சிவாஜி தூக்கிப் போட்ட சிகரெட்
ஃபேமிலி்யுடன் இல்லாமல் தனியே தன்னந்தனியே இருப்பதில் சில சௌகரியங்களும், சுதந்திரங்களும் உண்டு.
அலுவலகத்தில் முக்கியமான வேலை இருந்தால் (ஹி ஹி எப்பவாவது வேலை கூட செய்வேன்) இருந்து முடித்துவிட்டு, போன் மேல் போன் போட்டு டெலிபோன் மணி போல் சிணுங்கும் மனையாள் கவலையில்லாமல் வீட்டுக்கு(ம்) தாமதமாக வரலாம். “ம்” போட்டது ஏன் என்றால், வழக்கமா ஆபிசுக்கு தானே தாமதமாக போக சம்மதம்.
விரும்பின ஹோட்டலில் சாப்பிடலாம் (நிஜ சாப்பாடு; ஹோட்டல் என்றதும் கற்பனை குதிரையை தட்டிவிடாம கடிவாளம் போடுங்க).
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கம்ப்யூட்டர் மவுஸ் பிடித்து வலையில் அலையலாம், சாட்டாடலாம். எத்தனை ப்ளாக் வேண்டுமானாலும் பாதி எழுதி மீதி முடிக்காம ட்ராப்ட்ல போட்டு வைக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக மகாராஜனைப் போல் டிவியை ரிமோட்டால் ஆளலாம். ஃபேமிலி இருந்தால் கண்டிப்பாக மனைவி பார்க்கும் சீரியலையோ, மகவுகள் பார்க்கும் கார்ட்டூனையோதான் நீயா, நானான்னு கேக்காம பாக்க வேணும்.
இது தவிர, ஆட்டோக்காரர் வந்து விட்டார், ஸ்கூல் டீச்சர் வெஞ்சுவிட்டாள் என்பதெல்லாம் காதில் விழாமல் கட்டங்காலையிலும் பாட்டுக் கேக்கலாம், பாக்கலாம். பாட்டு பார்த்தபடியே ஃபேமிலி கூட இல்லாத ஆழ் வலியை ஆனுவல் லீவுவரை அமுக்கி வைக்கலாம்.
இப்படியெல்லாம் இந்த பதிவில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டே ரொம்ப நாளைக்கப்புறம் இன்று கலைஞர் டிவியை காலையில் திறந்து என் வீட்டு வரவேற்பறையில் (ஹாலில்) “தேனும், பாலும்” கலந்தேன்.
தேனும் பாலும் நிகழ்ச்சியின் பாடல்களை கேட்டுக்கொண்டே அலுவலகம் கிளம்புகையில், சின்ன வயதில் பள்ளி / அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் விவித்பாரதியின் வர்த்தக ஒளிபரப்பு – உங்கள் விருப்பம் – பாடல் பல்லவியை எங்கள் வீட்டிலும், சரணத்தை நடுரோட்டிலும், பாடும் டிரான்சிஸ்டர் கையோடு ரோடு எண்டு செட்டியார் கடைக்கு நடக்கும் ஹிண்டு மாமா தோளிலும் கேட்டது நினைவுக்கு வரும்.
இன்று அப்படி ஒரு அரிதான பாடலாக ஒளிபரப்பானது, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான “நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே”.
மிகவும் அருமையான, தேனாக, பாலாக வழியும் பாடல். பாடல் படமெடுத்த சூழலும் அருமை. கிட்டத்தட்ட “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” பாடலைப் போலவே தென்றல் வீசும் வீட்டு மொட்டை மாடியில் சிவாஜியும், சௌகாரும் அவர்களின் இரட்டை குழந்தைகளின் தொட்டிலுக்கு அருகில் ஒரு தாலாட்டாக பாடுவது போன்ற பாடல் காட்சி. (நிற்க! ஜெயா டிவியி்ல் இந்த வாரம் சவுகாருடைய திரும்பிப்பார்-க்கிறீர்களா? Truly majestic lady 78 வயதாகிறதாம் – திருஷ்டி சுற்றி போட வேண்டும்).
பாடலுக்கு திரும்பலாம். சிவாஜியும், சவுகாரும் கருப்பு வெள்ளையில் ”பார் மகளே பார்” படத்தில் பாடும் பாடல் இது். கவியரசு, மெல்லிசை மன்னர்கள், கணீர் குரல் டி.எம்.எஸ்., பி.சுசீலா என்கிற வெற்றிக் கூட்டணியின் மற்றொரு மகா ஹிட் பாடல் இது.
