சுபிக்ஷாவும் சத்யமும் ஒன்றல்ல
சுபிக்ஷா நிறுவனம், என்னை பொறுத்தவரையில் ஒரு சிறந்த சிந்தனையின் அடிப்படையில் துவங்கி நடத்தப்பெற்றதே. இப்பொழுது இந்த நிறுவனமும் பிரச்னைகளில் சிக்கியிருக்கிறது. மூடப்பட்ட கடைகள், பண பற்றாக்குறை, சம்பள பாக்கி என பலமுனைகளிலும் பிரச்னை.
இதனால், சிலர் சுபிக்ஷாவையும் சத்யம் நிறுவன மோசடி போல பார்க்கிறார்கள்.
சத்யம் நிறுவன மோசடியையும் இதையும் ஒரே தட்டில் வைக்கமுடியாது. அங்கு நடந்தது திருட்டு. இது பொருளாதார தேக்கத்தினால் ஏற்பட்ட நெருக்கடி. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கும் மேல், பங்கு சந்தை சூடாக இருந்தபோது, சில வெளிநாட்டு நிறுவனங்கள் சுபிக்ஷாவில் பங்கு வாங்க வந்தபோது சுப்ரமணியம் அதை ஏற்கவில்லை.
பணம் வேண்டாம் என்று இருந்திருக்கலாம், அல்லது பேராசையால் (இன்னும் அதிக விலைக்காக) மறுத்திருக்கலாம். ஆனால் மறுத்தார் என்பது உண்மை. பணம் சுரண்டும் எண்ணம் உள்ளவர்கள் இப்படி செய்யமாட்டார்கள்.
இந்த நிறுவனத்தின் உள்கட்டுப்பாடுகள் (internal control systems) சரிவர இயங்காமல் இருந்திருக்க அதிக வாய்ப்பு உண்டு. மிக அதிக இடங்களில் கிளைகளை வைத்து இயக்குகையில் உள்கட்டுப்பாடுகள் பலமாக இருக்கவேண்டியது அவசியம். இல்லாவிடில் பொருள் திருடு போவது, தவறான கொள்முதல் கணக்கு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ”வாடிக்கையாளர் சேவை” பற்றி அத்தனை கவலைப்பட்டது போல் தெரியவில்லை. குறைந்த விலைக்கு தான் அதிக முக்கியத்துவம் தந்தார்கள் என நினைக்கிறேன்.
மேலும், சுபிக்ஷா ஒரு சூப்பர் ஸ்டோர் என்பதைவிட ஒரு பெரிய பலசரக்கு கடை என்பது போல்தான் நடத்தினார்கள். அதனால் அவர்கள் எந்த பகுதியிலும் சிறிய இடம் கிடைத்தால் கூட கிளை திறக்கமுடிந்தது.
மளிகைக்கடைக்கும் இவர்களுக்கும் இருந்த ஒரே வேறுபாடு, மளிகைக்கடைக்கு கிளைகள் கிடையாது, இவர்களுக்கு உண்டு.
மற்றபடி, சூப்பர்ஸ்டோர் போனால் நாமே வண்டி தள்ளி சென்று பொருள் எடுக்கும் விதத்தில் இவர்களிடம் ஆரம்ப காலங்களில் கிடையாது. மளிகைக்கடைபோல் வெளியிலேயிருந்துதான் கேட்டு பெறவேண்டும். (பின்னாளில் அவர்கள் வண்டி தள்ளி பொருள் எடுக்கும் வசதியை தந்தார்கள் என்று என் சகோதரர் மணல்கயிறு விஜயசாரதி சொன்னார்)
கூட்டம் அதிகம் இருந்தால் நம் பொருளை பெறுவதற்கு மிகவும் காத்திருக்கவேண்டும். தவிர, நாம் வேண்டிய பொருள் பல சமயங்களில் அவர்கள் இருப்பில் இல்லை என்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
இப்படி நாம் பொருள் கேட்டுப் பெறுவதில் நிறுவனத்திற்கு ஒரு நஷ்டம் உண்டு. வண்டி தள்ளி சென்று பொருட்களை பார்வையிட்டு எடுப்பதில் நம்மில் பலர், சில தேவையில்லாத பொருட்களையும் வாங்கிவிடுவோம். தவிர, சில பொருட்களுக்கு தேவையை அந்த இடத்திலேயே யோசித்து வாங்குவோம். மேலும் சில அதிகம் உபயோகிக்கும் பொருட்களை சலுகை காரணமாக அதிகமாகவே வாங்கிவிடுவோம். சுபிக்ஷாவில் வண்டி தள்ளாமல், வெளியில் நின்று வாங்குவதில், இந்த அதிகப்படி வாங்குதல் தவிர்ந்தது.
