடியாத அடக்கத்துடன் கையை கட்டிக்கொண்டு போக வேண்டியதுதான்.  இதில் ஒருவர் பருத்த தேகத்தவராக இருந்துவிட்டால், என்னதான் பணிப்பெண்கள் சொர்க்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேவதைகளைப் போல இருந்தாலும் நமக்கென்னவோ பயணம் முடியும் வரை நரகம்தான்.

இந்த நடு சீட்டுல சாப்பிடுவது ஒரு மகா கொடுமை.  கை ஏந்தி பவனில் சாப்பிட்ட அனுபவம் இருக்க வேண்டும்.  ஒரே வித்தியாசம் இங்கே உட்கார்ந்தபடி சாப்பிடலாம்.  ஆனால், கை ஏந்தி பவனில் நின்றபடி சாப்பிட்டாலும் முழுக்க சாப்பிடலாம் –  இங்கே கிட்டத்தட்டதான்.

ஓர சீட்டு, வெளியே பராக்கு பார்க்க முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட அந்தப்புறம்தான். சக பயணிகள் வழுக்கி விழும் அளவுக்கு ஜொள் வாய்ப்பு அதிகம்.  மேலும், கீழும் நடந்து கொண்டே இருக்கும் பணிப்பெண்களின் புடவை, ஸ்கர்ட் உரசும்.  சரியாக வைக்காத பயணப்பைகளை சரி செய்யும் பணிப்பெண்களுக்கு உதவி செய்து ஒரு புன்முறுவல் வாங்கலாம்.

போனசாக ப.பெ. தேவதை லிப்ஸ்டிக் உதட்டுடன் டைட் க்ளோசப்பில் “வாட் டு யு வாண்ட் டு ட்ரிங்க் சார்ர்ர்ர்” என்று ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கக்கூடிய இனிமைக்குரலில் கேட்கும்போது, ஒரு கணம் மனதில் கமல் வந்து உதடுகள் தயாராக, குடிக்காமலே போதை தலைக்கேறி விமானம் 35000 அடி பறந்தால் நாம் 70000 அடிக்கு எகிறுவோம்.

இந்த தேவதை வாய்ப்புகள் விமானம் தலைகீழே பறந்தாலும் இந்தியன் ஏர்லைன்சில் கிடைக்காது என்பது நியுட்டனின் ஆறாவது மற்றும் நம் தலை விதி.  எல்லா தேவதைகளையும் கிங் ஃபிஷர் கொத்திக் கொள்கிறதோ? என்பது கிங் ஃபிஷர் குடித்தபடி ஏர்லைனும்கிற என் நண்பனின் சந்தேகம்.  என் மனைவி என்னை அதிக பட்சம் ஸ்ரீலங்கன் வரைதான் அனுமதித்திருக்கிறாள் –  எனக்கு மிகவும் பிடித்த படம் மீண்டும் கோகிலா என்பது (இதுவரை) தெரியாமல். (ஏன் என்று கேட்பவர்கள் ஸ்ரீலங்கன் பணிப்பெண்கள் உ(இ)டையையும், மீ.கோ.வில் கமல் ஸ்ரீதேவி காட்சிகளையும் பார்க்காமல் நரகத்துக்கு போகாதீர்கள்).

விமானப் பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் (என் மனைவியும் இதை படிக்கும் வாய்ப்பு இருப்பதால், திருமணத்துக்கு முன்பு என்று உள்ளளாக்கட்டிக்கு போட்டுக்கொள்ளலாம்) எதிர்பார்ப்பது அடுத்த சீட்டு ந(நை)பர் யார் என்பது.  மனதுக்குள் கட்டும் பயணதூர காதல் கோட்டையில்  த்ரிஷா, ஷில்பா ஷெட்டி, மேக்னா நாயுடு, சமீரா ரெட்டிகள் இருந்தாலும், உண்மை அனுபவத்தில் பக்கத்து சீட்டு பகிர்ந்தவர்கள் பாட்சாவும், மளிகைக்கடை செட்டியும், பரத் ரெட்டியும், பல்ராம் நாயுடுகளுமே.

