அடுத்த காலர் லைன்ல இருக்காரு
எல்லா தமிழ் சேனல்களிலும் பானை செய்யும் அல்லது ஆணி பிடுங்கும் விற்பன்னரை அழைத்து வந்து பேட்டி எடுத்து நேரலைகிறார்கள்.
அந்த நேரலையின் போது டிவி திரையில் கீழே ஓரிரு தொலைபேசி எண்கள் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த எண்ணில் கூப்பிட்டால் நாம் ஆயிரம் ஆணி பிடுங்கிய அபூர்வ விற்பன்னரிடம் நமக்கு ஆணிபிடுங்குவதில் இருக்கும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என்பது நோக்கம்.
திரையில் எண் நீந்திக் கொண்டே இருந்தாலும் போன் வரும் வரை விற்பன்னருக்கு பொழுது போக வேண்டும் என்பதற்காகவும், போன் செய்யாமல் ச்சும்மா பார்த்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்காகவும் நிகழ்ச்சி நடத்துபவர் ஆ.பி.வி.யிடம் ஆ.பி.தல் பற்றிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கொடுத்த கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பார்.
நிகழ்ச்சி நடைபெறும் ஒரு மணி நேரத்தில் முடிந்த அளவு விற்பன்னரின் துறை சம்பந்தப்பட்ட செய்திகளை நேயர்களுக்கு கொடுக்கவும், நேயர்களின் சந்தேகங்களை தீர்க்கவும் முயற்சி செய்கிறார்கள்.
பொதுவாக இந்த நிகழ்ச்சி மருத்துவம், கல்வி-மேல்படிப்பு, பங்கு சந்தை, வேலை வாய்ப்பு இவை சார்ந்தே இருக்கும்.
சில சமயம் நல்ல கேள்விகளும், நம் அறிவை விரிவு செய்வது போல தகவல்கள் அடங்கிய பதில்களும் இருக்கும்.
ஆக நோக்கம் நல்ல நோக்கமே.
ஆனால் நிகழ்ச்சி எப்படி நடக்கிறது?
வந்த விற்பன்னர் கோர்வையாக எதுவும் சொல்ல முடியாமல் பேட்டியாளர் கேள்வி, பதிலுக்குள் போன், சரியான லைன் இல்லை, மீண்டும் பதில் தொடர்ச்சி, சரியாக லைன் கிடைத்த போன், அதற்கு பதில், மீண்டும் பேட்டி விட்ட இடத்தில் தொடர்ச்சி, இடையில் போன், அந்த போன் பதிலுக்கு கிளை கேள்வி போன் என்று போகின்றன இந்த நிகழ்ச்சிகள்.
இவர்கள் ஏன் இந்த நிகழ்ச்சிகளை செமினார் வடிவத்தில், முதலில் விற்பன்னருடன் பேட்டி கடைசி 15 நிமிடங்கள் தொலைபேசி கேள்வி பதில்கள், தொலைபேசி வராத சமயத்தில் ஏற்கனவே பேசியதன் slide show என்று செய்யக்கூடாது?
இந்த நேரலை உரையாடல் நிகழ்ச்சியில் இப்போதைய ரூபத்தில் எரிச்சல் கலந்த காமெடிதான் உண்டு. முதலில் ஒரு ஐந்து நிமிடத்துக்கு யாகாவாராயினும் நாகாக்க என்று எல்லோரும் முடிவு எடுத்தாற்போல் ஒரு காலும் வராது.
இங்கே நிலையத்தில் இருவரும் கால் மேல் கால் போட்டபடி பேச அறிமுகப் படலம் முடிந்து பேச ஆரம்பித்து நடத்துநர் கேள்வி கேட்க ஆ.பி.வி. பதில் தர ஆரம்பிப்பார்.
அவர் பாதி பதிலில் இருக்கும் போது நடத்துநர் “மேற்கொண்டு நீங்க பேசறதுக்கு முன்னால திருநெல்வேலியிலருந்து ஒரு நேயர் லைன்ல இருக்கார். அவர்கிட்ட பேசலாம்”
“ஹலோ”
……..
“ஹலோ ……”
……..
