Home » Chennai, Headline, Tamil-தமிழ்

இரண்டு முதல் வாக்கு அனுபவங்கள்

12 May 2009 595 views One Comment
ஹாய்! Hi! you have been here atleast 3 times before; don't you think we have started liking each other? Stay updated when I update this site by subscribing to the site feed. Thanks! நன்றி

Enter your email address: Delivered by FeedBurner


இதோ வருகிறது, அதோ வருகிறது என்று காத்திருந்து பார்த்திருந்த தேர்தல் தேர் தமிழகத்துக்கு வந்தேவிட்டது.

இந்தியா முழுக்க ஓட்டுப் போட, நமது தமிழக மக்களை ஆ-என்று வாயை திறந்து பார்த்துக்கொண்டு இருக்க வைத்து தமிழகத்தை கட்டக் கடைசியில் வைத்துவிட்டார்கள். ஒரு வழியாக மே 13 குறைந்தபட்சம் 40 சதவீதம் பேர் தங்கள் ஜனநாயகக் கடமையாற்றி விடுவார்கள். (மதுரையில் அஞ்சாதபட்சம் எத்தனை சதவீதம்?)

தமிழகம் சொல்லாமல் அடுத்த பிரதமர் கிடையாது என்று பெரிய தலைவர்கள் பேசியதன் அர்த்தம் இதுதான் போலிருக்கிறது. கடைசிக் கட்டம் முடியாமல் எப்படி தேர்தல் முடிவு? எப்படி பிரதமர்?

இன்னும் இரண்டு நாள்தான் இருக்கிறது. வாய் திறந்து, மேடை போட்டு பேசி செய்யும் பிரசாரம் ஓய்ந்துவிட்டது. பணம் இன்னும் வேகமாக மௌனப் புரட்சி செய்ய ஆரம்பிக்கும் நேரம் இது.

தொண்டர்கள் வீடு வீடாக போய் எத்தனை வாக்குகள் இருக்கின்றன, எத்தனை வாக்குகள் வேட்பாளர் வாங்குவார், எத்தனை வாக்குகள் “வாங்க” வேண்டும், எத்தனை வாக்குகள் “வாங்க வேண்டிய” அவசியமில்லாமல் போடமுடியும் என்று கணக்கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பணநாயகமும், ஜனநாயகமும் போட்டிபோட. யார் ஜெயித்தாலும், பணநாயகம்தான் ஜெயிக்கும் என்பது இலைக்கடியில் ஓட்டுக்காக நோட்டு வைத்தவர்களுக்கும், நோட்டு கொடுத்தால் தேர்தல் ஆணையத்தின் நோட்டத்தில் வருவோம் என்று டோக்கன் கொடுத்தவர்களுக்கும் தெரியும். (எல்லா கட்சியும் தானே கொடுத்திருக்கிறார்கள்? உங்கள் அக்கம்பக்கத்தில் – அக்கம் பக்கம் பார்த்து – கேட்டுப் பாருங்கள்).

பணம் வாங்கி ஏப்பம் விட்டபிற்கு மக்கள் நேர்மையாக பணம் கொடுத்தவருக்கு போடுவார்களா? அல்லது அனைவருமே கொடுத்திருப்பதால், இருப்பதிலேயே அதிகம் கொடுத்தவருக்கு போடுவார்களா? அல்லது, யார் குறைந்த அளவு கொடுத்தாரோ அவரே தேர்தலுக்கு பிறகு குறைந்த அளவு ”வாங்குவார்” என்று அவருக்கு போடுவார்களோ? அல்லது எல்லாருக்கும் “பெப்பே” காட்டிவிட்டு தங்களுக்கு பிடித்தவருக்கு போடுவார்களோ? இல்லை 49ஓ போடுவார்களோ?

இந்த மகத்தான மர்மம்தான் பணநாயகம் என்னும் சூமோ மல்யுத்த வீரனின் கீழே மூச்சடைக்க நசுங்கிக் கிடந்தாலும், ஜனநாயகத்தின் பெருமை.

என்னதான் ஜனநாயகம் என்று சொன்னாலும், பலர், வாக்குப் பதிவதில்லை. பதிப்பவர்களில் பலரும் தங்கள் விருப்புக்கேற்பப் பதிவதில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தாமே தீர்மானித்து போய் பட்டன் அழுத்துபவர்கள் இருந்தாலும், கணவர், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி – இவர்களில் யாரோ ஒருவர் – தீர்மானித்த பட்டனை அழுத்தும் பெருவாரி் பெண்களும் இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு பெருத்த சதவீதம், யாருக்கு போடுகிறோம், ஏன் போடுகிறோம் என்று ஆராயாமல் அப்போதைய கவர்ச்சியில் பட்டன் அழுத்துபவர்கள்.

