Home » Chennai, Headline, Tamil-தமிழ், கதைகள்

கல்லூரிக்குக் கட்டடித்த போது

7 April 2009 2,344 views 7 Comments


நான் கல்லூரியில் படித்தது 1981-84 வருடங்களில். பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பில்லாத எண்களால் எனக்கு இடம் கிடைத்தது மாலை நேரக் கல்லூரியில்தான்.

என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள் அவை.  மாலை நேரக் கல்லூரி என்பதால், எழுவது, குளிப்பது, சாப்பிடுவது என்று எல்லாமே மெகா சீரியல் போல மெதுவாகத்தான்.  காலை எட்டரை முதல் ஒன்பதரை மணி வரை, வானொலியில், விவித்பாரதி் தமிழ் பாடல்கள், ஒன்பதரைக்கு 300 Mhz திருப்பினால் இடை விடாமல் ஐந்து மணிவரை இலங்கை வானொலி தமிழ்ச் சேவை.

உண்மையாகவே, புத்தகம் கையிலே, புத்தியோ பாட்டிலே.  ஐந்து மணிக்கு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு உடை மாற்றிக் கொண்டு கல்லூரிப் பயணம்.

கல்லூரி நேரம் மாலை 6 முதல் 8.30 வரை.  ஐம்பது நிமிடத்துக்கு ஒரு வகுப்பு என்று தினமும் மொத்தம் மூன்று வகுப்புகள்.  (இதில் வெள்ளிக் கிழமைகளில் கடைசி இரண்டு வகுப்புகள் கட்டடித்து “ஒலியும், ஒளியும்” பார்க்க ஓடியது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்).

வகுப்பு முடிந்து கல்லூரிக்கு வெளியே வர பத்து நிமிடங்கள் பிடிக்கும்.  பிறகு பேருந்து பிடித்து திருவல்லிக்கேணி வந்து சேர இன்னொரு நாற்பத்தைந்து நிமி.  திருவல்லிக்கேணியில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு வந்து சேர ஐந்து நிமி.  ஆக, கல்லூரியில் அனைத்து வகுப்புகளிலும் அமர்ந்தால், இரவு 9.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்துவிடுவது வழக்கம்.

கட்டடிக்கும் நாட்களின் கதையே வேறு.  கட்டடித்து வீட்டுக்கு திரும்பினால், 9.30க்கு முன்னரே வீடு வந்து சேர்ந்துவிடுவேன்.  (உ-ம்: வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும் பார்க்க அடிக்கும் கட்).

மாலைக்காட்சி சினிமாவுக்காகக் கட்டடித்தால், படம் முடியவே பத்து ஆகிவிடும்.  பத்து மணிக்கு பிறகு பேருந்து வருகையும் குறைந்துவிடுவதால், படம் விட்டு, பேருந்து பிடித்து வீடு  வந்து சேர பதினொன்று அல்லது பதினொன்றரை மணிவரை கூட ஆகிவிடும்.

இத்தனை தாமதமாக வீடு திரும்பினால் வீட்டில் கவலை கொள்வார்கள்.  தவிர, கை செலவுக்கு வீட்டில் கொடுக்கும் பணம் சினிமா டிக்கட் வாங்க போதாது  (தினமும் பணம் தர மாட்டார்கள்).   ஒரு மாதம் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேமித்தால், ஒருநாள் சினிமா டிக்கட்டுக்கு பணம் சேர்ந்திருக்கும்.

இந்தத் தொல்லைகளால், சினிமாவுக்காக கட்டடித்தது மிகக் குறைவு.

1982ன் பின்பகுதி என்று நினைக்கிறேன்.  அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது இளங்கலை வணிகம் (B.Com.,) இரண்டாம் வருடம்.

தினமும் என் நண்பன் ஆனந்துடன் 27B பஸ் படித்து, திருவல்லிக்கேணியிலிருந்து அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி போவது வழக்கம்.

வண்டி அரும்பாக்கம் போகும் முன் குறுக்கிடும் திரையரங்குகள் ஈகா, அமைந்தக்கரை லட்சுமி (இப்போ இருக்கா?).

ஈகாவில் பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களையே திரையிடுவார்கள்.  அமைந்தக்கரை லட்சுமியில், ஏற்கனவே பெரிய திரையரங்குகளில் ஓடி ஓய்ந்த படங்களையும், இரண்டாம் வரிசை நடிகர்கள், இயக்குனர்களின் புதிய படங்களையும் திரையிடுவார்கள்.

27பி பேருந்து அவ்வளவு வசதியாக ஈகா அருகில் நிற்காது.  ஆனால், லட்சுமி திரையரங்குக்கு நேர் எதிரே நிற்கும்.   லட்சுமி திரையரங்கக் கட்டணமும் ஈகாவை விட குறைவு.  எனக்கும், என் நண்பனுக்கும் மிகவும் பிடித்த விசு, மௌலி படங்கள் லட்சுமி திரையரங்கிலேயே அதிகம் திரையிடுவார்கள்.

அதனால், லட்சுமி திரையரங்கை தாண்டும்போதெல்லாம் என்ன படம் போட்டிருக்கிறார்கள் என்று நோட்டம் விடத் தவர மாட்டோம். அன்று, மௌலியின் “ஒரு வாரிசு உருவாகிறது” படம் திரையிட்டிருந்ததை பார்த்ததும், இருவர் மனதிலும் ஒரே எண்ணம்.

“போலாமா?” என்றான் ஆனந்த்.

”பணம் இல்லடா” -  நான்.

