ஒரு சாமானிய பிரபலம்
அவர் எங்களிடையே பிரபலமானவர்.
எல்லாமே பையன்களாக பெற்றெடுத்த ஒரு மத்திமர் வீட்டில்தான் அவர் பிறந்தார். பிறந்ததுமே அவர் அனைவரையும் கவர்ந்தார். நிறைய குழந்தைகள் இருந்த அந்தவீட்டில் முதல் குழந்தைக்கு அப்போது பத்தே வயதுதான்.
குடும்பக் கட்டுப்பாடுகள் அத்தனை பிரபலமாகாத காலம் அது. பல வருடங்களாக பெண் குழந்தையே இல்லாத அந்த வீட்டில், மூன்று ஆண் மகவுகளுக்கு பிறகு அடுத்தாகவாவது ஒரு பெண் குழந்தை பிறக்குமா என்ற ஏக்கமும், ஆசையும் அந்த பெற்றோர்களுக்கு இருந்தது. நான்கும், ஐந்தும்கூட ஆணாக பிறந்திட, ஆறாவது முறையாக கருவுற்ற அந்த தாய்க்கும், தந்தைக்கும் இப்போதாவது பெண் மகவு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு. இருப்பினும் பிறந்தது என்னவோ மீண்டும் ஆண்தான்.
பிறந்த குழந்தை பெண் இல்லையென்றாலும் தாய்க்கும், தந்தைக்கும் ஆறாவதாக பிறந்த அந்த மகன் செல்ல மகனானான். ஆறாவது பிள்ளை ஆனைக் கட்டி மேய்க்கும் அதிர்ஷ்டம் படைத்தவன் என்று குடும்பத்தினரும், வாழ்த்தவந்த உறவினர்களும், நண்பர்களும் சொன்னார்கள்.
அவனது அண்ணன்மார்கள் இவர் பிறந்தபோது, அவர்களும் சிறுவர்களாதலால், இவர் வருகையால் மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள். பெரிய அண்ணன் இவர் பிறக்கும் முன் சிறு குழந்தைகளாக இன்னும் நால்வரை பார்த்திருந்ததால் சிறு குழந்தையுடன் விளையாடுவதில் அளவற்ற ஆசை.
அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்ததாலும், அவர்கள் குடியிருந்த வீட்டில் அவர்களுடன் சேர்த்து இன்னும் பத்து மத்திமர் குடும்பங்கள் (எல்லோர் வீட்டிலும் குறைந்தது ஆறு, ஏழு பேராவது இருப்பார்கள்) இருந்ததாலும், அந்த காலத்தில் இப்போதுபோல் அடுக்கக வீட்டில் கதவை தாளிட்டுக் கொண்டு தான், தன் குடும்பம் என்றில்லாமல், எல்லோரும் உறவினர்களை போல் பழகியதாலும், புதிதாக பிறந்த ஆறாமவர் சீக்கிரத்தில் எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்து அந்த வீட்டில் ஒரு எழுபது பேர்களிடம் பிரபலமாக இருந்தார்.
அவர்கள் இருந்த தெரு ஒரு மத்திமர் வாழும் தெரு. எல்லாமே சிறு வீடுகள், பெரும்பாலானவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், அவற்றில் குறைந்தது ஐந்து உறுப்பினர்கள். இப்படி ஏறத்தாழ இருநூற்றைம்பது பேர் அந்த தெருவில். ஏதாவது ஒரு வீட்டில் புது உறுப்பினர் வந்தாலும் (திருமணத்தாலோ, திருமண பலனாலோ) அனைவருமே சொந்தம் கொண்டாடும் நாட்கள் அவை. ஆகவே, இவ்வுலகின் புதிய உறுப்பினராக வந்தவர் எளிதாக இவர்கள் அனைவரிடமுமே பிரபலமானார்.
இந்த காலத்தில் இப்படி பிரபலமாவது கடினம். கதவை தாழிட்டுக்கொண்டு அடுக்ககத்துக்குள் அமர்ந்தால் யாரும் பிரபலமில்லை. இணையத்தில் நண்பர் தேட வேண்டிய காலமிது. அனைவரும் இணைந்து பின்னியிருந்த காலம் அது.
அவர் வளர வளர அவர் வளர்ந்த தெருவில் இன்னும் புது உறுப்பினர்கள் சேர, இந்த தெருவைவிட்டு வேறு இடங்களுக்கு மாறினாலும், வேரை இங்கே விட்டுச் சென்றதால் இன்னும் இணைப்பை துண்டிக்காமல் பலர் இருக்க, இவரை அறிந்தவர்கள் அதிகரித்துக் கொண்டுதான் போனார்கள்.