சென்னையில் எங்கள் பகுதியான திருவல்லிக்கேணியில் அருள்மிகு பார்த்தசாரதி ஆலயத்தின் அருகில் இந்த கிளை ஒன்று வந்தபின் அக்கம்பக்கம் இருந்த எல்லா மளிகைக்கடைகளின் விற்பனை படுத்தது. ஒரு மாத மளிகையில் ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை மிச்சம் பிடிக்கலாம் என்பது பலரை கவர்ந்து வாடிக்கையாளராக்கியது.
சுபிக்ஷா வருகையால் வாடிக்கையாளர் குறையவும், பல ஓரளவு பெரிய மளிகைக்கடைக்காரர்கள், தங்கள் சேவையை மேம்படுத்தினார்கள். அவர்களும் தள்ளுபடி தரத் துவங்கினார்கள். தொலைபேசியில் ஆர்டர் பெற்றுக்கொண்டு, வீட்டுக்கு பொருட்களை கடை பையனிடம் கொடுத்து அனுப்பத் தொடங்கினார்கள். இவர்கள் மிக அதிகம் கொள்முதல் செய்து சரக்கு வைத்துக் கொள்ளாததால், பொருட்கள் புதிதாகவும், தரத்துடனும் இருந்தன. அதனால், முதல் கவர்ச்சியில் சுபிக்ஷா சென்றவர்கள்கூட காலப்போக்கில் மீண்டும் மளிகைக்கடைக்கு திரும்பினார்கள் என்பது என் அபிப்பிராயம்.
நான் “Discipline of Market Leaders” என்ற புத்தகத்தில் படித்ததது:
உலகில் மூன்று விதமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள், விலைக்கு அலைபவர்கள் (cost conscious), கலைக்கு அலைபவர்கள் (technology conscious), நேரத்துக்கு அலைபவர்கள் (time conscious).
ஒவ்வொரு வணிக நிறுவனமும், வெற்றிபெற வேண்டுமானால், தான் எந்த வித வாடிக்கையாளரை குறிவைக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும் என்கிறார்கள் மேற்சொன்ன “Discipline of Market Leaders” என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள்.
விலைக்கு முக்கியத்துவம் தரும் நுகர்வோர், கலையையும், நேரத்தையும் விட விலை குறைவாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். Walmart, சுபிக்ஷா, சரவணா ஸ்டோர்ஸ் போன்றவை இவர்களுக்கு குறிவைப்பவை. Walmart-ன் குறிக்கோள் “ஆகமொத்தத்தில் குறைந்தவிலை” என்பது (Lowest total cost). ஒரு பொருள் அவர்களிடம் வாங்கினால், அது வேறு எங்கே கிடைப்பதையும் விட விலை குறைவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறார்கள்.
கலை பித்தர்களுக்கு, விலை என்னவானாலும் பரவாயில்லை, பொருள் state of the art என்பதுபோல் இருக்கவேண்டும் (நண்பர்கள் மத்தியில் பீற்றிக்கொள்ளவும் இவர்களில் சிலர் latest என்று வாங்குவார்கள்). இவர்கள் அப்படிப்பட்ட பொருளுக்காக நெடுநாள் காத்திருக்கவும் தயாராக இருப்பர். இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு தீனி போடும் நிறுவனங்கள் – Apple (iPod, iPhone, iMac), Sony (Playstation 1,2,3, PSP), Nokia (மணிக்கொரு மாடல் அலைபேசி – ஆண்மணிக்கும், பெண்மணிக்கும், பர்ஸ் moneyக்கும்)
நேரம் முக்கியமாக நினைக்கும் வாடிக்கையாளர்கள் பொருளின் விலை பற்றியோ, கலை பற்றியோ கவலை கொள்வதில்லை. இவர்கள் அவசர ஜுரம் பிடித்தவர்கள். நினைத்துவிட்டால் சீக்கிரம் இவர்களுக்கு பொருள் கிட்ட வேண்டும். அது இரவு ஒரு மணியானாலும் சரி, விடுமுறை நாளானாலும் சரி. McDonalds மற்றும் சில ஃபாஸ்ட் புட் கடைகள், ரெடிமேட் துணி தயாரிப்பாளர்கள் இந்த வகை வாடிக்கையாளர்களை குறிவைக்கிறார்கள்.
ஆக, சுபிக்ஷாவின் தலைவர், சுப்ரமணியம் இந்தியாவில் வால்மார்ட் போன்ற ஒரு நிறுவனத்தினை உருவாக்க நினைத்த சிந்தனை போற்றப்பட வேண்டியதுதான்.