எனக்கு தெரிந்து நினைத்தாலே இனிக்கும் கமலுக்கு மட்டும்தான் ரஜினி புண்ணியத்தில் ஜெயப்ரதாவின் பக்கத்து சீட்டு கிடைத்திருக்கிறது.  (சந்தேகம் இருப்பவர்கள் “Jammy” ராஜனின் “எப்படியாவது பக்கத்து சீட்டில் அழகிய பெண்” முயற்சியை படித்துப்பாருங்கள்).

இந்த “அழகிய லைலா” எதிர்பார்ப்பு இளம் வயதில் ரயில் பயணங்களிலும் இருந்திருக்கிறது. ஒரே வித்தியாசம் அப்போதெல்லாம் ரயில் ஏறும் முன்பு ரிசர்வேஷன் நோட்டீஸ் ஒட்டியதுமே நண்பர்கள் புடை சூழ அதை படிக்க ஓடுவோம்.  பரீட்சை ரிசல்ட் போல தேடுவது பெண் பெயர், வயது விவரம்.  அப்போதும் நம் அதிர்ஷ்டம் கூடவே துரத்தி மரகதவல்லி, தங்கம்மாள் என்று வயதான மூதாட்டிகள் தென்படுவார்கள் அல்லது மிஸஸ். ஜனகராஜ்.

ரயில் பயணத்தில், கிதார் சகிதம் நெஞ்சுக்குள் மாமழை பெய்ய சமீரா ரெட்டியை காதலிக்க வாழ்க்கை திரைக்கதையை கௌதம் மேனன் எழுதியிருக்க வேண்டும்.

சீட்டை பிய்த்துக்கொண்டு அதிர்ஷ்டம் அடிக்க திரைக்கதை வேண்டும் என்கிற என் தியரிக்கு இன்னுமொரு உதாரணம் ஒரு அழகிய மிஸ்ஸை சீட் மாற்றத்தால் மிஸ் செய்து பின் இரண்டு அழகிகளுக்கு நடுவே நடு சீட் பெறும் டோகோமோ அதிர்ஷ்டக்கார அசட்டு லுக் ஹீரோ.

நினைத்தாலே இனிக்கும் கமல் போலவோ, வாரணம் ஆயிரம் சூர்யா போலவோ, அட்லீஸ்ட் டோகோமோ விளம்பர ஹீரோ போலவோ – சரியான திரைக்கதை என் வாழ்க்கையில் அமையாததால், சமீபத்தில் நான் சென்னைக்கு பயணித்தபோது என் பக்கத்து சீட்டில், சவுதி அரேபியாவில் ஏதோ ஷேக்குக்கு பீடி பிடித்தபடி ஆடு மேய்ப்பவர் –  விமானத்திலும் விடாமல், பாத்ரூம் சென்சர்களை ஏமாற்றி பயணம் முழுவதும் பீடி மணத்தார்.

இந்த பதிவு பிடித்திருக்கிறதா? இங்கே க்ளிக் செய்து தமிழிஸ் தளத்தில் ஓட்டளித்து பிரபலமாக்குங்கள்

8 Comments »

 • Vijayasarathy R said:

  //அப்போதெல்லாம் ரயில் ஏறும் முன்பு ரிசர்வேஷன் நோட்டீஸ் ஒட்டியதுமே நண்பர்கள் புடை சூழ அதை படிக்க ஓடுவோம். பரீட்சை ரிசல்ட் போல தேடுவது பெண் பெயர், வயது விவரம். அப்போதும் நம் அதிர்ஷ்டம் கூடவே துரத்தி மரகதவல்லி, தங்கம்மாள் என்று வயதான மூதாட்டிகள் தென்படுவார்கள் அல்லது மிஸஸ். ஜனகராஜ்// – இதை ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் செய்தார்கள், செய்கிறார்கள், இன்னும் வர காலங்களிலும் செய்வார்கள்.