பிறகு, அவருக்கு பள்ளி வயது வந்ததும், மத்திமரால் அனுமதிக்க முடிந்த பள்ளியில் அவர் சேர்ந்தார். அவருக்கென்று இந்த தெருவிலும், அக்கம்பக்கத் தெருக்களிலும் விளையாட்டுத் தோழர்களும், பள்ளித் தோழர்களும் சேர, இருநூற்றைம்பது நாள்போக்கில் ஆயிரத்தையும் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர் பள்ளிப்பருவத்தில் அவர்கள் வீட்டில் அதிக மகவுகளானதால், இவர் மீது அன்பு குறையாவிட்டாலும், இவருக்கு முன்னே பிறந்தவர்கள் மீது கொடுத்த அளவுக்கு இவருக்கு நேரம் தருவது என்பது பெற்றோருக்கு கடினமாகவே இருந்தது. இருந்தாலும், அந்த காலத்தில், அளவுக்கு அதிகமாக பெற்றோர் பிள்ளைகளின் படிப்பை பற்றி கவலைப்படாமல் ஒழுக்கங்களை பற்றியே கவலை பட்டதால், இவர் நல்ல பிள்ளையாக வளர்ந்தார். பெரிய படிப்பாளியாகாவிட்டாலும், குறை சொல்லமுடியாதபடி படித்தார்.
இவருடைய பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரி பருவம் வருவதற்குள் இவரது பெரிய அண்ணனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. அண்ணன்கள் மேல் அதிகம் பாசம் கொண்ட இவருக்கு அண்ணனின் குழந்தைமேலும் அதே அளவு அன்பும் பாசமும். அண்ணன், அண்ணி இருவருமே அந்த காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இப்போது நாம் பார்க்கும் காலத்தின் தொடக்கத்திற்கு மாறவேண்டிய சூழல். இருவருமே வேலைக்கு சென்றதால், வீட்டில் குழந்தையை கனிவாக கவனிக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக் கொண்டார். அதற்காக, கல்லூரியில் சேருவதற்கு பதிலாக, தபால்வழிக் கல்வியைத் தேர்ந்தார். இதனால், கல்லூரிக்காலம் என்ற ஒரு இனிமையான காலத்தை தியாகம் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த வயதில், அப்படி ஒரு தியாகம் என்பது எல்லோருக்கும் வருவதில்லை. இந்த காலத்தில் வரவே வராது.
விளையாட்டில் பெரிய அளவில் பிரபலமாகாவிட்டாலும், தன் தெரு, பக்கத்துத் தெரு நண்பர்களை இணைத்து கிரிக்கெட் குழு அமைத்தார். அதில், இவரது ஆளுமைத் திறமையாலும், கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்களை தெரிந்ததாலும் நண்பர்களால், இவர் விளையாடியவரை கேப்டனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அந்த நாட்களில் சென்னை மெரினாக் கடற்கரையில் விளையாடிய குழுக்களில் இவரது விளையாட்டாலும், சிறந்த குழுவாலும் இவர் பிரபலமானார். கடற்கரையில் விளையாடுவது என்பது இப்போது வழக்கொழிந்து விட்டது. ஆனால் அந்தக் காலங்களில் (இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர்) கிரிக்கெட் என்றால் மெரினா கடற்கரை கிரிக்கெட்தான் என்று இப்போது 30 வயதுக்கு மேல் இருக்கும் மெரினாக் கடற்கரை அருகில் வாழும்/ வாழ்ந்த எவரைக் கேட்டாலும் சொல்வார்கள்.
தபால்வழிக் கல்வி முடித்ததும், வேலை தேடும் படலம் தொடங்கியது. வேலை கிடைக்கும் வரை தாய்க்கும், தந்தைக்கும், அண்ணன்களின் குடும்பத்துக்கும் உதவியாகவே இருந்தார்.
பயிற்சிக்காக அவர் அண்ணன் வேலை பார்த்த நிறுவனத்திலேயே சம்பளம் வாங்காமல் சில காலம் வேலை செய்தார்.
பின்னர், கிரிக்கெட் மேல் இருக்கும் ஆர்வத்தால், 1999ல் உலகக்கோப்பை கிரிக்கெட் துவங்கும் தருணத்தில் கிரிக்கெட் சார்ந்த இணையதளம் ஒன்றில், ஒவ்வொரு பந்துக்கும் ஸ்கோர் விவரம் தளம் ஏற்றும் வேலையில் சேர்ந்தார்.