என் சொந்த அனுபவத்தில், நாங்கள் சுபிக்ஷாவில் ஓரிரு முறையே பொருள் வாங்கியிருக்கிறோம். நாங்கள் பொருளின் தரத்தில் அதிகம் அக்கரை கொள்வதால், எங்களுக்கு சுபிக்ஷா அத்தனை மகிழ்ச்சியான அனுபவம் இல்லை. (நான் கும்பலில் காத்திருந்து, தூக்கமாட்டாமல் தூக்கிவந்து, உஸ்ஸ்ஸ்ஸ்.. என, மனைவி என் வியர்வை காயுமுன், “ஏன்னா, ஒரே புழு, நாம நான்-வெஜ் சாப்பிடறதில்லயே” என்றாள்)
ஆனால், சுபிக்ஷா மருந்து விற்பனையிலும், தீபாவளி சமயத்தில் பட்டாசு விற்பனையிலும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து பெற்றிருந்தார்கள். (அந்த பட்டாசுகள் நன்கு வெடித்தனவா என்பது தெரியாது
)
இதையும் படியுங்கள்
சுபிக்ஷா நிர்வாக இயக்குனர் சுப்ரமணியத்தின் பேட்டி – பிப்ரவரி 2007
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க









ஒரு வாடிக்கையாளர் பார்வையிலிருந்து நீங்கள் சொல்லும் அத்தனை குறைபாடுகளையும் பெரும்பாலானோர் சுபிக்ஷாவில் அனுபவித்தனர். தீபாவளிப் பட்டாசுகள் சுமார்தான். குறிப்பாக 2006-ம் ஆண்டு ஸ்டாண்டார்டு என்று பொய் சொல்லி போலி பட்டாசு விற்று, கோர்ட் கேஸ் என்று போன பிறகு, பட்டாசு வாங்குவதைப் பலர் நிறுத்திவிட்டனர்.
இவற்றைத் தவிர, இவர்களது, Internal Accounts எதுவும் சரியில்லை என வங்கிகள் முத்திரை குத்திவிட்டன. அதுதான் சுப்பிரமணியத்தின் பிரச்சினையே. working capital – என்று எதுவுமே ஆரம்பத்திலிருந்து வைத்துக் கொள்ளவே் இல்லையாம். கூசாமல் பொய் சொல்கிறார்.
கடன் வாங்குவது – கொள்முதல் செய்வது – விற்பனை – மீண்டும் கடன் வாங்குதல்…. அப்படியெனில் விற்பனையானவுடன் அந்தப் பணத்தை சரியாக சப்ளையருக்குக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா…3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை பல சப்ளையருக்கு இவர்கள் பாக்கி வைத்திருக்கிறார்கள். போக்குவரத்துச் செலவைக் கூட ஒழுங்காகத் தராமல் பாக்கி வைத்திருக்கிறார்களாம்… நடைமுறை முதலீட்டில் ஏன் கைவைத்தார்… அந்தத் தவறுக்கு மன்னிப்பே கிடையாது.
நல்ல பதிவு. உங்களின் பதிவை படித்த பிறகு சுபிக்ஷா சுபிக்ஷமாக போகவில்லை என்றாலும் சத்யம் போல பொய்யானது இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல்.
நீங்கள் குறிப்பிட்டது போல் வெளியிலிருந்து பொருட்களை வாங்கும்படி இருந்ததா என்று தெரியவில்லை ஆனால் ஒரு தள்ளுவண்டி இல்லாமை அதை ஒரு பெரிய மளிகைக் கடை போலத்தான் நினைக்க வைத்தது.
எடுத்த இடங்கள் சிறியதாக இருந்ததால் தள்ளுவண்டியின் அவசியம் தெரியவில்லையோ என்னவோ. எல்லா பொருள்களும் இருந்திருந்தாலே அந்த குறை கூட மறைந்திருக்கலாம் என்பது என் கருத்து.
எது எப்படியானாலும், இன்று சுபிக்ஷா நிதிநலக் குறைவினால் இழுத்து மூடப்பட்டுவிட்டது. இது ரிலையென்ஸ் மற்றும் மோர் போன்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.
கரூரில் சுபிக்ஷா தொடங்கி ஒரு வருடம் மட்டுமே இருந்தது. காரணம் வியாபாரக் குறைவு அல்ல. சரியான மேலாளரும் விற்பனையாளர்களும் இல்லாததுதான்.
சுபிக்ஷாவில் பிடித்தது அவர்கள் மாதாமாதம் வெளியிடும் ‘மார்க்கெட்டில் இந்த மாத விலை மற்றும் இலவசங்களின்’ பட்டியல்.
நல்ல குறிக்கோள். உள்ளூர் நிறுவனங்கள் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கித்தவிப்பது துரதிர்ஷ்டம்.
சுபிக்ஷாவோட ப்ராப்ளமே management தான். சொல்லப்போனா இது ஒரு listed company. Shareholders-கு poor management கொடுக்கிறதும் தப்பு தான். customer service சுத்தமா கிடையாது. சத்யம் பெரிய level இது சின்ன level அது தான் difference.
Leave your response!
Thats me
I am just 5 ft 7 inches; so I cannot and do not make any "tall" claims :-)
Archives
Blogroll
Subscribe
Interesting stuff
Recent Posts
Recent Comments
Lucky click! (Click on a word and see what comes up)
Most Commented
Most Viewed