  அல்பசிங்கை அசவுகரியம் – இந்த அல்பசிங்கை என்றால் என்ன சார்?

  ஒரு முறை நான் என் தட்டிலிருந்த வடையை தேக்கரண்டியால் குத்த அது பக்கத்தவரின் தட்டில் விழ, அவ்ர் மேலே ஒரு முறை ஆச்சரியமாக பார்த்துவிட்டு, அதையும் சாப்பிட்டு முடித்தார்.

  நான் மீ.கோ கமல்-ஸ்ரீதேவியையும் பார்த்துவிட்டேன் ஸ்ரீலங்கனிலும் பயணித்துவிட்டேன்…அப்போ எனக்கு சொர்க்கம் தானே….”சொர்க்கம் ஸ்ரீலங்கனிலே”.

 • Ram N said:

  ஏ வி எம் சரவணன் ஸ்டைல் யோசிக்க யோசிக்க விலா நோகிறது …..

  எனக்கும் “அல்பசிங்க” என்றல் என்ன என்ற டவுட் உள்ளது …

  மீ. கோ ….. மாதிரி சீடையை தூக்கிபோட்டு பிடிக்கும் சான்ஸ் கிடைத்தால் நலம் …….

 • R Sathyamurthy (author) said:

  Vijayasarathy, Ram N,

  அல்பசிங்கை என்றால் மூ-வில் ஆரம்பித்து சா-வில் முடிந்து நடுவில் ச் கொட்டும் விஷயம்.

  மீ.கோ. பார்க்காமல் நரகத்துக்கு போகமாட்டீர்கள் என்று சொன்னேன். எல்லா சினிமாக்காரர்களும், நாளிதழ், வார இதழ் ஆசிரியர்களும், நிருபர்களும், டி.வி. சீரியல் டைரக்டர்களும் நடிகர்/ நடிகைகளும் நரகத்தில்தான் இருப்பார்கள். அதனால் சொர்க்கம் வேண்டாம். வெறும் நல்லவர் மட்டுமே இருப்பதால் போரடிக்கும். போகாதீர்கள். 🙂

  ராம், மீ.கோ. – ஸ்ரீதேவி இடையை விட்டு சீடையை பிடித்த உங்களுக்கு தண்டனை சொர்க்கம்தான்.

 • Ram N said:

  நண்பரே … தீபாவை விட்டிட்டு ஸ்ரீதேவி மட்டும் உங்கள் கண்களுக்கு தெரிந்தாரா ? …… மீ. கோ வில் .
  அதனால் தான் சீடை மேட்டர் பற்றி எழுதினேன் …..

 • என். சொக்கன் said:

  இது அநியாயம், நான் எழுதணும்ன்னு நினைச்சுவெச்சிருந்த தலைப்பை இப்படித் தெரியாம சுட்டு எழுதிட்டீங்களே, உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கம் ஏற்றம் எதுவுமே கிடையாதா?

  :)))))))))

  Jokes apart, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, ஒரு புது வேகம், நேர்த்தி தெரியுது, கிட்டத்தட்ட முழுக் கட்டுரையும் தனியே quote செய்து பாராட்டக்கூடிய தரத்தில வந்திருக்கு – வாழ்த்துகள்!

  அது சரி, எங்கே ஓட்டுப் போடறது?

  – என். சொக்கன்,
  பெங்களூர்.

 • triplicani (author) said:

  சொக்கன் சார்,

  சொக்க வைக்குதே ஒங்க பாராட்டு! நன்றி.

  ஓட்டு போட சொல்லியா தரணும் ஒங்களுக்கு?

 • Muruganantham Durairaj said:

  அருமை .. முழுவதும் ரசித்தேன் ..

  சொக்கன் said as // கிட்டத்தட்ட முழுக் கட்டுரையும் தனியே quote செய்து பாராட்டக்கூடிய தரத்தில வந்திருக்கு – வாழ்த்துகள்!//

  Agreeing this totally.

 • triplicani (author) said:

  முருகானந்தம் துரைராஜ்,

  வாங்க! வணக்கம். உங்கள் பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.