அத்துடன் அவருடைய குடும்பப் பொறுப்புகள் சேர, வேலையில் அதிக கவனம் செலுத்தி சீக்கிரமே அந்த நிறுவனத்தில், ஸ்கோரர் என்ற பொறுப்பையும் தாண்டி, தளத்தை மேம்படுத்த தன் உபாயங்களை தந்ததோடு, பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பந்தம் போடுவதில் பங்கேற்பு, தளத்தின் டேடாபேஸ் வடிவமைப்பில் பங்கேற்பு என்று தன் ஈடுபாட்டை அதிகரித்து சற்றேரக்குறைய 300 பேர் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில் பிரபலமானார்.
பின்னர் பொருளாதார நெருக்கடியால் அந்த நிறுவனம் தத்தளித்தபோது, உடனே வெளியேராமல், கிட்டத்தட்ட ஒரு வருடம் சம்பளம்கூட வாங்காமல், நிறுவன இயக்குநர்களுக்கும் ஊக்கம் தரும் வகையில் வேலை செயதார். வேறு வழிகள் ஏதும் இல்லை என்று நிறுவனம் மூடப்பட்ட போது கொஞ்சம் மனமொடிந்தாலும் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து வேறு வேலை தேடும் முயற்சியை தொடங்கினார்.
ஒரு மூன்று வருடங்கள் மிகவும் கடினமான நாட்கள் அவருக்கு. எது செய்தாலும் முழுமையடையாமல் தோல்விகள். வெளிநாட்டில் வேலை தேடலாம் என்று சென்றால் அதிலும் தோல்வியே. அப்போதும் தன் தன்னம்பிக்கையே இழக்காமல் அவரது இளைய அண்ணன் கொடுத்த ஊக்கத்தில் ஏற்கனவே மென்பொருள் அனுபவம் இருந்ததால், அப்போது மிகவும் சிரமப்பட்டு சிரமப்பட்டு ரூ.60000 திரட்டி ஆரக்கிள் ஃபைனான்சியல் என்ற மென்பொருள் கற்றார். அதற்கு பிறகு வசந்தமான நாட்கள் அவர் வாழ்வில் மலர்ந்தன.
அவருக்கு திருமண நேரம் வந்தது. அவருக்கு ஒரு நிலையான நல்ல வேலை அமைந்த மகிழ்ச்சியில் அவரது பெற்றோர்கள் அவருக்கு பெண் தேடினார்கள். ஆனால், சோதனை போல், அவருக்காக பெண் பார்த்து முடிவுசெய்த அதே தினம் அவர் உயிருகுயிராக அன்பு செலுத்திய அவருடைய தந்தை காலமானார். ஆனாலும், மூட நம்பிக்கைகளுக்கு இடம் தராமல், தந்தை பார்த்து வந்த அதே பெண்ணையே மணம் முடிக்க உறுதியளித்தார்.
அவருடைய தந்தை இறந்து 15 நாள் கழித்து அவருடைய திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், மேலும் ஒரு சோதனை அவருக்கு வந்தது. அவருடைய திருமணத்துக்கு மூன்று மாதம் இருக்கும் போது அவருடைய வருங்கால மாமனார் நோய்வாய்பட்டார். தான் புதிய வேலையில் இருந்தபோதும், இன்னும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஆகாத போதும், தன் வருங்கால மாமனாரை அடிக்கடி மருத்துவமனை சென்று கவனித்துக் கொண்டார், மனைவியாகப் போகிறவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும், அனைவருக்கும் பேரிடியாக, இவர்கள் திருமணத்துக்கு ஒரு மாதமே இருக்கும் போது இவருடைய மாமனார் காலமானார். எவராக இருந்தாலும் இது போன்ற சோதனையை தாங்குவது கடினம். இவர் அதையும் தாண்டினார்.
திருமணம் 2006 ஏப்ரலில் நடந்தேறியது. 2007ல் ஆண் மகனை இவர்கள் வரமாகப் பெற்றார்கள். தன் மறைந்த தந்தையின் பெயரையே குழந்தைக்கு சூட்டியிருக்கிறார்கள். தாய், தந்தையின் ஆசியில், இருவரும் வளமாக, எதிலும் வருந்தாமல், கவலை கொள்ளாமல் வாழ்கிறார்கள்.
சமீபத்தில், இவருடைய அண்ணன் இணையத்தில் எழுதுவதை பார்த்து இவரும் எழுத எண்ணினார். தமிழில் எழுத வேண்டும் என்று தேர்ந்தெடுத்தார். அது முதல், இவரிடம் மறைந்திருந்த எழுத்துத் திறமை, இவரைத் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் தெரியத் தொடங்கியது. இன்னும் பிரபலமானார் என்றே சொல்ல வேண்டும். இவருக்கு எப்போதுமே நகைச்சுவை இயல்பாகவே வரும். இப்போது இணையத்தில் எழுதும் போதும் அந்த நகைச்சுவை மிளிர எழுதுகிறார். நகைச்சுவை ஆர்வம் இருந்தாலும், அவ்வப்போது அழுத்தமான பதிவுகளும் இடுகிறார். இவர் இன்னும் பிரபலமாகக்கூடிய அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன.