ஆனந்த் அப்போதெல்லாம் பகல் நேரத்தில்  “ஜாப் டைப்பிங்”  செய்து கொண்டிருந்தான்.அதனால், அவனிடம் பண நடமாட்டம் சற்று அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருக்கும்போது ஆனந்த் ஒரே சமயத்தில் குபேரனாகவும், கர்ணனாகவும் காட்சியளிப்பான்.  கண்ண பரமாத்மாவையொத்த மந்தகாச புன்னகையுடன் “பாத்துக்கலாம், வா!” என்றான்.

உடனே பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்து எதிர் பக்கமுள்ள திரையரங்குக்கு சென்றோம்.  டிக்கெட் கொடுக்கும் இடத்தில் அத்தனைக் கூட்டம் இருக்கவில்லை.  ஐந்து ரூபாய் என்று நினைக்கிறேன், கொடுத்து இரண்டு டிக்கெட் வாங்கினான்.

”படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கேடா.  போய் ஏதாவது டிபன் சாப்பிடலாமா?” என்றான்.

தியேட்டரை ஒட்டினாற்போல் கௌரி ஷங்கர் என்கிற ஒரு ஹோட்டல்  (இப்போது இருக்கிறதா  தெரியாது) போய் வயிறு நிறைய சாப்பிட்டோம்.   பிறகு தியேட்டருக்கு போய் படம்.

கட்டடித்து விட்டு படத்துக்கு வந்துவிட்டாலும், எனக்கு உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.  எத்தனை நம்பிக்கையுடன் கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார்கள்,  இப்படி தியேட்டருக்கு வந்து விட்டோமே என்று.

என் மன நிலைக்கேற்றார்போல், படத்தின் கதையும்.

மிகவும் கஷ்டப்பட்டு, பிரதாப் போத்தனும், ஸ்ரீப்ரியாவும் தங்கள் ஒரே மகனை படிக்க வைக்கிறார்கள்.  மகன் வளர்ந்த பின்னால் அப்பா அம்மாவின் தியாகங்களை புரிந்து கொள்வதில்லை என்பது போல் அந்த கதை செல்லும்.  அப்பா பிரதாப் மகனுக்கு பள்ளியில், கல்லூரியில் சீட் வாங்க ரொம்ப சிரமப்படுவார் என்பது போல காட்சிகள் வரும்போது கட்டடித்து அந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ரொம்பவும் உறுத்தல்.  ஆனால், பாதியில் எழுந்து போகாமல் முழுப்படத்தையும் பார்த்து விட்டுதான் வந்தேன்.

படம் முடிந்தாலும் மனதில் ஒரு பாரம்.  படத்தின் தாக்கத்தால், இனிமேல் கல்லூரிக்கு கட்டடிக்க கூடாதென்று மனதில் எண்ணிக்கொண்டு, பேருந்து பிடித்து வீட்டுக்கு அருகே வரும் போது மணி கிட்டத்தட்ட பதினொன்றரை ஆகி விட்டது.  தெரு திருப்பத்திலேயே, என் அம்மாவும், பாட்டியும், பக்கத்து வீட்டு மாமியும் கவலையுடன் என்னை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள்.

அம்மா என்னை பார்த்து “ஏண்டா கண்ணா இவ்வளோ லேட்” என்றாள்.

ஒரு வாரிசு உருவாகிறது புகட்டிய பாடத்தால், உண்மையை சொல்லிவிடலாம் என்று “காலேஜ் கட் பண்ணிட்டு ஆனந்தோட சினிமா போயிட்டு வரேம்மா” என்றேன்.

என் அம்மா, பக்கத்து வீட்டு மாமியிடம் “ஏன் லேட்னு கேக்கறமாம்; அதுக்கு எத்தன கோவம் பாருங்கோ.  சினிமாவுக்கு போயிட்டு வரேன்னு கிண்டலா சொல்றான்”.

“நீ வாடா, சாதம்லாம் ஆறி அவலா போறது” என்றாள்.

அட இது ரொம்ப நல்லா இருக்கே! (கிளிக் பண்ணிதான் பாப்பமே – சிவகுமார் குரல்ல)

Readers also liked

7 Comments »

  • T.P.Anand said:

    Dear Murthy,

    I am amazed by the confidence your Mother had in you.

    Please do write about the experience we had in Gowrishankar when Congress workers ransacked the restaurant while we were both eating.

    Regards,
    Anand T P

  • Prasanna said:

    Well naratted and written. Especially the last line “நீ வாடா, சாதம்லாம் ஆறி அவலா போறது” என்றாள் – scintillating!! Typical short story ending you would find in sujatha / tamil magazine stories. Good one.

  • Vijayasarathy R said:

    சில நேரம் அல்ல எல்லா நேரமும் உண்மையான வாய்மையே வெல்லும்.

    நீங்கள் விவரித்த விதம் மிக அருமை. கண்முன்னே காட்சிகள் ஓடின.

    நல்ல பதிவு சத்தியமூர்த்தி.

  • Ram N said:

    1) Ega, Lakshmi & Murali Krishna (you’ve not been here?)
    2) Gowri shankar? there’s one always near Ega, but near Lakshmi i’ll see when i cross next time.
    3) The end is like the Sprite – Baki all bakwas adv., where he says one gal friend that he was with the other and she says dont joke ….

  • triplicani (author) said:

    Ram,

    Only one difference from the Sprite ad. In my case it was all real and in comparison Sprite scene is bakwas.

  • என். சொக்கன் said:

    அருமையான பதிவு – கடைசிப் பகுதி ஒரு நல்ல சிறுகதைபோல் இருந்தது!

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

  • சத்தியமூர்த்தி (author) said:

    சொக்கன்,

    வருகைக்கும், பின்னூட்டம் மூலம் தந்த ஊட்டத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் மாதிரி ஆட்களால்தான் மாதம் மும்மாரி இல்லாவிட்டாலும் கொஞ்சமாச்சும் பெய்கிறது!

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.