“ஹலோ….”
“தொடர்பு கிடைக்கல, சார் நீங்க சொல்லுங்க ஆணி புடுங்கறதுக்கும் முன்னால ஸ்டூல், ஆணி புடுங்கற சுத்தி எடுத்துக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க”
“ஆமாம், சுத்தி எடுத்துக்கிட்டு, ஸ்டூல சுவத்துக்கு பக்கத்துல போட்டுகிட்டு”
இடைமறித்து “நாம மேல பேசறத்துக்க்கு முன்னால, இன்னொரு நேயர் லைன்ல இருக்கார்”
“ஹலோ”
“ஹலோ” “ஹலோ” “ஹலோ”
“உங்க பெயர் என்ன, எங்கருந்து பேசறீங்க”
“ஹலோ” , “ஹலோ” “ஹலோ”
“நீங்க பேசறது கேக்குது’, “உங்க பெயர் என்ன, எங்கருந்து பேசறீங்கன்னு சொல்லிட்டு ஆ.பு. கிட்ட உங்க சந்தேகத்த கேளுங்க”
“வணக்கம் சார், நான் வடசென்னைலருந்து தனபால் பேசறேன்” கூடவே அவர் வீட்டு டி.வி.யும் “வணக்கம், வணக்கம், சார் சார், வடசென்னைலருந்து, வடசென்னைலருந்து தனபால் தனபால்” என்று சொல்ல, பேட்டி எடுப்பவர் “சார் ஒங்க டிவி வால்யூம கொஞ்சம் குறைச்சு வச்சிட்டு பேசுங்க”
“ஹலோ, ஹலோ, ஹலோ”
லைன் கட்.
இவர் அசட்டு சிரிப்புடன், லைன் கட்டாயிடுச்சு “சுவத்துக்கிட்ட ஸ்டூல் போடறத பத்தி சொல்லிகிட்டிருந்தீங்க, மேற்கொண்டு சொல்லுங்க”
”ஸ்டூல் மேல ஏற்றதுக்கு முன்னால”
”இன்னொரு நேயர் லைன்ல வரார்”
”ஹலோ, ஹலோ”
“ஹலோ, ஹலோ”
“மேடம் கொஞ்சம் டிவி வால்யும கொறச்சுட்டு பேசுங்க”
“சார் நான் மதுரைலருந்து மீனாட்சி பேசறேன்”
இவர், முதல் முறையாக ஒரு கால் ஒழுங்காக வரும் திருப்தியுடன் “சொல்லுங்க மீனாட்சி”
”ஆணி புடுங்கறவர நிகழ்ச்சிக்கு கூட்டி வந்ததுக்கு நன்றி சார்” “எங்க வீட்டுல ஆணி புடுங்கற சுத்தி இல்ல, அப்ப பக்கத்து வீட்டுல வாங்கிக்கலாமா?, அப்பறம், ஆணியோட திருகாணியாயிருந்தா எப்படி புடுங்கறது”
”நல்ல கேள்வி மீனாட்சி மேடம்” ஆனா இந்த நிகழ்ச்சி சுவத்து ஆணி பிடுங்கறது பத்தி மட்டும்தான். சுத்திய பத்தி இப்ப பதில் சொல்வாரு, திருகாணிக்கு இன்னொரு நிகழ்ச்சி பண்ணுவோம் அப்போ அதுக்கு பதில் கிடைக்கும்”
ஆ.பி.வி. பக்கம் திரும்பி, மதுரை மீனாட்சியின் கேள்வியை, தமிழில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து “நானே கூட கேக்கணும்னு இருந்தேன் சார், நம்ம வீட்டுல சுத்தி இல்லன்னா என்ன செய்யறது”
“நம்ம வீட்டுல சுத்தியில்லேன்னா பக்கத்து வீட்டுலருந்து வாங்கிக்கலாம். அதுனால சுவரோ, ஆணியோ பாதிக்கப்படாது. ஆனா அவுங்ககிட்ட கேக்கறதுக்கு முன்னால, போன முறை வாங்கின சுத்தியோ, ஸ்க்ரூ ட்ரைவரோ திரும்ப கொடுத்தமான்னு ஒரு முறை செக் பண்ணிக்கறது நல்லது”.