கவியரசரின் சொல்லாட்சியை சிலாகிப்பதா, மெல்லிசை மன்னர்களின் தேனாற்று இசையை சிலாகிப்பதா, அந்த தேனாற்றில் முங்கி எழுந்த பின் பாடவந்தது போல் ஒலிக்கும் பூங்குயில் சுசீலாவின் குரலை சிலாகிப்பதா, உணர்ச்சிகளை நாதத்தில் குழைத்தொலிப்பது போல் ரீங்காரீக்கும் டி.எம்.எஸ்ஸின் பாவங்களை சிலாகிப்பதா என்று திக்கு முக்காடவைக்கும் பாடல். இதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்:
”நீரோடும் வைகையில் நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில், பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே” தொடர்ந்து - தாலாட்டு பாடலுக்குள்ளே, கணவன் மனைவியின் காதலை சாண்ட்விச் செய்த கவியரசு வரிகள்: சிவாஜி: நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே சௌகார்: அந்த கவிதைக்கும் நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”
இப்படி அமுதாக ஓடிய பாடலை கேட்டுக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் ஆச்சரியப்பட வைத்த காட்சி பாடலுக்கும் கொஞ்சமும் பொருந்தாது.
வழக்கமாக தன் கதாபாத்திரத்திலும், காட்சி அமைப்பிலும் மிகவும் கவனம் செலுத்தும் சிவாஜி எப்படி இப்படி நடித்தார், இயக்குநர் எப்படி கவனிக்காமல் விட்டார்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
அப்படி என்னை கேட்க வைத்தது சிவாஜியின் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்.
சிவாஜியும், சௌகாரும் பாடிக்கொண்டிருந்தது தாலாட்டுப் பாடல். சிவாஜியின் உடையையும், தோரணையையும் பார்க்கும் போது படித்தவராக, பண்புள்ளவராக, சீமானாக தெரிகிறது. படத்தின் கதைப்படி தன் குழந்தை(கள்?) மேல் மிகவும் அன்பு செலுத்துபவர்.
அப்படிப் பட்டவர், எப்படி தன் தொட்டில் குழந்தைக்கு அருகே நின்று புகை பிடிப்பார்? இது போதாதென்று, பாடல் இன்னும் இரண்டு வரி கடந்த பிறகு தொட்டிலை விட்டு நகர்ந்து சௌகாருக்கு அருகே போகும் சிவாஜி புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை கேரம் போர்டில் காயை சுண்டி அடிப்பது போல் பின்புறமாக சுண்டி அடிப்பார்.
புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை அணைக்காமல் அப்படியே போடுவது தவறான காட்சியமைப்பு இல்லையா? அது குழந்தை மேல் விழுந்துவிடுமே என்கிற அக்கறை அந்த கதாபாத்திரத்துக்கு இருக்காதா? சரி மொட்டை மாடியில் இருந்து ரோட்டுக்கு சுண்டுகிறார் என்று வைத்துக் கொண்டாலும், யார் தலைமீதாவது விழுமே என்கிற அக்கறை இல்லாதவரா?
இந்த தமாஷான தவறை யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு எழுந்த இன்னொரு கேள்வி, நம் சினிமா வில்லன்கள், கதாநாயகர்கள் ஹோட்டல், மார்க்கெட் போன்ற இடங்களில் போடும் சண்டை பற்றி எழுந்தது. இவர்கள் பாட்டுக்கு சண்டைக்கு நடுவில் கடை சாமான்களை நொறுக்குகிறார்கள், காய்கறி-பழங்களை இறைக்கிறார்கள், பானைகளை உடைக்கிறார்கள்.
சண்டை முடிந்த பிறகு சாவதானமாக “என் வழி தனி வழி” என்று போய்க் கொண்டே இருக்கிறார்கள். அதுபோன்ற கடைக்காரர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள்? அந்தக் கடைக்காரர்கள் எல்லாம் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறார்களா?
போனமாதம் என் ஐந்து வயது மகனுடன் நடைபாதை கடையில் பொம்மை வாங்கும்போது என் மகன் உடைத்த ரூ.5 மதிப்புள்ள பொம்மைக்கு காசு கொடுக்காமல் நகரக்கூடாது என்று மல்லுக்கட்டிய கடைக்காரர் நினைவுக்கு வருகிறார்.









மல்லுகட்டிய கடைக்காரர் நிதர்சனம் …. சினிமா கடைகளுக்கு எல்லாம் தயாரிப்பு நிர்வாகி செட்டில் செய்வார் …..
மேலும், ஹீரோ வில்லனை துரத்தும் போது எடுத்து போகும் பைக் அல்லது சைக்கிள் என்னவாகும்?
டூயட் பாடும் பொழுது உபயோகப்படுத்தும் காரட் / தக்காளி என்னவாகும்?
