Home » Chennai, Children, Fun, Interesting, Tamil-தமிழ்

லாஜிக் இல்லா மேஜிக்

17 April 2009 1,589 views 4 Comments

மேஜிக் என்றாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடிக்கும்.

தமிழ் தொலைக்காட்சிகளில் கூட மேஜிக் நிகழ்ச்சிகள் களை கட்டுகின்றன. வசந்தின் “லாஜிக் இல்லா மேஜிக்” – கலைஞர் தொலைக்காட்சியில் வருகிறது. வசந்த் பல மேஜிக்குகளை செட்டிங்குகள், முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல், எல்லோரும் புழங்கும் இடங்களில் செய்து காட்டுவது மூக்கில் விரலை வைக்க வைக்கிறது.

செட்டுகள் போட்டு காட்டும் மேஜிக் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறும் காலையில் ஒளிபரப்பாகியது (இன்னும் இருக்கிறதா, இல்லை நிறுத்திவிட்டார்களா? நான் சில வாரங்களாக பார்க்கவில்லை).

நான் சிறுவயதில் சில மேஜிக் ஷோக்களை பார்த்திருக்கிறேன். பள்ளியிலும் சிலமுறை எங்கள் பள்ளியின் – பின்னாளில் மேஜிக் நிபுணரான – பழைய மாணவர் (பெயர் மறந்துவிட்டது) ஒருவரை அழைத்து பள்ளி வளர்ச்சி நிதிக்காக மேஜிக் காட்சி நடத்துவார்கள்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதெல்லாம் தாண்டி, பிரபல மேஜிக் நிபுணர்கள், பெரிய பெரிய விஷயங்களை சில வினாடிகளுக்கு நம் கண் காட்சியில் மறைய வைப்பார்கள். ஒரு மேஜிக் நிபுணர், அமெரிக்கா லிபர்ட்டி சிலையை அப்படி மறைய வைத்திருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு விமானத்தை (பறக்காமல்) மறையச் செய்வதை பார்த்திருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன், கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், எஸ்.ஏ.சி. வசந்த், இளைஞர்களை வட்டமாக கண்ணை மூடிக்கொண்டு நிற்க வைத்துவிட்டு, அவர்களுக்கு நடுவில் இருந்த வெற்றிடத்தில் ஒரு பெரிய டயோட்டா காலிஸ் வண்டியை வரவழைத்தார்.  இதை  நடத்திக்  காட்டியது  ஒரு  பெரிய  மைதானத்தில். எப்படி  செய்தார்  என்று  இன்னும்  கூட  வியப்பாக  இருக்கிறது.  இந்த  மேஜிக்கை  ரிக்கார்ட்  செய்து  மில்லி  மில்லி  மீட்டராக  நகர்த்தி  பார்த்தாலும்  என்ன  தந்திரம்  என்று  கண்டுபிடிக்க  முடியவில்லை.

இதுபோலெல்லாம்  இல்லாவிட்டாலும்  நாம்  அனைவருமே  ஒரு  முறையாவது  மேஜிக்  செய்திருப்போம்.

சீட்டுக்கட்டு வைத்து மேஜிக் செய்வது;  விவரம் தெரியாத சிறுவர்கள் மாட்டிவிட்டால், கட்டைவிரலை வெட்டிக் காணாமல் போகச் செய்து மீண்டும் வ(ள)ரவைக்கும் மேஜிக்; “சூ போ!” என்று நாணயத்தை (?) மறையச் செய்வது  என்று.  குறைந்த  சம்பளம்  வாங்கும்  எனக்கு  தெரிந்த  சிலருக்கு  பணத்தை  மாதம்  முழுவதும்  நீட்டும்  மேஜிக்  தெரியும்.  அதிக  சம்பளம்  வாங்கினாலும்,  ஒரு  பைசாகூட  கையிலில்லாமல்  மாயமாக்கும்  மேஜிக்  எனக்குத் தெரியும்; ஏறக்குறைய  இருபது  வருடங்களாக  செய்து கொண்டிருக்கிறேன்.

பதிவுலகத்தில் சிலருக்கு  நிறைய  ஓட்டும்,  மறுமொழிகளும்  வாங்கும்  மேஜிக்  தெரியும்.

சில அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் எப்போதுமே வெற்றிக்கூட்டணியில் இருக்கும் ”மருத்துவ” மேஜிக் தெரியும். ஆனால் அதை சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் செய்வார்கள்.

சில நடிகர்களுக்கு எங்கே கதாநாயகிக்கு ஆபத்து என்றாலும் உடனே அங்கு செல்லக்கூடிய மேஜிக் தெரியும். (இந்த மேஜிக்கை பலருக்கும் சொல்லித் தந்தவர் புரட்சித் தலைவர்தான்). பல நடிகர்களுக்கு பயிற்சி இல்லாமலே குதிரை முதல் விமானம் வரை எதையும் ஓட்டும் மேஜிக் தெரியும்.