”மண்சுவரா இருந்தா சுத்தி கூட தேவையில்ல, கையாலயே ஆட்டி பிடுங்கிடலாம்” “சிமெண்ட் சுவரா இருந்தா சுத்தி நிச்சயம் வேணும். சுத்திய பிரயோகம் பண்றதுக்கு முன்னால கைல நகசுத்தி இல்லயான்னு செக் பண்ணிக்கணும்”
”அப்போ சுத்தி பக்கத்து வீட்டுல வாங்கறது தப்பில்லைன்னு சொல்றீங்க”
“ஆமாம், இது பத்தி சில பேர் தப்பான அபிப்ராயம் வச்சிருக்காங்க. பக்கத்து வீட்டுல சாதாரணமா கேட்டு வாங்கற பொருள்ள சுத்தியும் ஒண்ணு”, ”இதுல கவனத்துல வச்சுக்க வேண்டியது என்னன்னா, நாம இருக்கறது ஃப்ளாட்டா இருந்தா நாம ஆணி புடுங்க சுத்தி கேக்கறமா இல்ல அடிக்கவான்னு தெளிவா பக்கத்து வீட்டுல சொல்லிடறது நல்லது. இல்லேன்னா நம்ம வீட்டுல ஆணி அடிக்கறது அவங்க வீட்டு செவுத்துல வெளில வந்து கோர்டு, கேசுன்னு போற அபாயம் இருக்கு”, இன்னொரு விஷயம் முக்கியமா நியாபகத்துல வச்சிருக்க வேண்டியது வீட்டு சொந்தக்காரர், அவர்கிட்ட மட்டும் சுத்தி கேக்கவே கூடாது”
“நல்லா தெளிவா நேயரோட கேள்விக்கு பதில் சொன்னதுக்கு நன்றி சார்”, “மொதல்ல நாம பேசிட்டு இருந்தோம் “ஆணி புடுங்க சுவத்துக்கிட்ட ஸ்டூல் போடறது பத்தி”
“ஆமாம், சுவத்துக்கிட்ட ஸ்டூல் போட்டுட்டு, அது மேல ஏற்றதுக்கு முன்னால, வீட்டுல பையனோ, மனைவியோ யாராவது இருந்தா அவுங்கள கூப்பிட்டு ஸ்டூல் பிடிச்சுக்க சொல்லணும்”
”சார், இன்னொரு நேயர் லைன்ல இருக்கார், அவருகிட்ட பேசிட்டு தொடரலாம்.
”ஹலோ”
“ஹலோ ஓ ஓ ஓ ஓ ஓ”
“சார் கொஞ்சம் ஒங்க டிவி வால்யூம கொறச்சுட்டு ஆ.பி. கிட்ட கேள்வி கேக்கலாம்”
இரைச்சல். “அகிலா ஆ ஆ ஆஆ டிவி வி வி வி வால்யும ம ம ம கம்மி இ இ இ பண்ண சொல்றாங்க அ அ அ அ அ”
மேலும் இரைச்சல், நாற்காலி இழுக்கும் சத்தம்.
இங்கே நடத்துநர் “ஹலோ”
“ஹலோ, சார் இப்போ ஆணி புடுங்கும் போது ஸ்டூல் புடிச்சுக்க மனைவி, மகன் யாராவது கூப்பிடணும்னு சொன்னாரே, மனைவி, மகன் ரெண்டு பேரும் இலலேன்னா என்ன செய்யறது சார்?”
விற்பன்னர் “சார் நீங்க உங்ககிட்ட சுத்தி இருக்கா, பக்கத்து வீட்டுல வாங்கணுமா?”