என்னுடைய முதல் வாக்கு பதிவு அனுபவம் எனக்கு நினைவிருக்கிறது. அப்போதெல்லம் ஆள்காட்டி விரலில்தான் மை வைப்பார்கள்; ஓட்டுப் போட்டதை கண்ணியமாக யாருக்கும் காட்டலாம்.

நான் முதன்முதலில் ஓட்டு போட்டது எனக்கு 23 வயது ஆனபோதுதான் (1991). ஜெயலலிதா அதிமுகவை ஒருங்கிணைத்து சந்திரசேகர் உதவியில் திமுக ஆட்சியை கவிழ்த்து இரும்பு பெண்ணாக தமிழகத்தில் அறிமுகமான நேரம்.

எங்கள் வீட்டுக்கு முன்னதாகவே வந்து ஒரு கட்சியின் தொண்டர்கள் கொடுத்து சென்ற ஒரு சீட்டை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு பின்னாலேயே இருந்த மாநகராட்சி அலுவலகம் சென்றேன். இந்த சீட்டில் என் பெயர், வயது, வாக்களர் பட்டியலில் வரிசை எண் என்று ஏற்கனவே எழுதியிருந்ததால், அதிகாரி சுலபமாகக் கண்டுபிடித்து உரக்க படிக்க, எதிரே அமர்ந்திருந்த வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சரி பார்த்தனர்.

ஒரு அதிகாரி என் கையில் ஒருவிதமான நீலமும், கருப்பும் கலந்த பொட்டு வைக்க இன்னொரு அ. இரண்டு வாக்கு சீட்டுகளை கொடுத்தார். ஒன்று சட்டமன்றத் தேர்தலுக்காக, ஒன்று நாடாளுமன்ற தேர்தலுக்காக. இப்படி முதல் மேட்சிலேயே இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு.

யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதற்கு முன் என் குடும்ப பாரம்பரியத்தை சொல்லவேண்டியது அவசியம்.

எங்கள் குடும்பம் முழுக்கவே காங்கிரசை தாண்டி வேறு கட்சியை ஏறெடுத்தும் பார்க்காத குடும்பம். அதற்குக் காரணம், தாத்தா காந்தியும், நேரு மாமாவும், காமராஜரும், இந்திரா காந்தியும். திரையில் கூட எங்கள் வீட்டில் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள். தவிரவும், பிராமணர்கள் பெரும்பாலும் திராவிடக் கட்சிகளுக்கு அவ்வளவு சுலபமாக ஓட்டு போட்ட/போடுவ-தில்லை என்று நினைக்கிறேன். காங்கிரஸ் (பா ஜ க இல்லாத காலத்தில்) பிராமணர்களின் புகலிடம்.

எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தவரை அவருடைய படங்களைக்கூட பார்க்க மாட்டார்கள், அழைத்தும் போகமாட்டார்கள். அவர் நடித்த 147 படங்களில் தியேட்டருக்கு சென்று நான் பார்த்த படங்கள் இரண்டே இரண்டுதான் – எங்கள் தங்கம் (அழைத்து சென்ற குடித்தனக்காரர் எம்.ஜி.ஆர். ரசிகர்), நல்ல நேரம் – (படத்தில் யானைகளின் சாகசம் சிறுவர்களிடையே பிரபலம்).

இப்படி காங்கிரசை ஆதரித்து வந்த பாரம்பரியம்(!) மிக்க குடும்பத்தில் இருந்து வந்த நான் சட்டமன்றத்துக்காக போட்ட ஓட்டு அதிமுகவுக்கு, ஜெயலலிதாவுக்காக, இரட்டை இலை சின்னத்துக்கு. பாரளுமன்றத்துக்கு காங்கிரசுக்காக ஓட்டுப்போட்டேன். (திருவல்லிக்கேணி, தென்சென்னை தொகுதிகள்). இரண்டுக்கும் காரணம் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி. யார் வரவேண்டும் என்பதைவிட, யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதுதான் என் மனதில் முன்னிலையில் இருந்தது. யார் நல்ல வேட்பாளர் என்றெல்லாம் யோசிக்கக்கூட இல்லை.

