உங்களிடம் ஐநூறு ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள்
இன்று ரொம்ப நாளைக்கு பிறகு ஆர்குட் தளத்திற்கு சென்றிருந்தேன்.
அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே சென்று, என்னுடைய நண்பர் ஒருவரின் பக்கம் சென்றடைந்தேன். அங்கே ஒரு கேள்வி. உங்களிடம் ஐநூறு ரூபாய் கொடுத்தால் என்ன செய்வீர்கள் என்று.
என் மனதில் உடனே தோன்றிய எண்ணம், ”வரவு என்று வைத்துக் கொள்வேன், பிறகு என் தினசரி செலவில் அதை உபயோகிப்பேன்”.
இந்த கேள்விக்கு விடை கேட்டு பலரை பேட்டி கண்டு ஒரு அருமையான குறும்படத்தினை நிதின் என்பவர் இயக்கியிருக்கிறார். அந்த குறும்படத்தின் உரலை நண்பர் கொடுத்திருந்தார். கீழே அந்த படம்.
படத்தை பார்த்து விட்டீர்களா? என்ன ஒரு அருமையான சிந்தனை. நல்ல விஷயம் செய்ய அதிக பணம் வேண்டாம். பெரிய மனது மட்டுமே வேண்டும். ஒரு வருடத்திற்கு ஒரு வசதியற்ற ஒரு குழந்தைக்கு படிக்க உதவ நாம் சில அனாவசிய செலவினங்களை சற்றே குறைத்தால் போதும். ஒரு மாதத்தில் ஒரு நாள் நம் உபரி செலவுகளை பாதியாக, ஏன் 90 சதவீதம் கூட குறைக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். அப்படி சேமித்த பணத்தை நன்கொடைக்கலாம்.
நன்கொடைக்காக எப்படி சேமிப்பது? என் உபாயங்கள்:
முதலில் வீட்டில் ஒரு நன்கொடை உண்டியல் தயார் செய்யுங்கள். அதில்,
1. புகை பிடிப்பவரா? வருடத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் புகைபிடிப்பதை தவிர்த்து அந்த பணத்தை மேற்கூறிய உண்டியலில் இடுங்கள்
2. வழக்கமாக ஆட்டோவில் செல்பவரா? ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் பேருந்தில் சென்று, ஆட்டோவுக்கும், பேருந்து கட்டணத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மே.கூ.உ.இ.
3. ஹோட்டலில் மதிய உணவு சாப்பிடுபவரா? மாதம் ஒரு நாள் மதிய உணவை தவிர்த்து, இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதம் மே.கூ.உ.இ.
4. ஒரு நாள் பைக் அல்லது கார் எடுக்காமல், பேருந்து உபயோகித்து மே.கூ.உ.இ.
5. மிக, மிக எளிதான, நான் கடைபிடிக்கும் உபாயம். ஒன்று, இரண்டு, ஐந்து ரூபாய் நாணயங்கள் நீங்கள் தினசரி வீடு திரும்பும்போது எத்தனை இருக்கிறதோ அத்தனையையும் உண்டியலில் இடுவது. நான் அப்படி செய்து வருடத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் கூட சேர்த்திருக்கிறேன்.









நானும் கூட உங்களைப் போலத்தான். தினமும் மீறும் நாணயங்களை (அது எவ்வளவு இருந்தாலும்) தனியாக சேர்த்துவிடுவேன். என்ன ஒரே வித்தியாசம் நன்கொடைகளை நான் வேறு பல விதத்தில் செய்வதால், இந்த சில்லரைக்காசுகளை கோயில் உண்டியலில் சேர்த்துவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.
வீடியோவின் சாராம்சம் பிரமாதம். ஆனால் வீடியோ அந்தளவிற்கு ரசிக்கும்படி இல்லை. அப்படியிருந்ததில் தவறொன்றும் இல்லை.
எனக்கு ரூ.500 கிடைத்தால்:
என் குழந்தைக்கு செலவிடுவேன் அல்லது கடவுளுக்கோ அல்லது ஏதாவது வயது முதிர்ந்த சோற்றுக்கு அல்லாடும் பெரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பேன்.
Leave your response!