“சார், என்ன சார் கேட்டீங்க”
“இல்ல சார், ஆணி புடுங்க மனைவியோ, மகனோ இல்லேன்னா என்ன செய்யலாம்னு கேட்டிங்க இல்ல”
“ஆமாம் சார்”
”அதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, உங்ககிட்ட சொந்தமா சுத்தியிருக்கா, இல்ல பக்கத்து வீட்டுல வாங்கணுமான்னு சொல்லுங்க”
“இல்ல சார், எங்க கிட்ட ஆணி மட்டும்தான் சார் இருக்கு, சுத்தி பக்கத்து வீட்டுலருந்துதான் சார் வாங்கணும்”
”அப்ப சார், நீங்க, சுத்தி வாங்கும் போது, அவங்க பையன்கிட்ட கொடுத்தனுப்ப சொல்லி அவன பிடிச்சுக்க சொல்லலாம்”
“என்ன சார்?”
“இப்ப உங்ககிட்ட சுத்தி இல்லேன்னு சொன்னீங்கல்ல”
“ஆமாம் சார்’
“மனைவியோ மகனோ இல்லேன்னு சொன்னீங்கல்ல”
“ஆமாம் சார்”
“சுத்தி பக்கத்து வீட்டுல வாங்குவீங்கல்ல”
“அஆன்ன் சார்”
“அப்ப அவுங்க வீட்டுலருந்து பையனயும் கூப்பிட்டுக்கோங்க. அவுங்க மனைவியை கூப்பிடாதீங்க”
“அதுனால ஒண்ணும் பாதிப்பு இருக்காதா சார்’
“பல ஆணி புடுங்கின அனுபவத்துல சொல்றேன் அதுனால ஒரு பாதிப்பும் இருக்காது”, ”என்ன சுத்தி அவன் தலைல விழாம பாத்துக்கணும், அவ்வளவுதான்”
இப்படித்தான் பல நேரலை பேட்டிகள் நடக்கின்றன.
சென்ற வாரம் ஜெயா டிவியில் ஒரு பெண் விற்பன்னர், வெளிநாட்டில் மேல் படிப்பு பற்றி தகவல் வழங்க வந்திருந்தார். சிங்கப்பூரும், ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் அவர் வாயில் விளையாடிக் கொண்டேயிருந்தன. அடிக்கடி, ஜி மேட், டோப்ல், ஐஎல்டிஎஸ் என்று வார்த்தைகள் சரமாரியாக விழுந்து கொண்டிருந்தன.
கேடரிங் டெக்னாலஜி, ஹாஸ்பிடாலிடி, மேனேஜ்மெண்ட் என எல்லா படிப்புக்கும் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு போன் நேயர் “மேடம், டோபுல், டோபுல் (TOEFL) அப்படின்னு சொல்றீங்களே, அதுக்கு விரிவாக்கம் என்ன மேடம்” என்றார்.
அம்மா அசட்டு சிரிப்புடன் “சரியா தெரியாது சார்” என்றாரே பார்க்கலாம்.
அம்மணி மேலும் நேயர்களுக்கு என்ன படிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு போன் நேயர், “மேடம், TOEFL ன்னா – Test of English as a Foreign Language” என்றார். அம்மணி முகத்தில் வழிந்த அசடால் என் டி வியில் short circuit.
*********
நேரலை நிகழ்ச்சிக்கு நானும் போன் செய்திருக்கிறேன். தொலைக்காட்சிக்கு அல்ல. வானொலி பண்பலை.
சென்னையில் இருக்கும் போது பண்பலையில் ஒரு நிகழ்ச்சி. ஒரு எண்ணை கொடுத்து ரேடியோ ஓட்டுனரிடம் பேசி, விரும்பிய பாடலை கேட்கலாம் என்றார்கள்.
இதற்கு முன்னர் இது போல எண்களுக்கு – வேற யாரு பெப்சி உமாவுக்குதான் – போன் டு த பவர் மில்லியன் செய்து ஒரு முறை கூட எண் கிடைக்காததால் நான் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் இருந்தேன். ஆனால் நிகழ்ச்சி ஓட்டுநர் பெண் என்பதாலும், குரல் வசீகரமாக இருந்ததாலும், அப்போது நான் இப்போதை விட இளைஞனாக இருந்ததாலும், என் குரலை வானொலியில் கேட்கும் ஆவல் அதிகமானதாலும் எண்ணை ஒற்றினேன்.
என்ன ஆச்சரியம், எண் கிடைத்துவிட்டது.