இத்தனை ஆண்டுகளில் அவர் கவலைகளை பற்றி கவலைப்படாமல் இருந்ததில் உருவம் பெருத்து விட்டது. குழந்தைப் பருவத்துக்கு பிறகு இப்போது மீண்டும் நடை பழக ஆரம்பித்து இருக்கிறார்.
அவர் உடல் எடை அதிகம்
தலை எடை இல்லை!
அவருக்கு இடை பெரிது, ஆனால்
எந்தத் தடையும் பெரிதில்லை!
எங்களிடம் மிகவும் பிரபலமான இவர் இன்று 34 வயதை கடந்து 35வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு இறைவன் எல்லா நலனையும் அருள வேண்டுகிறோம். பல்லாண்டு மகிழ்ச்சியான, மன அமைதி நிறைந்த வாழ்வுபெற வாழ்த்துகிறோம்.
இந்த பதிவு, அவருக்கு வாழ்த்து சொல்ல மட்டுமின்றி எந்த ஒரு சாதாரணனின் வாழ்விலும் தடைகள் உண்டு என்பதையும், அந்தத் தடைகளால் அடிபடாமல், அடுத்த அடியை நம்பிக்கையுடன் எடுத்து வைப்பவர் எவருக்கும் வாழ்க்கை தோல்வியாவதில்லை என்பதை அறிவுறுத்தவும்தான்.
இந்த சாமனியரான பிரபலத்துக்கு வாழ்த்து சொல்ல இங்கே செல்லுங்கள்.









அவருடைய ஆயிரக்கணக்காண நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமை. அவரின் இத்தகைய பிரபலத்திற்கு வித்திட்டவர்களில் தலையானவர் நீங்கள் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
எல்லா புகழும் இறைவனுக்கே ரஹ்மான் வாக்கு
எல்லா புகழும் அண்ணணுக்கே சாரதி வாக்கு
Excellent write up. You have captured the 34 years in probably 34 lines but in a nice way. I can personally trace through most part of it (atleast 27 years). I have seen the way he courageously left Dubai without a job and came back with a good job on hand. Great guy with enormous patience and will power.
I wish Sarathy all the very best in his life.
- T.P.Anand
“அவர் உடல் எடை அதிகம்
தலை எடை இல்லை!
அவருக்கு இடை பெரிது, ஆனால்
எந்தத் தடையும் பெரிதில்லை!”
Happy b’day Vijaysarathi … and a brilliant ode by his bro … love those lines above …
சத்தியமூர்த்தி உனக்கு முதல் நன்றி. இந்த பதிவிற்காக அல்ல. இந்த பதிவில் என்னை பற்றி எழுத என்னை அந்தளவிற்கு தேற்றியதற்கும், ஊக்கு (நாட் பின்)வித்ததற்கும், உதவியதற்கும், பாசம் காட்டியதற்கும்.
இரண்டாவதாகவும் உனக்கு நன்றி. இந்த நன்றி இந்த பதிவிற்காகத்தான். நான் இத்தகைய பதிவிற்கு ஏற்றவனா என்று இன்னும் சந்தேகம்தான்.
மூன்றாவதாகவும் உனக்கு நன்றி. நான் என்பதை மறந்து ஒரு சாதரணனின் வாழ்க்கையை படிப்பதாக படிக்கும் போது ஆனந்த் சொன்னது போல 34 வருட வாழ்க்கையை இப்படி அமர்க்களமாக 40 வரிகளில் எழுதியதற்கு.
நான்கவதாக…..போதும்டா சாமி, இனிமே எழுதினா என்ன எப்படி வேணும்னாலும் கேளு..அப்படின்னு நீங்க வெறுப்பின் உச்சத்துக்கே போறது தெரியுது…இதோட நிறுத்திக்கறேன்.
Dear Sathyஅmurthy Sir,
Hats off to you! ! !
Its a great pleasure to know the plus about Sarathy.
எல்லோரும் எழுதலாம் ! ! !சாரதி தங்களின் சகோதரரின் எழுத்துக்கள் நிஜமாகவே ஒரு பொக்கிஷம்! ! ! உங்களின் வருங்காலம் வளமாக இருக்கும், இருக்க இறைவனை வேண்டுகிறேன் ! ! ! வாழ்த்துக்கள் ! !
Leave your response!
Subscribe
Archives
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Recent Posts
Blogroll
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed
Switch to our mobile site