Home » India Politics, Tamil-தமிழ், TV Programs

என் கணிப்பில் தேர்தல் கணிப்புகள் :)

15 May 2009 1,032 views One Comment

பல வருடங்களுக்கு முன் தேர்தல் என்றால், முடிவு வரும் வரை காத்திருப்பது ஒன்றுதான் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

70-களிலும் அதற்கு முன்பும் அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் தங்கள் தங்கள் அவாக்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப அனுமானங்கள் செய்து கொள்வார்கள்.  நான் காங்கிரஸ்காரன் என்றால் என் கட்சிதான் ஜெயிக்கும் என்று நான் எதி்ர்பார்க்க, என் எதிர்வீட்டுக்காரர் அவருடைய அரசியல் சார்புப்படி அனுமானித்துக் கொள்வார்.  இந்த அனுமானங்கள் ”வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டு” என்பது போலவே இருக்கும்.

தொலைக்காட்சி (ஒன்றே ஒன்றுதான்), செய்தித்தாள்கள், வார இதழ்கள் என்று எதுவும் ”Exit Poll – தேர்தல் கணிப்பு” செய்ததாக எனக்கு நினைவு இல்லை.

வாக்குப் பதிவு செய்ய வாக்குச்சீட்டு மூலமே நடைபெறும்.  வாக்குச்சீட்டின் நீளம் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை பொறுத்து இருக்கும்.  இருபது, இருபத்து ஐந்து வேட்பாளர்கள் இருந்துவிட்டால் வாக்குச்சீட்டு வெகு நீளமாக இருக்கும்.  நாற்பது பேர் போட்டியிட்டால் கேட்கவே வேண்டாம்.

எந்தத் தொகுதியில் “மிக நீளமான வாக்குச்சீட்டு” என்பது தேர்தலுக்கு தேர்தல் தினத்தந்தியில் கண்டிப்பாக இடம்பெறும் செய்திக் குறிப்பு.  அதிகம் முறை சுயேட்சையாக போட்டியிடுபவர் யார் என்பதும், அதிகம் பேர் சுயேச்சையாக போட்டியிடும் தொகுதி எது என்பதும் ”செய்திகளை  முந்தித் தரும் தந்தியின்  “சுவையான” செய்திகள்.  (தந்தி என்பதே வேகமான சேவையாக இருந்த காலத்தில், ஆதித்தனார், வேகமாக செய்தி தரும் செய்தித்தாள் என்று பொருள்பட “தினத்தந்தி” என்று பெயர் வைத்தார்.  இப்போது தந்தி என்பதை கலைஞர் மட்டுமே உபயோகிக்கிறார்; மற்றவர் எல்லாம் மின்னஞ்சலுக்கும், சிமசே-க்கும் தாவி விட்டனர். “மெயில்”, ”எக்ஸ்பிரஸ்”, “மணி”, “முரசு” என்று வருமாறு பெயர் வைத்துக் கொண்டவர்கள் டெக்னாலஜி வழக்கொழிந்தாலும் தப்பித்துக் கொண்டார்கள்).

இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு இந்தியா சந்தித்த தேர்தல்தான் கடைசியாக ஒரு தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் தந்த தேர்தல்.  அதற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக தேசியக் கட்சிகளின் அதிருப்தியாளர்களும், மாநில அளவில் மட்டும் ஆசை வைத்து துவங்கப்பட்ட கட்சிகளும் தலையெடுக்கத் துவங்கின.  தேர்தல் வாக்கு வங்கிக் கணக்கு என்கிற புதிய கணக்கை தேசியக் கட்சிகள் போட வேண்டியதாக போயிற்று.

இந்த நிலை முதன் முதலில் துவங்கியது தமிழகத்தில் இருந்துதான் என்று நினைக்கிறேன்.  பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி என்று பல கட்சிகள் தலையெடுப்பதற்கு முன், தமிழகத்தில் தேர்தல் கூட்டணி என்பது – காங்கிரசுடன் எந்தக் கட்சி கூட்டணி அமைக்கிறது – திமுகவா அல்லது அதிமுகவா – என்ற அளவில்தான் இருந்தது.  கம்யுனிஸ்ட் கட்சியினர், தனியாகவோ, காங்கிரஸ் அல்லாத கூட்டணியிலோ இடம் பெற்றனர். இதில் ஏதாவது ஒரு கூட்டணியில் முஸ்லீம் லீக் இடம் பிடித்தது.

அதற்கு முழு முக்கிய காரணம் அகில இந்திய அளவில் பெரிய தலைவரான இந்திரா காந்தி தமிழகத்திலும் பெரிய ஆதரவை பெற்றிருந்ததும், எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்ற ஒருமித்த மக்கள் பேராதரவு பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் இருந்ததும்தான்.

இந்திரா மறைவுக்கு பிறகு காங்கிரஸ் வலுவிழந்ததும், பா.ஜ.க. என்கிற சக்தி அகில இந்திய அளவில் தோன்றியதும், தமிழகத்தில் ஜாதி அமைப்புகள் கட்சிகளாக உருவானதும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தன என்று நினைக்கிறேன்.

அதே நேரத்தில், எம்.ஜி.ஆரை இழந்ததால் பலம் கொஞ்சம் குறைந்த அதிமுகவும், எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர துடித்த திமுகவும், தங்களுடன் இந்த பரிமாண வளர்ச்சி பெற்ற ஜாதி அமைப்புகள் இருந்தால் “marginal constituencies” என்று சொல்லப்படுகிற சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் (அல்லது) ஜெயிக்கும் தொகுதிகளுக்கு உதவும் என்று எண்ண தொடங்கின.