எதிர்பக்கம் வசீகரியை எதிர்பார்த்தவனுக்கு ஒரு ஆண்குரல் கிடைத்தது.
“வணக்கம் சார், எங்க ரேடியோவுக்கு போன் பண்ணதுக்கு நன்றி”
”உங்க பேர், எங்கருந்து பேசறீங்கன்னு சொல்லுங்க”
பெயரை சொல்லிவிட்டு, “போன்லருந்துதான்” என்று தொண்டைவரை வந்த கிண்டலை அடக்கிக் கொண்டு “திருவல்லிக்கேணி” என்றேன்.
“ஓகே சார், இப்ப ஒரு நேயர் பேசிகிட்டு இருக்காரு, அவரோட பாடல் ஒலிபரப்பி முடிஞ்சதும் உங்கள லைவ் ட்ரான்ஸ்பர் பண்ணறேன் சார்”
”அப்போ உங்ககிட்ட உங்க பேரு, என்ன செய்யறீங்கன்னு கேப்பாங்க, அப்புறம் உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாருன்னு கேப்பாங்க, அதுக்கு பதில் சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாடலை கேக்கணும் சார்”
“யாரு சார் உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின்”
“எனக்கு ஜோதிகா ரொம்ப பிடிக்கும் சார்”
அவர் அதை அப்ரூவ் செய்வது போல “அப்போ அவங்க கேள்விக்கு ஜோதிகான்னே சொல்லிடுங்க சார்”
”என்ன பாடல் கேக்க போறீங்க”
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்று மனதில் தோன்றிய ஒன்றை சொன்னேன். எந்த பாடல் கேட்டாலும் போடுவார்கள் என்ற நினைப்பில்.
“சார் மன்னிக்கணும், இன்னிக்கு நிகழ்ச்சிக்காக சில பாடல்களைத்தான் தேர்வு பண்ணி வச்சிருக்கோம். அதுல இருந்துதான் போடமுடியும்” என்று சொல்லிவிட்டு அன்று தேர்வு செய்து அதுவரை ஒலிபரப்பாத பாடல்கள் சில சொன்னார்.
எனக்கு முதல் முதலில் ஃபோர்டு கார் அறிமுகப்படுத்திய போது செய்யப்பட்ட விளம்பரம் நினைவுக்கு வந்தது. (You can have the car painted in the color of your choice as long as it is black)
“சரி சார்” அவர் பட்டியலில் இருந்து ஒரு பாடலை ”என் விருப்பமாக” தேர்வு செய்தேன்.
“இப்போ பாடல் முடிய போகுது சார், உங்க லைனை ட்ரான்ஸ்பர் செய்யறேன்”
“ஹலோ வணக்கம், யார் பேசறீங்க” – வசீகரி
“வணக்கம், திருவல்லிக்கேணியிலிருந்து சத்தியமூர்த்தி”
“வணக்கம்! சொல்லுங்க சத்தியமூர்த்தி என்ன செய்யறீங்க”
“நான் xyz கம்பெனியில வேலை செய்யறேன்”
”திரைப்படம் எல்லாம் பாப்பீங்களா”
“எல்லாம் பாக்க மாட்டேன், நல்ல படம், எனக்கு பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் படம் பாப்பேன்”
வசீகரி களுக்கென்று சிரித்து என் நெஞ்சில் சுளுக்கு வரவைத்து விட்டு “உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாரு”
பதில் சொல்வதற்குள் என் குரலையும், வசீகரியின் சிரிப்பையும் ரேடியோவில் கேட்டு சமையல் அறையிலிருந்து கரண்டியுடன் வெளியே வருபவளைப் பார்த்துக் கொண்டே “என் மனைவி” என்றேன்.
If you like this post – Click here to vote and make it popular on www.tamilish.com









“வசீகரி களுக்கென்று சிரித்து என் நெஞ்சில் சுளுக்கு வரவைத்து விட்டு “உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாரு”
பதில் சொல்வதற்குள் என் குரலையும், வசீகரியின் சிரிப்பையும் ரேடியோவில் கேட்டு சமையல் அறையிலிருந்து கரண்டியுடன் வெளியே வருபவளைப் பார்த்துக் கொண்டே “என் மனைவி” என்றேன்.”