தமிழகமே திரண்டு, அப்போது ராஜீவ் காந்திக்காக அழுது கொண்டே காங்கிரசுக்கும், ஜெ.க்கும் ஓட்டுப் போட்டது என்பது வரலாறு. நானும் தமிழகத்தில் ஒருவனாக இருந்தேன். என் வீட்டில் என் அம்மா முதல், வேலைக்கார அம்மா வரை அன்று ஓட்டு போட்டது அம்மாவுக்குதான், அவர் அம்மா என்று அப்போது அறியப்படாவிட்டாலும்.

முதன்முதலில் ஓட்டு என்கிற ஆயுதத்தை உபயோகித்ததில் கையில் மை அழியும் வரை ஒரு விதமான மிதப்பிலேயே இருந்தேன். தேர்தல் முடிந்து, முதல் ஓட்டின் கை மை அழிந்து அரசியலின் கயமை அறியும் அறிவு வர கொஞ்ச காலம் பிடித்தது.

Sorry, there are no polls available at the moment.

நான் என் முதல் ஓட்டை அரசியல் அறியாமையுடன் இருபத்து மூன்றில் போட்டிருக்க, இப்போது பதினெட்டே வயதானவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதம் ஒழுங்காக உபயோகப்படுமா என்ற சந்தேகம் வருகிறது.

என் பெரிய மகனுக்கு பதினெட்டு வயதாகிறது. அரசியல் செய்திகள்கூட பார்ப்பதில்லை, படிப்பதில்லை. யார் தென்/மத்திய சென்னை தொகுதியில் நிற்கிறார் என்று கேட்டால் அவருக்கு தெரியவில்லை.

இதனால், அவருக்கு இந்தியா மேல் அக்கறை இல்லை என்று சொல்லலாமா? அல்லது அரசியலில் ஆர்வம் இல்லை என்று சொல்லலாமா? பதினெட்டு அரசியல் பற்றி அக்கறை வரும் வயதில்லை என்று சொல்லலாமா? கடைசியில் சொன்னதுதான் சரி என்று எனக்குப் படுகிறது. என்னை பொருத்தவரை இருபத்தைந்து வயதுக்கு பின்னர்தான் ஓட்டுரிமை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஓரளவு குடும்பப் பொறுப்புகள் வந்த பின்னரே ஒருவருக்கு உலக விவரங்கள் பற்றி அறிவும், அக்கறையும் வரும் என்று நினைக்கிறேன்.

இதற்க்கெல்லாம் மேலாக, பதினேட்டு ஆனாலும், என் மகனுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவருடையது மட்டுமில்லை, பல தேர்தலாக ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும் என் குடும்பத்தினர் 15 பேரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை – எல்லோரிடமும் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. வைத்துக் கொண்டு என்ன செய்வது?

இதையெல்லாம் பார்க்கும்போது, அவருக்கு வாக்கு இல்லாதது ஒருவிதத்தில் நல்லதாக படுகிறது. அவருக்கு வாக்கே இல்லாததால், அறியாமையுடன் தவறானவருக்கு விழும் வாய்ப்போ, இன்னொருவர் போட்டுவிடும் அபாயமோ, பதிவாகாமல் போய் ஒட்டுமொத்தமாக திட்டுப்படும் இழிவோ இல்லையல்லவா?

இனி என் நண்பன் ஆனந்த் பதிவிட்டு அனுப்பியிருக்கும் முதல் ஓட்டு அனுபவம்.

தொலைக்காட்சி மற்றும் வலைக்காட்சி எங்கும் தேர்தல் அலை, தேர்தல் பேச்சு.

இந்த சூழலில் நான் என்னுடய முதல் ஓட்டு பதிவை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.

என் தந்தை என் பாட்டியிடம்: ”நாங்க எல்லாரும் ஓட்டு போட்டாச்சு நீயும் ஆனந்தும் போய் ஓட்டு போட்டுட்டு வாங்க. ஹெச்.வி. ஹாண்டேக்கு ஓட்டு போடும்மா அவர் நல்லவர் அதுவும் அவர் ஒரு ப்ராமணர் செரியா?”

உடனே என் பாட்டி : ”யாருடா அது ஹாண்டெ?”