அவர்களுக்கு தெரிந்த இன்னொன்று – படத்தில்  துரத்தும் காட்சியில் காரோ பைக்கோ எடுத்துக் கொண்டு புது  ஊரிலும்  ரொம்ப பழகியது போல் சந்து பொந்துகளில் வளைந்து, திரும்பி போகும் மேஜிக். உதாரணத்துக்கு, உலகிலேயே முதல் முறையாக ஒரு நடிகர் 8 முகமூடி அணிந்து நடித்த சாதனையை அடக்கிய தசாவதாரம் படத்தில், வாழ்க்கையிலேயே முதல்முறையாக இந்தியா வரும் க்ரிஸ்டியன் ஃப்ளெச்சர் அநாயசமாக எல்லா வழியும் தெரிந்து வண்டி ஓட்டுவது!.

கதாநாயகர்கள்  காட்டும்  மற்றுமொரு  மேஜிக்,  காரைவிட,  விமானத்தைவிட  வேகமாக  ஓடுவது,  சைக்கிள்  ஓட்டுவது  (இவர்கள்  துரத்தினாலும்,  இவர்களை  துரத்தினாலும்).

தொத்தல்  நடிகையையும்  அழகாகக்  காட்டுவது காமிராமேதைகளின்  மேஜிக்.  வத்தல்  நடிகரையும் குண்டர்களை  அடிக்க  வைப்பது  ஸ்டண்ட்  மாஸ்டர்களின்  மேஜிக்.

ஒண்ணுமில்லாத  விஷயத்தை  வைத்து  24  மணி  நேர  பலூன்  ஊதுவது  செய்தி  தொலைக்காட்சிகள்  காட்டும்  மேஜிக்.    ஒரு  நூலை  வைத்துக்கொண்டு  நாம்  நொந்து  நூடுல்ஸ்  ஆகும்  வரை  கதை  வளர்ப்பது  மெகா  சீரியல்  இயக்குனர்களின்  மகா  மேஜிக்.

நம்மால் முயன்றாலும் முடியாத மேஜிக்குகளில் மனைவியை புடவைக் கடைக்கு அழைத்து சென்று சீக்கிரத்தில் புடவை தேர்ந்தெடுக்க வைப்பதும், அவர் வாங்கும் புடவை விலைக்கேற்ப சம்பாதிப்பதும் அடங்கும்.

இன்னும் பல லிஸ்ட் போடலாம், அது இன்னொரு பதிவில்… எல்லாம் ஒரே பதிவில் போட்டுவிட்டால், நீங்க மேஜிக் போல மாயமாய் மறைந்துவிடுவீர்களே! உங்களை மீண்டும் வரவழைக்கும் மேஜிக்தான், முடியாத மேஜிக்குகள் பற்றி  நான்  எழுதப்போகும்  இன்னொரு பதிவு. (“இந்த பதிவுக்கு சரக்கு போதவில்லை என்று இப்படியும் சமாளிக்கலாம்!” :) தம்பி விஜயசாரதி, அந்த பதிவ நீ போட்டுறாதப்பா!)

நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு மேஜிக், இன்னும் எந்த மேஜிக் நிபுணரும் செய்யாத மேஜிக்  – நம்ம நாட்டில்  இருக்கும் லஞ்ச லாவண்யத்தை மறையச் செய்வதுதான்!

உங்களுக்கு தெரிஞ்ச மேஜிக் நிபுணர் யாராவது இருந்தா கொஞ்சம் கேட்டுப் பாருங்க! நமக்கு ”PC” சர்க்கார் எல்லாம் சரிவராது; நமக்கு வேண்டியது லஞ்சமில்லாத சர்க்கார்!

Readers also liked

4 Comments »

  • Maximum India said:

    You have done a magic with a logic

  • triplicani (author) said:

    ஒரு வீடியோ ஒரு பதிவை போட தூண்டியது என் மூளையின் மேஜிக்!

  • Vijayasarathy R said:

    பதிவு அருமை. லாஜிக் இல்லா மேஜிக் என்று தலைப்பு சொன்னாலும், பின்வந்த பட்டியல் எல்லாம் லாஜிக்கான மேஜிக்தான். கடைசியா கோடிட்டு காட்டின செய்ய முடியாத மேஜிக் உங்களோட அடுத்த பதிவ அவுலோட….ச்ச்சே..சாரி, ஆவலோட எதிர்ப்பார்க்கிறேன்.

    ”உங்களுக்கு தெரிஞ்ச மேஜிக் நிபுணர் யாராவது இருந்தா கொஞ்சம் கேட்டுப் பாருங்க! நமக்கு ”PC” சர்க்கார் எல்லாம் சரிவராது; நமக்கு வேண்டியது லஞ்சமில்லாத சர்க்கார்!” – எங்கயோ…யோ….ஓ…ஓ….போயிட்ட்டீங்க போங்க….

  • triplicani (author) said:

    விஜயசாரதி,

    என்ன சொல்றீங்க? “ஓ” போயிட்டனா? “சூ போ” சொன்னீங்களா?

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.