உங்கள் இல்லறம் இன்னமும் நல்லறமாக இருப்பதற்கு காரணம் மேல் சொன்ன வார்த்தைகள் தான் போலும் ……
ராம்,
தசாவதாரம் போல, அன்று மட்டும் என் மனைவி சமையலறையிலிருந்து வந்திருக்காவிட்டால்….
அம்மணி மேலும் நேயர்களுக்கு என்ன படிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு போன் நேயர், “மேடம், TOEFL ன்னா – Test of English as a Foreign Language” என்றார். அம்மணி முகத்தில் வழிந்த அசடால் என் டி வியில் short circuit.
- வசீகரி களுக்கென்று சிரித்து என் நெஞ்சில் சுளுக்கு வரவைத்து விட்டு “உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் யாரு”
பதில் சொல்வதற்குள் என் குரலையும், வசீகரியின் சிரிப்பையும் ரேடியோவில் கேட்டு சமையல் அறையிலிருந்து கரண்டியுடன் வெளியே வருபவளைப் பார்த்துக் கொண்டே “என் மனைவி” என்றேன்.
Ivai megavum rasithu padithavai. Nice humor. Thank you.
உச்சகட்ட காமெடி சத்தியமூர்த்தி. வழக்கமா உங்க பதிவில அங்க அங்க காமெடிய தெளிச்சு விட்டிருப்பீங்க…இந்த முறை பக்கெட் பக்கெட்டா கொட்டியிருக்கீங்க….
““ஹலோ ஓ ஓ ஓ ஓ ஓ”
“சார் கொஞ்சம் ஒங்க டிவி வால்யூம கொறச்சுட்டு ஆ.பி. கிட்ட கேள்வி கேக்கலாம்”
இரைச்சல். “அகிலா ஆ ஆ ஆஆ டிவி வி வி வி வால்யும ம ம ம கம்மி இ இ இ பண்ண சொல்றாங்க அ அ அ அ அ” – ஆடியோ சிக்னல காரணமா படாத பாடு படுவதை அப்படியே எழுத்து வடிவத்துல கொடுத்திருக்கீங்க…சூப்பர்…
அடுத்து என்ன ”மேகி சமைப்பது எப்படி”யா?
சாரதி,
நன்றி. சிரிச்சா சரி. சிரிப்பா சிரிக்கறாப்ல பதிவு போடறதுக்கு உங்கள மாதிரி ஆளுங்க கொடுக்கற ஊக்கமும் காரணம். நான் அதிகமா தூங்காம விழிச்சிருந்து எழுதறதும் காரணம்.
//அடுத்து என்ன “மேகி சமைப்பது எப்படி”யா?//
ஐடியா நல்லா இருக்கு. தோசைய பத்தி எழுதலான்னு உத்தேசம்.
ஆஹா, இடியட் பாக்ஸை வெச்சு இத்தனை நகைச்சுவையா? பலே பலே!
முக்கியமா, அந்த ஆணி பிடுங்கும் உதாரணம், ’ஷார்ட் சர்க்யூட்’ கிண்டல், ’ரேடியோ ஓட்டுனர்’ங்கற வார்த்தை மூணும் டாப் க்ளாஸ்
அடுத்து இந்த ’காஃபி வித் கமலா’, ‘பீர் வித் பாமா’, ‘கஞ்சி வித் கணேசன்’ பாணி நிகழ்ச்சிகளையும் ஒரு வாரு வாருங்களேன்!
- என். சொக்கன்,
பெங்களூர்.
சொக்கன் சார்,
ரொம்ப நன்றி. இப்படி வசிஷ்டரெல்லாம் பிரம்மரிஷி கொடுத்தா “சச் கா சாம்னா” கூட எழுதலாம்.
intha kazhacharathukku mukkiya karanam – PEPSI UMA – Avangala maranthuteengale… Oh! So sweet..
ப்ரசன்னா,
மறக்கலயே. நடுவுல ஒரு வார்த்தை அவங்க பேர சொல்லியிருக்கேனே?
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site