என் தந்தை: ”அவர்தாம்மா போன வாரம் வந்து நம்ப தெருவிலே ஓட்டு கேட்டாரே நம்ப ஆத்து வாசல்ல நின்னு கண்டிப்பா எனக்கு ஓட்டு போடுங்கோன்னு கேட்டாரே ஞாபகம் இருக்கா?”

என் பாட்டி: ”என்னமோ போடா எனக்கு சரிபடலே”

என் தந்தை: ”அம்மா உனக்கு புரியாது பேசாம போ ஹெச்.வி. ஹாண்டேக்கு ஓட்டு போடு.” (என் பாட்டியிடம்) “அம்மா! தேர்தல் சீட்டுல பேரு தேட கஷ்டமா இருக்கும் அதனால சேவல் சின்னத்த பார்த்து ஓட்டு போடு” (என்னை பார்த்து) ”டேய் ஆனந்த் பாட்டி கூட போய் ஓட்டு போடு”.

என் பாட்டி: ”நன்னா இருக்கு நீ சொல்லரது – சேவலும் வேண்டாம் கோழியும் வேண்டாம் நான் போய் சூரியன்ல ஓட்டு போட்டுட்டு வரேன். நீ வாடா ஆனந்த் நம்போ ரெண்டு பேரும் போய் ஓட்டு போட்டுட்டு வரலாம்”

நானும் ஏதோ பிரமை பிடித்தவன் போல என் பாட்டி கூடவே போய் ஓட்டு போட்டேன்.

என் பாட்டிக்கு 80 வயதுக்கு மேலிருக்கும் அப்போது (கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு முன்னால்). இப்படித்தான் இந்தியர்களில் பெரும்பாலோர் ஏன், எதற்கு, யாருக்கு என்று தெரியாமலே, யோசிக்காமலே வாக்களிக்கிறார்கள்.

என் பாட்டி சொன்னதால் சூரியனுக்கு வாக்களித்த அந்த முதல் வாக்குக்கு பிறகு, இன்றுவரை நான் என் வாக்குரிமையை பயன்படுத்தவில்லை. இதில் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தது என்பது, பல காரணங்களில் ஒரு காரணம்.

ஆனந்த் எழுதியனுப்பி ஒரு மாதமாகிறது. தமிழக வாக்குப்பதிவுக்கு முன் பதிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். பதித்து விட்டேன்.

இந்த பதிவின் முதல் பாதியில் இருக்கும் அறியாமை கலந்த என் முதல் வாக்கு பற்றி நான் எழுதியபோது ஆனந்தின் முதல் அனுபவமும் அதே என்பதை இந்த பாரா எழுதும்வரை நான் படிக்கவில்லை—

—என்றால் நீங்கள் நம்ப வேண்டும்.

நம்புவீர்கள்.

எனக்கு நம்பிக்கை உண்டு.

அரசியல்வாதிகளின் எத்தனை வாக்குறுதிகளை நம்புகிறீர்கள்? என் கூற்றையும் நீங்கள் நம்ப வேண்டும் என்று உங்களை “வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறேன்”.

:)

முடிந்தால், ஓட்டுப் போடும் மூடு வரும் முன் இதை படித்துவிடுங்கள்

Bookmark and Share

Readers also liked

One Comment »

  • Vijayasarathy R said:

    எனக்கும் கூட என்னுடைய முதல் வாக்கு பதிவு ஒரு பெருமையடையச் செய்த அனுபவமே. எனக்கும் ஓட்டு போட உரிமை இருக்கிறது, நான் அந்த வயதை அடைந்துவிட்டேன் என்று பீற்றிக்கொண்ட நேரம் அது.

    வீட்டிற்கு அருகில் இருக்கும் கார்பரேஷன் அலுவலகம் சென்று ஓட்டளித்தது இன்றும் எண்ண அலைகளில்.

    பிணங்கள் அங்கே லட்சக்கணக்கில் விழுந்து கிடக்க, இங்க பணநாயககர்களின் பணநாயகம் ஜெயித்துக் கொண்டிருப்பது மனதுக்கு பெரும் வேதனை.

    அந்த பிணங்கள் விழ நாம் முழு பொறுப்பு ஏற்க முடியாதென்றாலும், பணத்தால் ஓட்டை ஓட்டையாக்குவதை தடுக்கலாம்.

    கல்கி அவதாரம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது கிருஷ்ணா…உடனே வா. இங்கே பல துரியோதனர்கள் பாரதத்தாயை மானபங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.