இதே போல், காங்கிரசிடம் அகில இந்திய அளவில் நம்பகத்தன்மை மிகுந்த தலைவர் இல்லாததும், பா.ஜ.க.வின் வளர்ச்சியும் தமிழகம் போலவே மற்ற மாநிலங்களிலும் சிறு கட்சிகளுக்கு இந்த பெரிய அகில இந்தியக் கட்சிகள் மதிப்பளிக்க ஆரம்பித்தன.

இடத்தை கொடுத்த பெரிய கட்சிகள் மடத்தை கொடுத்தால்தான் ஆதரவு என்று சிறிய கட்சிகள் பேச துவங்கவும், பெரிய கட்சிகள் தங்கள் தனி பெரும்பான்மைக்காக கட்சி வளர்க்காமல், சிறிய கட்சிகளின் பேரத்துக்கு பணிய ஆரம்பித்தார்கள்.

இது கூட்டணி ஆட்சிகளுக்கு வழிவகுத்தது. கடைசியாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தது ராஜீவ். தனிப் பெரும்பான்மைக்கு அருகில் ஆட்சி செய்தது நரசிம்ம ராவ், 1991-ல், 240 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் – பெரும்பான்மைக்கு 33 உறுப்பினர்களே குறைவு.

1990-ல் வளைகுடா போர் நடந்ததில் தனியார் தொலைக்காட்சி என்பது முளை விட தொடங்கியது. இந்த மீடியா புரட்சியும், கூட்டணி ஆட்சிகளின் துவக்கமும், சிறு கட்சிகளின் (பெரிய கட்சிகளின் தயவில்) வளர்ச்சியும் ஒன்று சேர, தேர்தல் கருத்துக் கணிப்புகளிலும் complications அதிகம் ஆயின. பல மாநிலங்களிலும் கூட்டணிகள், சிறு கட்சிகள், அவற்றின் ஆதரவு, எதிர்ப்பு வாக்குகளின் கணிப்பு என சிக்கல்கள் அதிகமாகி விட்டன.

இத்துடன் தொலைக்காட்சிகளின் பெருக்கமும் சேர, உண்மையான தேர்தல் முடிவு என்பது ஒன்றுதான் என்றாலும், கருத்துக் கணிப்பு முடிவுகள் என்பவை ஒரு நூறுக்கும் அதிகமாகிவிட்டன. இவற்றில் சில கட்சி சார்ந்த தொலைக்காட்சிகள் வெளியிடும் அவர்கள் சார்ந்த கட்சித் தலைமையின் ஆசையை கருத்துக் கணிப்பாக வெளியிடுபவை. இவை தவிர, நாளேடுகள், வார இதழ்களின் சாம்பிள் வாக்குப்பதிவும், கருத்துக் கணிப்புகளும். தேர்தல் முடிவு வரும் வரை இந்திய குடிமகன் கருத்துக் கணிப்பு சுனாமியால் தாக்கப்படுகிறான். இவற்றில் பல கருத்து கணிப்புகளுக்கும் உண்மையான முடிவுகளுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை.

இதில் முதன்மை வகிப்பவர் என்.டி.டி.வி. துவக்கிய பிரணாய் ராய். இவர் 80களில் தூர்தர்ஷனுக்காக தேர்தல் சிறப்பு நிகழ்ச்சிகள் செய்யத் துவங்கினார். இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு, நடனமாடும் அம்புக்குறிகளும், கார் ஸ்பீடாமீட்டரில் இருப்பது போன்ற முட்களும் +5%, -10% என்று ஸ்விங் கணக்குகளும் அறிமுகமானது இவரால்தான். இவர்தான் முன்னோடி. (இன்னும் கூட இவருடைய என்.டி.டி.வி தரும் கருத்துக் கணிப்புக்கு அதிகம் மதிப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.)

இந்த கருத்துக் கணிப்பு தொல்லை தாங்கமுடியாமலும், திணிக்கப்படும் கணிப்புகளால் பொதுமக்கள் ஸ்விங் ஆகாமலும் இருக்கவேண்டி, தேர்தல் ஆணையம் தேர்தல் ஆரம்பிப்பது முதல், கடைசிவாக்கு பதிவாகும் வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்துவிட்டது.

தேர்தல் என்பது, வாக்கு சீட்டு முறையில் இருந்த போது, வாக்கு எண்ணிக்கை என்பது மூன்று நாட்கள் வரைகூட நடந்ததுண்டு. ஆனால் அப்போதெல்லாம் தேர்தல் என்பது இந்தியா முழுக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் நடக்கும். இப்போது வாக்குப்பதிவு ஒரு மாதம் நடக்கிறது, வாக்கு எண்ணிக்கை ஒரு நாளுக்கும் குறைவாக.

தேர்தல் முடிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இரண்டொரு நாள் தொலைவே. ஆனாலும், கருத்து (க/தி)ணிப்பு சுனாமி தாக்கம் நிற்பதில்லை.

சரி, கருத்து கணிப்புகள் தேர்தல் முடிவோடு எவ்வளவு தூரம் ஒத்துப் போகின்றன? கீழே அட்டவணையை பாருங்கள்:

Exit Polls and Actual Elections results

Exit Polls and Actual Election results

Readers also liked

One Comment »

  • Vijayasarathy R said:

    உங்க கணிப்ப போடவேயில்லியே?

    அதிமுக நிறைய சீட் ஜெயிக்கும்னு பரவலா பேசிக்கிட்டு இருக்காங்க. ஹும்ம்ம்..இப்பவே கண்ணக்கட்டுதே…ஷ்..ஷொபா….

    தேர்தல் சாப்பாடு நாளை மதியம் ஜீர்ணம் ஆயிடும்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.