ஹே ராம்!
உண்மைதான்.
பெரும்பாலான படங்களில், ஹீரோ வில்லனை துரத்தும்போது கிடு கிடுவென்று வெளியில் ஓடி வந்து அங்கே நிற்கும் பைக்கோ, காரோ, லாரியோ உடனே கிளப்புவார். சாவி கூட போடமாட்டார். துரத்தும் வில்லன் எங்காவது கடை/ ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்/ ஹோட்டலில் நுழைந்தால் பைக்/ காரை போட்டது போட்டபடி கார் கண்ணாடியைக் கூட ஏற்றாமல் துரத்தி ஓடுவார்.
நீங்க ஒருமுறை உங்க காரை அப்படி விட்டுப் பாருங்கள். திரும்பி வரும்போது ஸ்டியரிங் கூட இருக்காது!
விறுவிறுன்னு படிக்கும்படி சுவாரஸ்யமா எழுதமுடியாத ’சாதாரண’ விஷயம்ன்னு எதுவுமே இல்லை என்பது என் நம்பிக்கை, உங்கள் பதிவு அதை உறுதிப்படுத்திவிட்டது. நன்றி
- என். சொக்கன்,
பெங்களூர்.
சொக்கனைப் போல சொக்கியவர்களில் நானும் ஒருவன்.
//சின்ன வயதில் பள்ளி / அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் விவித்பாரதியின் வர்த்தக ஒளிபரப்பு – உங்கள் விருப்பம் – பாடல் பல்லவியை எங்கள் வீட்டிலும், சரணத்தை நடுரோட்டிலும்//
இப்படி அனுபவித்தவர் பலர். அதில் நானும் ஒருவன்.
//(ஜெயா டிவியி்ல் இந்த வாரம் சவுகாருடைய திரும்பிப்பார்-க்கிறீர்களா? Truly majestic lady 78 வயதாகிறதாம் – திருஷ்டி சுற்றி போட வேண்டும்).”//
நான் இதுவரை திரும்பிப் பார்க்கவேயில்லை. இருந்தாலும் சவுகாரின் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு மரியாதை உண்டு.
நீங்கள் பாடலில் சுட்டிக்காட்டிய தவறில் என் எண்ணங்கள் கீழே:
1. சிவாஜி அந்தப் படத்தில் பெரும் பணக்காரர் அதனால அவர் வீட்டுக்கு முன்புறமும் பின்புறமும் நிச்சயம் பெரிய இடமோ அல்லது தோட்டமோ இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அதனால் யார் தலையிலும் சிவாஜியின் சாம்பல் விழுந்திருக்காது.
2. சிவாஜி அதில் இன்னொரு சம்(மா)சாரம் கொண்டவர் என்ற ஞாபகம். அவர் எதையும் தன் மனம் போன போக்கில் செய்யும் ஒரு சராசரி பணக்காரர் என்பதை காண்பிக்கவே அந்த பாடலில் ஊதுகுழல் என்பது என் கருத்து.
@சொக்கன்,
நன்றி!
ரொம்ப சர்வ சாதாரணமா புகழ்ந்துடறீங்க. நீங்க சாதாரணமான ஆளில்லை. சுஜாதா, ”லைட்டா” எழுதறதப் பத்தி எழுதியது ஞாபகத்துக்கு வருது.
@விஜயசாரதி,
சிவாஜி பணக்காரராக இருந்து வீட்டுக்குள்ளேயே தோட்டம் இருந்தாலும், அப்படியா சிகரெட்டை தூக்கி வீசுவது? ஒரு சா.கி. வச்சிருக்கமாட்டாரா? அவர் தட்டினது சாம்பலில்லை, தூக்கிப் போட்டார் – அணையாத சிகரெட்டை. எப்படி இருந்தாலும் குழந்தை தொட்டில்கிட்ட யாராவது சிகரெட் பிடிப்பாங்களா? எந்த தாய் அதை “பாட்டுப் பாடிகிட்டே” ஒத்துக் கொள்வாள்?
புகை/சிகரெட் அப்படின்னு எழுதறதுக்கு சோ.தனமா இருந்ததால சாம்பல்னு….
எந்தத் தாய் ஒத்துக்கொள்வாள்…..மாட்டவே மாட்டார்கள்…மாட்டி(ஆணியில்) வேண்டுமானால் விடலாம்.
ஆனால் அந்தப் பாடலை பொறுத்தவரை ஒரு தாய்..அதை ஒத்துக்கொள்ளக் கூடாத தாய் ஒத்துக்கொண்டாரே…அதுவும் தான் பாட்டுக்கு பாட்டு பாடிக்கிட்டே…
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site